சென்னை: “கல்வி உங்கள் குடும்பத்தையே காப்பாற்றும். நான் இளமையில் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என நினைத்தேன். நான் படிக்கும்போது என்னை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நான் படித்து பட்டம் பெற்றேன்” என நடிகர் முத்துக்காளை பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “எனது குடும்பத்தின் வறுமை காரணமாக என்னால் சிறுவயதில் படிக்க முடியவில்லை. சென்னை வந்து சினிமாவில் ஸ்டண்ட் நடிகரானேன். முதலில் வீரத்தை கற்றுக்கொண்டு, செல்வத்தை சேர்த்து, பின்பு கல்விக்குள் நுழைந்தேன். இதற்காக எனக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதனால், இளைஞர்கள் சரியான காலத்தில் படித்துவிடுங்கள்.
கல்வி என்பது உங்கள் குடும்பத்தையே காப்பாற்றும். நான் இளமையில் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என நினைத்தேன். நான் படிக்கும்போது என்னை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். இந்த வயதில் படித்து என்ன செய்யப்போகிறான் என்றெல்லாம் சொன்னார்கள். இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் படித்து பட்டம் பெற்றேன்.
நான் மதுபானக்கடை வாசலில் படுத்திருப்பது போலவே நிறைய வீடியோக்கள் பரவிக்கொண்டிருக்கிறது. நான் குடியிலிருந்து மீண்டு வந்த 7 வருடங்கள் ஆகிவிட்டன. எந்த சேனலைப் பார்த்தாலும் முத்துக்காளை குடிகாரன் என்கின்றனர். என்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றால், எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். முத்துக்காளை 3 டிகிரி வாங்கிவிட்டாரா என திரும்பி பார்க்கும் அளவில் முயற்சி செய்திருக்கிறேன்.
ஆல்கஹால் குறித்து ஆய்வு செய்யலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் அதில் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன். அடுத்த படிப்பு அதை நோக்கி இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரி மாணவர்கள் பேருந்து, ட்ரெயினில் செல்லும்போது அருவா, கத்தியுடன் வருவது போல நிறைய வீடியோக்களை பார்க்கிறேன். அந்தக் காலத்தில் என்னுடைய தாயிடம் 5 ரூபாய் காசில்லாததால் தான் என் கல்வி பாதிக்கப்பட்டது. கஷ்டப்பட்டு உங்களை கல்லூரியில் சேர்த்திருப்பார். படித்து பட்டத்தை வாங்கி கொடுப்பது தான் நீங்கள் தாய், தந்தைக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். படிக்க வேண்டிய வயதில் நன்றாக படித்துவிடுங்கள். மற்றதெல்லாம் தானாக நடக்கும்” என்றார்.
நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படித்தவர் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 58 வயதாகும் இவர் 3 பட்டங்களைப் பெற்றுள்ளார்.