Bigg Boss 7 Day 84: ஏமாற்றத்துடன் எவிக்ட்டான `டைட்டில் வின்னர்' விக்ரம்; மாயா செய்த மோசமான செயல்!

Estimated read time 1 min read

விக்ரம் வெளியேற்றப்பட்டார். சண்டையில் கலந்து கொள்ளாதவர். அதிகம் சண்டையில் ஈடுபடாதவர். யார் மனம் புண்பட்டாலும் உடனே முன்சென்று ஆறுதல் சொல்பவர். உண்மையான நட்புணர்ச்சியைக் காட்டியவர். டைட்டில் கனவு கொண்டிருந்தவர். ஆனாலும் விக்ரம் எவிக்ட் ஆனார்.

ஒருவர் நற்பண்புகளைக் கொண்டு அமைதியைக் கடைப்பிடித்தால் அவரை நாம் பலவீனமானவராக, கிரிஞ்ச் ஆசாமியாக பார்க்கிறோமோ என்கிற சந்தேகத்தை பிக் பாஸ் எவிக்ஷன்கள் தொடர்ந்து நிரூபிக்கின்றன. ஆனால் ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. அதனுடன் ஆட்டத்தைப் புரிந்து கொண்ட வல்லவராகவும் இருக்க வேண்டும். விக்ரமின் பெரிய பலவீனமே தன் தனித்தன்மையை இழந்து கூட்டத்தில் கரைந்து போனதுதான். நற்பண்புகளை இழக்காமல் தனியாக நின்று ஆடியிருந்தால் ஒருவேளை அவரது கனவு பலித்திருக்கக்கூடும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“இரு முக்கியமான தலைவர்களை நினைவுகூர வேண்டிய தினம். ஒருவர் மூடநம்பிக்கைக்கு மருத்துவர். இன்னொருவர் பசிக்கு வைத்தியர். பெரியார், எம்.ஜி.ஆர் என்கிற இருவரைப் பற்றித்தான் சொல்கிறேன். மகத்தான தலைவர்கள் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே என்று யாராவது நினைக்கலாம். ஆனால் அவர்களிடம் மனிதாபிமானம் என்கிற ஒரே கட்சிதான் இருந்தது” என்கிற முன்னுரையுடன் வீட்டுக்குள் சென்றார் கமல்.

Bigg Boss 7 Day 84

ரவீனாவின் அம்மா வந்திருந்த அனுபவத்தை விசாரித்து விட்டு, “பேயறைஞ்ச மாதிரின்னு சொல்வாங்க. தாயறைஞ்ச மாதிரி இருந்தார்” என்று மணியைக் கிண்டல் செய்தார் கமல். “ஓகே… உங்க கோல் என்னன்னு தெளிவா சொல்லுங்க. வெளியில் காத்திருக்கும் வாய்ப்பிற்கு பிரசாரமாகவும் இதைப் பயன்படுத்திக்கலாம்” என்றொரு தலைப்பை ஆரம்பித்தார் கமல். போட்டியாளர்களுக்கு இது நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பு.

முதலில் எழுந்த தினேஷ், “ஒரு கேரக்ட்டருக்காக ரொம்பவும் மெனக்கெடுவேன். நீங்க கூட அதைப் பாராட்டியது மகிழ்ச்சி” என்று சொன்னது உண்மையானது. குழந்தை, ஸ்கூல் மாஸ்டர், ரஜினி என்பது போன்ற வேடங்களுக்காக ஒப்பனையிலும் உடல்மொழியிலும் தினேஷ் எடுத்துக் கொண்ட சிரத்தை பாராட்டத்தக்கது. முதல் நபர் சொல்லி முடித்தவுடனே தன் புராணத்தையும் கூடவே ஆரம்பித்தார் கமல். “நான் நடிகனா உருவாகி வரப்ப, பாலசந்தர் என்னைக் கூப்பிட்டு ‘என்ன உன் குறிக்கோள்’ன்னு கேட்டார். ‘உங்களை மாதிரி டைரக்டர் ஆகணும்ன்னு சொன்னேன். போடா முட்டாள். டைரக்டர் எப்ப வேணா ஆகிக்கலாம். நட்சத்திரமா ஆகறதுதான் கஷ்டம்’ன்னார். அப்ப எங்களுக்கு வழி நடத்த ஆள் தேவைப்பட்டது. ஆனா… இப்ப நீங்கள்லாம் ரொம்ப தெளிவா இருக்கீங்க” என்று போட்டியாளர்களைப் பாராட்டினார்.

“உங்க குறிக்கோள் என்ன?” – விசாரித்த கமல்

அடுத்ததாக எழுந்த விக்ரம். “ஆக்டிங்தான் சார். சினிமாதான் என் கனவு. ஆனா சொல்லலாமான்னு தெரியல. உங்களைத் தாண்டி போகணும்” என்று அவர் சொன்ன அடுத்த கணமே “நீங்க சொல்லலைன்னா யாரு சொல்வாங்க?” என்று ஊக்கம் தந்தார் கமல். (ஆனால் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்ததோ?!). டைட்டில் வின்னர், சூப்பர் ஸ்டார் என்று அனைத்தையும் பெரியதாக யோசிக்கும் விக்ரமின் சிந்தனை நன்று. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்றார் பாரதி. Think big என்பது ஆங்கில வாசகம். அந்த நோக்கில் விக்ரமின் கனவுகள் வானத்தில் பறப்பது சந்தோஷம். ஆனால் அதற்கான உழைப்பும் தயாரிப்பும் சிரத்தையும் வேண்டும். வெறுமனே பெரிதாக கனவு கொண்டு உட்கார்ந்திருந்தால் அது நடக்காது.

“தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்கள் சாதிச்சிருக்காங்க. அந்த வரிசையில் நானும் வரணும்ன்னு ஆசையிருக்கு. பாடக்கூட செய்வேன்” என்றார் அர்ச்சனா. இவருடைய முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் அநாயசமாகத் தாண்டவமாடுகின்றன. ‘ஈஸ்வரி’யாகவும் பின்னியெடுத்து விட்டார். ஒரு நல்ல இயக்குநர் கையில் சென்று சேர்ந்தால் சிறந்த நடிகையாக அர்ச்சனா வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அடுத்து எழுந்த விஷ்ணு, “சின்னத்திரையிலேயே 12 வருஷம் தள்ளிட்டேன். வெள்ளித்திரைல வரணும். உங்க கூட ஒரு சீன்லயாவது நடிச்சிடணும். மாயா கூட நடிச்சிட்டாங்க” என்று தயக்கமும் சிரிப்புமாகச் சொல்ல, “ஒரு சீன் போதுமா… விஷ்ணுவை போடக்கூடாதுன்னு எனக்கு வைராக்கியமெல்லாம் இல்லை. அதற்குத் தகுதியிருந்தால் நானே கூப்பிடுவேன்” என்றார் கமல். (ராஜ்கமல் நிறுவனத்தில் ஹீரோவாக நடிக்க ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்ட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனின் மைண்ட் வாய்ஸ் இப்போது என்னவாக இருக்கும்?!)

Bigg Boss 7 Day 84

“ஒரு தரமான பாக்ஸிங் படம் எடுக்கணும்றதுதான் என் கனவு. அதுக்காக பல வருஷம் உழைச்சிட்டு இருக்கேன். ஸ்கிரிப்ட் கூட ரெடி” என்றார் அடுத்து எழுந்த விஜய். ‘விட்டா நம்ம கம்பெனி முன்னாடி க்யூ கட்டிடுவாங்க போலயே’ என்று கமல் நினைத்துக் கொண்டாரோ, என்னவோ ‘திரைக்கதை எழுதறதுக்கு எத்தனை நாள் ஆகுன்னு என்கிட்ட கேட்பாங்க. 7 நாள் ஆகலாம். 7 மாசம் ஆகலாம். 70 மாசம் கூட ஆகலாம். ஹாலிவுட்ல இருக்கற கெட்டிக்கார ஸ்கிரிப்ட் ரைட்டர்களை இங்க கொண்டு வர்ற பிளான் இருக்கு. நமக்கு கத்துக் கொடுக்கறதுக்காக! சைக்கிள் ஓட்டும் போது பின்னாடி பிடிச்சிக்க ஒரு ஆள் வேணுமில்ல. அப்படி! அதுக்கப்புறம் நாமளே ஓட்டிடலாம்” என்றார் கமல்.

சினிமாத்துறையை காட்டமாக விமர்சித்த கமல்

அடுத்த எழுந்த பூர்ணிமா, “வீடியோல்லாம் நிறைய பண்ணியிருக்கேன். ஆனா ஒரு குறிப்பிட்ட வட்டத்துலயே அடைக்கறாங்க. அதில் இருந்து வெளியே வரணும்” என்று ஆதங்கத்துடன் சொல்ல, “அதுக்குண்டான விஷயங்களை பிக் பாஸ் வீட்டில் காட்டியிருக்கீங்களா?” என்று கமல் கேட்டது முக்கியமான கேள்வி. வாய்ப்பு கிடைக்கும் வரையெல்லாம் காத்திருக்காமல், நாமாக அதை உருவாக்கிக் கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினால்தான் வெளியில் உள்ள இயக்குநர்களின் கண்ணில் படும். மாறாக கிண்டல், புறணி, சண்டை என்கிற விஷயங்களிலேயே தங்களின் சக்தியைப் பலரும் செலவழித்து விடுகிறார்கள். இதில் பூர்ணிமாவும் அடக்கம். முத்தழகு கேரக்டரில் கூட இவர் அதிகம் வெளிப்படவில்லை.

அடுத்து எழுந்த விசித்ரா “நூறு படங்கள் மேல பண்ணிட்டேன். ஒரே மாதிரியான கேரக்ட்டர்தான் வருது. கொஞ்ச காலம் கழிச்சு திரும்பி வந்தாலும் அதேதான். ஒரு வட்டத்துல இவங்களா மாட்டி விடறாங்க” என்று அலுத்துக் கொள்ள, சினிமாத்துறையில் உள்ள கிளிஷேத்தனங்களை காட்டமாக ஒரு பிடி பிடித்தார் கமல்.

Bigg Boss 7 Day 84

“இவருக்கு ஒரு கதை இருக்கு. அவருக்கு கதை இருக்குன்னு. ஹீரோக்களுக்காக கதை எழுதற சூழல்தான் இங்க இருக்கு. ‘இப்படியொரு கதை இருக்கு’ன்னு யாரும் வர்றது கிடையாது. முன்ன இருந்த முதலாளிகள் மாதிரி இப்ப இருக்கறவங்க கதை மேல நம்பிக்கை வைக்கறதில்ல. புதிய முதலாளிகள் வரணும். 500 கோடில ஒரே மாதிரியான சினிமாக்கள்தான் வருது. (பார்வையாளர்களை நோக்கி) நல்ல சினிமா பார்க்க உங்களுக்கு ஆசையே இல்லையா, டெய்லி ஒரே உணவை சமைச்சுப் போட்டா அந்த ஹோட்டலுக்குப் போவீங்களா. நான் போக மாட்டேன். சினிமாவின் மாபெரும் ரசிகன் நான். அதனாலதான் வித்தியாசமா படமெடுத்த பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்றவங்களைக் கொண்டாடுகிறேன்” என்று கமல் ஆவேசமாகப் பேசியதில் சொந்த செலவு சூனியம் இருந்தாலும் சினிமா என்னும் கலை மீது உண்மையான மதிப்பும் பிரியமும் கொண்ட ரசிகனின் ஆத்மார்த்தமான உரையாக அது இருந்தது.

மாயாவின் அற்புதமான யோசனை

“நிறைய கதாபாத்திரங்கள் செய்யணும்” என்று சிணுங்கிக் கொண்டே சொன்ன ரவீனாவிடம், “குட். ஆனா ஆசையோட வந்தா மட்டும் போதாது. அதுக்கான பயிற்சி வேணும். போட்டோஷூட் மட்டும் போதாது” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தார் கமல். மாயா எழுந்து, “சந்திரபாபு, நாகேஷ், பஸ்டர் கீட்டன், சார்லி சாப்ளின் காமெடி பார்த்து வளர்ந்தேன். அந்த மாதிரி ஆகணும்ன்றதுதான் என் குறிக்கோள். ஒரு ஸ்கிரிப்ட் எழுதி லோகேஷ் கனகராஜ் கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன். ‘நீ நூறு நாள் இருந்துட்டு வா’ன்னு சொல்லியிருக்காரு” என்று சொல்ல “லோகேஷ் செய்யக்கூடியவர்தான். இப்ப அந்த மாதிரி சிலது பண்ணிட்டிருக்காரு. சினிமா என்பது ஜனநாயக வடிவம். எத்தனையோ துறைகள் பின்னாடி இயங்கிட்டு இருக்கு. எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருது. இந்த ஷோ பின்னாடியும் ஏராளமான பேர் இருக்காங்க” என்றார் கமல்.

“இன்னொரு கதை எழுதி, இங்க இருக்கறவங்களையெல்லாம் அதில் நடிக்க வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு” என்று மாயா சொன்னது ஒரு பிரில்லியண்ட் யோசனை. போட்டியாளர்களின் குணநலன்கள் இந்நேரம் அவருக்கு அத்துப்படியாகி இருக்கும். அனைவரும் இணைந்து ஒரு சினிமா எடுப்பது ஒரு நல்ல யோசனைதான். “சினிமா எடுக்க கோடிகள் எல்லாம் தேவையில்லை. 40 லட்சம். ஏன்… பத்து லட்சத்துல கூட எடுத்துடலாம். பிரமாண்ட படங்கள் தேவைதான். ஆனால் அது மட்டுமே சினிமாவைக் காப்பாற்றாது. சிறிய திரைப்படங்கள் இல்லாமல் இண்ட்ஸ்ட்ரி இயங்க முடியாது. நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமில்லை, சினிமா” என்று சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு ஆதரவாக வெளிப்படையான குரலை கமல் தந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Bigg Boss 7 Day 84

“இதுதான்னு இதுவரைக்கும் எதுவும் பிக்ஸ் ஆகலை. ஆனா நல்ல தமிழ் வரிகள் கொண்ட பாடல்கள் எழுதணும். ராப் பாடல் பாடணும். நடிக்கணும்னு கூட ஆசையிருக்கு…” என்ற நிக்சன். ‘ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் பிறவி கொண்டாய்’ என்கிற தசாவதாரம் திரைப்படத்தின் பாடல் வரியை மேற்கோள் காட்டினார். “ஆமாம். வைரமுத்து ஒரு விளம்பர வரியை வெச்சு அற்புதமா எழுதிட்டாரு. வாலியும் அப்படித்தான். சுயாதீன இசைத்துறை நிறைய வளர்ந்துட்டு வருது. என் பொண்ணு கூட அதைப் பண்றா” என்று நிக்சனை வாழ்த்திய கமல், பிரேக்கில் சென்றார்.

பொறுப்பாக வேலை செய்த தினேஷ் – ஊரைக் கூட்டி உதவி கேட்ட அர்ச்சனா

பிரேக் முடிந்து திரும்பிய கமல், “சென்னை வெள்ள சேதத்தில் இருந்தே நாம் இன்னமும் விடுபடாத சூழலில் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நூறு வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்ட இயற்கை இடர். மழை அரிப்பால் தண்டவாளம் பாதிக்கப்பட்டதை அறிந்து மூன்று ரயில்வே ஊழியர்கள் புயல் மழையிலும் சென்று ரயிலை நிறுத்தி 800 நபர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். நின்ற ரயிலில் மாட்டிக் கொண்ட நபர்களுக்கு அந்த மழையிலும் உணவு கொடுத்து கிராம மக்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். ஒரு பிரச்னையில் காப்பாற்றப் போகிறேன் என்று போய் கூட்டி விடக்கூடாது” என்றார் கமல். (இந்த உரையாடலில் ஏதோவொரு தகவல் பிழை ஏற்பட்டிருக்கலாம் போல. இடையில் கமலின் குரல் தொனி மாறியிருந்தது. பேட்ச் வொர்க் செய்தார்கள் போல!)

வீட்டிற்குள் சென்ற கமல், “இந்த வாரம் கேப்டன்னு யாரும் இல்ல. எல்லோரும் இந்நாட்டு மன்னரா இருந்தீங்க. வீட்ல அதிக பொறுப்பா இருந்தது யாரு… இல்லாம இருந்தது யாரு?” என்ற கேள்வியை முன்வைக்க, சொல்லி வைத்தது போல் அனைவருமே தினேஷை நோக்கி “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்பது போல் கைகாட்டியது சிறப்பானது. “பார்த்து வேலை செய். பார்த்தவுடனே வேலை செய்யாதே” என்று அருணாச்சலம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அது போல் கேமராவிற்காக வேலை செய்யாமல் ‘கருமமே கண்ணாயினார்’ போல வீட்டுப் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த தினேஷிற்கு ஸ்பெஷல் பாராட்டு. (தினேஷ் இயல்பிலேயே இப்படிதானா? அல்லது நடிப்பா?)

Bigg Boss 7 Day 84

தினேஷிற்கு நேர்மாறான பெயர் அர்ச்சனாவிற்கு கிடைத்தது. வேலைகைளைத் தட்டிக் கழிப்பது மட்டுமன்றி, ஒரு வேலை செய்யப் போனால் அதற்கு ஊரே உதவி செய்ய வேண்டும் என்பது போல் அனைவருக்கும் ஏதாவது ஒன்று சொல்கிறாராம். (இதற்கு கமல் சொன்ன உதாரணம் ரகளையானது) “எட்டு தக்காளி வெட்டிட்டேன்னு சொல்லிக் காட்றாங்க சார்” என்று சிரித்தார் விஜய். அர்ச்சனா இதற்காக சங்கடமான சிரிப்பைத் தந்தாலும் நேர்மையாக ஒப்புக் கொண்டது நன்று. “வந்திருந்த விருந்தினர்களைக் கவனிப்பதில் உற்சாகமாக இருந்தேன்” என்று கூடவே சமாளித்தார். பொறுப்பில்லாமல் இருந்த லிஸ்ட்டில் மாயாவின் பெயரும் சிலமுறை வந்தது. அவரும் வெட்கமில்லாமல் ஒப்புக் கொண்டார். தினேஷிற்கு வலதுகரமாக நிர்வாகம் செய்த விஜய்யின் சேவை பாராட்டப்பட்டது.

கமலின் தலை மறைந்ததும் “எத்தனை முறை நான் உப்புமா பண்ணிக் கொடுத்திருக்கேன். யாராவது சொன்னீங்களா?” என்று அர்ச்சனா சிணுங்க, “அந்த உப்புமாவை நீ பண்ணி முடிக்கறதுக்குள்ளே ஊரே வந்து ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கு. ஒரு ஆள் வேலையை பத்து ஆள் வெச்சு செய்ய வைக்கறே. புரியுதா” என்று எடுத்துரைத்தார் விசித்ரா. (‘தள்ளு… தள்ளு…’ என்று பேருந்தின் பின்னால் நின்று கைகளை மட்டும் அசைப்பவரின் காமெடி காட்சிதான் நினைவிற்கு வருகிறது!).

கேம் பத்தியே சிந்தனை செய்கிற விஷ்ணு

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “ஃப்ரீஸ்… லூப் ஆட்டம் விளையாடினீங்க. அதை வெச்சே இந்த டாஸ்க்கையும் செய்வோம். இத்தனை வாரம் நீங்க பார்த்ததுல, மென்ட்டலி யாரு இங்க ஃப்ரீஸ் ஆகியிருக்காங்க. ஒரே செயலைச் செஞ்சு லூப் பண்றாங்க” என்கிற கேள்வியை கேட்டார். முதலில் எழுந்த விஷ்ணு தயங்கி மயங்கி, “வாரத்துல மூணு சண்டையாவது போட்ருவாங்க சார். அதையே ஒரு பழக்கமா வெச்சிருக்காங்க” என்று சொல்ல ‘ஏண்டா டேய்’ என்கிற மாதிரி பார்த்தார் விசித்ரா. “அப்படில்லாம் நான் பிக்ஸ் பண்ணி எதையும் பண்றதில்லை” என்று பிறகு மறுத்தார்.

Bigg Boss 7 Day 84

ரவீனாவின் குழந்தைத்தனத்தை லூப்பில் உதாரணம் காட்டிய தினேஷ், விக்ரமை ஃப்ரீஸ் ஆகியிருப்பதாகச் சொல்ல பார்வையாளர்களின் கைத்தட்டல் கேட்டது. “சண்டை. சமாதானம்ன்னு லூப்ல இருப்பான்” என்று நிக்சனை உதாரணம் காட்டினார் விக்ரம். “வாரத்துல முதல் சில நாள்கள் சண்டை, வார இறுதியில் சமாதானம்ன்னு ஒரு டெக்னிக்கைச் செய்தார்” என்று விஷ்ணுவை விக்ரம் சுட்டிக் காட்டியது ஒரு நல்ல அப்சர்வேஷன்.

“திடீர்னு போர்வைக்கு உள்ளே புகுந்து ‘இந்த வாரம் யார் போவா’ன்னு கேட்பான் சார். எப்பப்பாரு கேம் பத்தியே யோசிச்சு உயிரை வாங்குவான்” என்று விஷ்ணு பற்றி மணி சொல்ல கமல் உட்பட எல்லோரும் சிரித்தார்கள். இதே செல்லமான புகாரை பலரும் சொல்ல விஷ்ணு பெருமிதமும் சங்கடமும் கலந்து சிரித்தார். “இத்தனை வாரமா விக்ரம் ஃப்ரீஸ்ல இருந்தாரு. கெஸ்ட் வந்து போனவுடன் புரிதல் வந்து அவர்கிட்ட மாற்றம் தெரியுது.” என்ற அர்ச்சனா, லூப்பில் மாட்டியிருப்பதாக மாயா, பூர்ணிமா கூட்டணியைச் சொன்னது நல்ல உதாரணம். “எவ்ளோ அடி வாங்கினாலும் கேமிற்காக எதையாவது பண்ணிட்டே இருக்கறது மாயாதான்” என்றார் விஜய். “இது லூப்பில்தானே வரும்?” என்று இரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை சுட்டிக் காட்டினார் கமல்.

கடைசியில் எழுந்த நிக்சன், விஷ்ணுவின் மீது புகார் சொல்லி “எப்பப் பாரு கேம் பத்தியே விசாரிப்பாரு. இந்த வாரம் யார் போவா, கமல் பசியோட இருப்பாரா, டயட்ல இருப்பாரான்னு… இதே ரோதனையா போச்சு” என்று சலித்துக் கொள்ள வாய் விட்டு சிரித்தார் கமல்.

Bigg Boss 7 Day 84

“ஓகே… அடுத்த எவிக்ஷன் யாருன்னு தெரிஞ்சுக்க விஷ்ணு ஆவலா இருப்பார். ஒரு பிரேக் முடிஞ்சு சொல்றேன்” என்று கிளம்பினார் கமல். முடித்து வந்ததும் “நாமினேஷன்ல இருக்கிற மூணு பேரில் யார் இங்கு தொடர்வதற்கான தகுதியைக் கொண்டவர்ன்னு நெனக்கறீங்க?” என்று கேள்வியை வித்தியாசமாக முன்வைத்தார். இதில் பலரும் விக்ரமிற்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முன்வைத்தார்கள். “கண்டிப்பா விசித்ரா என் கூட ஃபைனலில் நிக்கணும்” என்று சொல்லி அதிர வைத்தார் மாயா. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ‘நான் பைனலுக்குச் செல்வேன்’ என்கிற தன்னம்பிக்கை. அப்படியே விசித்ராவிற்கும் ஐஸ்.

விக்ரம் எவிக்ஷன் – சகிக்க முடியாத மாயாவின் உடல்மொழி

“ஓகே… யாரு கிளம்பறான்னு பார்த்துடலாம்” என்று கார்டை நீட்டினார் கமல். யார் தொடர வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டார்களோ, அவருடைய பெயர் அதில் இருந்தது. ‘விக்ரம்’. அவருடைய முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. டைட்டில் வின்னராக ஆசைப்பட்டவரின் கனவு க்ளைமாக்ஸிற்கு முன்னதாகவே முடிவது ஒரு பலத்த அடிதான். அந்த ஏமாற்றத்தை ஜீரணித்துக் கொண்டு எழுந்த விக்ரமை அனைவரும் இரக்கத்தோடு பார்த்தார்கள். ஒருவரைத் தவிர!

Bigg Boss 7 Day 84

ஆம், அது மாயா. விக்ரமின் சகோதரி சொன்ன கமெண்ட்டுகளுக்காக மாயா மனம் புண்பட்டிருக்கிறார். விக்ரமின் மீது கோபமாக இருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது. ஆனால் அவர் எவிக்ட் ஆகி செல்கிற நேரத்திலாவது அத்தனையையும் ஒதுக்கி விட்டு புன்னகையுடன் வழியனுப்பியிருக்கலாம். மாறாகக் கூட்டத்திலிருந்து மாயா ஒதுங்கி நின்றார். விக்ரம் தன் பெயரைச் சொன்ன போது முகம் சுளித்தார். இப்படிப்பட்ட உடல்மொழி அவர் மீதான மதிப்பைக் குறைத்து அருவருப்பை ஏற்படுத்தியது. பொய்யாக நடிக்காமல் இருந்த அவரது நேர்மையைப் பாராட்டலாம்தான். ஆனால் அனைத்திற்கு இடம், பொருள், ஏவல் உண்டு. இந்தச் சமயத்திலும் மாயா தனது வெறுப்பைக் காட்டியது ரசிக்கத்தக்கதாக இல்லை. “உன்கிட்ட இருக்கும் கருணைத்தன்மையை அதிகமாக வெளிக்காட்டு” என்று மாயாவின் உறவினர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவேன் என்று வாக்கு தந்திருந்த மாயா, இது போன்ற வன்ம வெளிப்பாட்டில் செயல்படுவது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

என்றாலும் மாயாவின் பெயரை குறிப்பிட்டு விடைபெற்றுச் சென்றார் விக்ரம். விக்ரமின் காதில் பூர்ணிமா ரகசியம் பேசினார். மாயாவின் தரப்பு பிரச்னையை சொல்லி புரிய வைப்பதற்கான முயற்சி போல. இந்தச் சமயத்தில் மெயின் டோர் திறக்க, மாயா வெளியில் எட்டிப் பார்க்க, அதைத் தடுத்து நிறுத்திய பிக் பாஸ் ‘இனி இப்படிச் செய்யாதீர்கள்’ என்று எச்சரித்தார்.

அம்பேத்கர் – இன்றும் என்றும்

அரங்கிற்கு வந்த கமல் புத்தகப் பரிந்துரையை ஆரம்பித்தார். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்திய புத்தகம் முக்கியமானது. ‘அம்பேத்கர் இன்றும் – என்றும்’ – “அம்பேத்கர் ஏராளமாக எழுதியிருக்கிறார். அவர் எழுதிய கட்டுரைகளின் கோப்பு இது. இதைப் படிச்சா போதும். உங்களுக்குள்ள ஒரு கொக்கி விழுந்துடும். தொடர்ந்து தேட ஆரம்பிச்சிடுவீங்க. இதில் வரும் கருத்துகள் பிடிக்கலைன்னாலும் கூட படிக்கத் தோன்றும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது”.

அம்பேத்கர் – இன்றும் என்றும்

பிறகு அந்த நூலைப் பார்வையாளர்களிடம் காட்டிய கமல், “மற்ற நூல்களை இதுவரை வெறும் வாய்மொழியினால் பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால் ஏன் இந்த நூலை மட்டும் என் கையோடு கொண்டு வந்திருக்கிறேன் என்றால் இது அடிக்கடி நான் கையில் எடுத்துப் படிக்கும் நூல். சமூகம் மீதான சந்தோஷம், கோபம், ஆதங்கம் என்று எது தோன்றினாலும் அதற்கான பதில்கள் இதில் கிடைக்கும். இந்த நூல் சிலருக்குப் பிடிக்காது. மிகச் சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காது. பரவாயில்லை. அது சிறிய கூட்டம். மனிதனைச் சுரண்ட நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சாதி. அவங்க ஏன் காதலை வெறுக்கிறார்கள் என்றால் அதனால் ஏற்றத்தாழ்வு அடிபடும். ஊரைப் பிரிக்க முடியாது. சாதியச் சுரண்டலை தாண்டும் வழி, காதல்… ஆதலினால் காதல் செய்வீர்” என்று புத்தகப் பரிந்துரையை முடித்துக் கொண்டார் கமல்.

மேடைக்கு வந்த விக்ரமிடம் “ஃபைனல் ஸ்பீச் வரை ரெடி பண்ணி தயாரா இருந்தீங்க. எங்க தப்பா போச்சு?” என்று விசாரித்தார் கமல். “நிறைய இடங்கள்ல பேசாம இருந்துட்டேன் சார். இந்த ஷோவில் உண்மையா இருந்தேன்” என்றவரிடம் “அது மட்டும் போதுமா? ஓகே. இந்த அனுபவம் உங்க வெளியுலக வாழ்க்கைக்கு நிச்சயம் பயன்படும்” என்று ஆறுதல் சொன்னார் கமல். விக்ரமின் பயண வீடியோவில் ‘டைட்டில் வின்னர்’ என்று தனக்குத்தானே பேசிக் கொள்ளும் காட்சியை சிரித்தபடி பார்த்தார் விக்ரம். பிறகு அகம் டிவி வழியாக உள்ளே சென்று “யாராவது அழுது தொலைங்களேண்டா… வீடியோ பார்த்தேன். அர்ச்சனா கூடத்தான் அதிகமா சண்டை போட்டிருக்கேன் போல. மத்தவங்க கூடயும் போட்டிருந்தா… இந்நேரம்..” என்று சொல்லி விக்ரம் நிறுத்த, ஒட்டுமொத்த சபையும் அந்த நகைச்சுவையை ரசித்து சிரித்தார்கள்.

பிறகு கமலிடம் “இன்னமும் கூட என்னால இதை ஒத்துக்க முடியலைங்க” என்று ஆதங்கத்துடன் சொன்ன விக்ரமைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. “ஆனா இதுவும் ஒருவகையில் உதவும். இப்ப வெளில போய் பெரிசா ஏதும் சாதிக்கணும்னு தோணுது. முன்ன சொன்ன மாதிரி உங்களைத் தாண்டனும். ‘உத்தம வில்லன்’ படத்துல நீங்களும் மகன் கேரக்ட்டரும் நடிச்ச காட்சியை பல முறை பார்த்திருக்கேன். உங்க கூட சேர்ந்து நடிச்சே ஆகணும்” என்று விக்ரம் அழிச்சாட்டியமாகக் கேட்க “சான்ஸ் கேட்க கெட்டிக்காரத்தனமான வழியா இருக்கே” என்று சிரித்த கமல் “எனக்கு மேல இருக்கற இடம் காலிதான். அதுக்கு மேல நீதான் போகணும். உங்களின் எண்ணம் ஈடேறட்டும்” என்று வாழ்த்தி விடை தந்தார். மீண்டும் வீடு இருக்கும் திசை வழியாக சென்று காமெடி செய்த விக்ரம், பிறகு கிளம்பினார்.

Bigg Boss 7 Day 84

விக்ரமை வழியனுப்பும் நேரத்தில் மாயா காட்டிய பாராமுகம், வெறுப்பு போன்றவற்றை மணி ஆதங்கத்துடன் சொல்ல, விஷ்ணு அதை ஆமோதித்தார். ஆக, வீட்டின் எண்ணிக்கை சுருங்கிக் கொண்டே வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியும் நெருங்குகிறது. கடைசிக் கட்டத்திலாவது விறுவிறுப்பும் சுவாரசியமும் அதிகரிக்கிறதா என்று பார்ப்போம்.

இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று முழு மனதுடன் யாரையும் உற்சாகமாகச் சொல்ல முடியவில்லை. என்றாலும் அதற்கான தகுதியும் சாத்தியமும் அதிகமிருப்பதாக யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours