சென்னை: கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.
வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன. கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (டிச.23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது உறவனினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.