ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு வலைவீசி தேடப்படும் நபர் ஆகியிருக்கிறார் லாரன்ஸ். அதுவும் சாதாரண லாரன்ஸ் இல்லை… 110 கிலோ தூக்கும் லாரன்ஸ் என்றால் சட்டென்று நினைவுக்கு வந்துவிடுவார்.
ஃபேஸ்புக், ட்விட்டர், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் எனத் திரும்பும் திசையெல்லாம் இவரை வைத்து உருவாக்கப்பட்ட மீம்கள்தான் செம்ம காமெடியாக வைரலாகிக்கொண்டிருக்கின்றன. ‘லாரன்ஸ் தத்துவங்கள்’ என்றே இவரது சீரியஸ் பேச்சுகளை கட் செய்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். ‘இது ஆக்ஷன் மேடம்… இவனுடைய நடவடிக்கைய வெளியில விட்டு பாருங்க… அப்படியே சில்லு சில்லுன்னு நடப்பான்…’ என்பதுதான் இவரது பேச்சிலேயே அதிகம் வைரலாகிக்கொண்டிருக்கும் காட்சி. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வைரலாகி, தேடப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், இவரை வைத்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி நடத்திய இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம்…
“எத்தனை எத்தனையோ குற்றவாளிகளை உட்காரவைத்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலமா பேசியிருக்கேன். படிச்சவங்களவிட படிக்காதவர்களிடம் நிறைய திறமைகள் இருக்கு. ஹ்யூமர் சென்ஸும் இருக்கு. சில பேரு நாலு கொலை பண்ணிட்டு வந்து என் எதிர்ல உட்கார்ந்து கேஷுவலா பேசிக்கிட்டிருப்பாங்க. அவங்கக்கிட்டேயும் ஹ்யூமர் சென்ஸ் இருக்கும். ஒருத்தவங்களை ஒரு கோணத்துல மட்டுமே காண்பிக்காம, அவங்களோட மற்றொரு கோணத்தையும் வெளிப்படுத்த அனுமதிக்கிறோம். அதோட வெளிப்பாடுதான், லாரன்ஸ் மாதிரியான ஆட்கள். ஒவ்வொரு எபிசோடையும் நீங்க எடுத்து பார்த்தாலும் இந்த மாதிரி திறமையானவங்களை நீங்க பார்க்கலாம்.
அன்னைக்கு லாரன்ஸ் வந்தது இப்பவும் ஞாபகத்துல இருக்கு. அவருக்குள்ள அப்படியொரு காமெடி சென்ஸ். அதனாலதான், அவரு பேசினபோதும் ஆக்ஷன் பண்ணினபோதும் அமைதியா இருந்தோம். அந்தத் திறமையும் மக்களுக்குத் தெரியணும்னுதான் அப்படியே ஒளிபரப்பினோம். நாங்க, நினைச்சிருந்தா எடிட் பண்ணியிருக்கலாமில்லையா? ஆனா, அப்படிச் செய்யல. அவரு தப்பு பண்ணிட்டு வந்திருந்தாக்கூட அவரோட திறமையை ரசிச்சோம்.
அதேநேரத்துல, அவருடைய தப்பையும் நியாயப்படுத்தல. அவருக்கு சப்போர்ட்டும் பண்ணல. லாரன்ஸுக்கு இருக்குற திறமைக்கு, சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னைக்கு ஒரு பெரிய காமெடியனா வந்திருப்பாரு. அப்படியொரு திறமையைப் பார்த்தோம். எங்க ஷோவுல கலந்துக்கிறவங்களை வெறும் ஷோ மட்டும் பண்ணிட்டு அப்படியே அனுப்பிடுறதில்ல. அவர்களுடைய தேவைகளையும் வறுமைகளையும் போக்குற உதவிகளையும் செஞ்சுக்கிட்டிருக்கோம்.
குறிப்பா, பெற்றோர், கணவர் எனக் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு எங்க ஷோவுக்கு வர்ற பெண்களுக்கு சுயமா ஏதாவது தொழில் செய்து முன்னேறுவதற்கான உதவிகளையும் நாங்க செஞ்சிக்கிட்டிருக்கோம். அது மட்டும்மில்லாம, அவங்களோட குழந்தைகளைப் படிக்கவைக்கிறது, ஆண்களா இருந்தா ஆட்டோ வாங்கி கொடுக்கிறது, கடைகள் வெச்சு கொடுக்கிறது, வீடு கட்டித் தர்றதுன்னு நிறைய உதவிகளை செய்றோம். ஆனா, லாரன்ஸுக்கு எங்களோட பண உதவி தேவைப்படல. அவர் திருந்தி குடும்பத்தோடு வாழ, ஆலோசனை மட்டுமே தேவைப்பட்டது. பிரிஞ்சு வந்த குடும்பத்தை ஒண்ணு சேர்த்து அனுப்பினதுல எங்களுக்கு ஆறுதல்தான்.
நாங்க, அப்படிச் செய்யலைன்னா லாரன்ஸ் கண்ணனையோ அல்லது கண்ணன் லாரன்ஸையோ ஏதாவது செய்திருப்பாங்க. உயிருக்கு ஆபத்தா முடிஞ்சிருக்கும். ஆனா, நாங்க இரண்டு தரப்பையும் அழைச்சு வெச்சு, எதிர்காலத்துல நடக்க இருந்த ஆபத்தைத் தடுத்துருக்கோம். இரண்டு குடும்பங்கள் மன நிம்மதியோட வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கோம். அதற்குமேல், அவர்களுக்கு எந்த உதவியும் தேவைப்படலங்குறதால லாரன்ஸ் எங்களோட தொடர்பில் இல்லை. அவர் இப்போ என்ன பண்றாரு, எங்க இருக்காருன்னு தெரியல…” என்கிறார் அவர்.
+ There are no comments
Add yours