2023ல் அதிக படங்கள் ; முதலிடத்தில் வரலட்சுமி.. 2ம் இடத்தில் மகிமா நம்பியார்
24 டிச, 2023 – 12:06 IST
2023ம் வருடத்திற்கான திரைப்படங்களின் வெளியீடுகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகளில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழில் வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என நான்கு படங்களிலும், தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட், கோட்டபொம்மாளி என நான்கு படங்களிலும் சேர்த்து மொத்தம் எட்டு படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்தப்படங்களில் எதுவும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கொன்றால் பாவம் படத்தில் மிரட்டலான நடிப்பை வழங்கி பாராட்டுக்களை பெற்றார். அடுத்த வருடங்களில் வெளியாகும் விதமாக இப்போதே அவரது கைவசம் ஆறு படங்கள் இருக்கின்றன.
இந்த வருடத்தில் ஆறு படங்களில் நடித்து இரண்டாவது இடத்தை பிடிக்கிறார் நடிகை மகிமா நம்பியார். இந்த வருட துவக்கத்தில் அவருக்கு இரண்டு படங்கள் வெளியானாலும் கடைசி மூன்று மாதங்களில் இவர் நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஆச்சரியப்படுத்தின. தமிழில் சந்திரமுகி 2, ரத்தம், 800, மற்றும் நாடு உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை, குறிப்பாக இதில் அவர் மிகவும் எதிர்பார்த்த சந்திரமுகி-2 படமும் அவரை கைவிட்டது. அதே சமயம் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் என்கிற படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அவருக்கு அமைந்தது. இது தவிர நாய்களை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த வாலாட்டி என்கிற படத்திலும் நடித்திருந்தார் மகிமா நம்பியார்.
அதேசமயம் முன்னணி நடிகைகளான ஸ்ருதிஹாசன் நான்கு படங்களிலும், நயன்தாரா, திரிஷா ஆகியோர் தலா 3 படங்களிலும், சமந்தா இரண்டு படங்களிலும் மட்டுமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours