லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனு ரன்தாவா (டாப்ஸி) அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் புக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பாலி கக்கார் (அனில் குரோவர்) ஆகியோருடன் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்காது. அதனால் பஞ்சாப்பில் இருக்கும் தங்கள் நண்பர் ஹார்டி என்ற ஹர்தயாள் சிங் தில்லானுக்கு (ஷாருக்கான்) ஃபோன் செய்கிறார் மனு. அவர், அவர்களைத் துபாய் வரச் சொல்கிறார். அவர்கள் அங்குச் சென்றார்களா? பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு ஏன் விசா வழங்கவில்லை? அவர்கள் லண்டன் சென்றது எப்படி? அவர்கள் ஃபோன் செய்து அழைத்த ஹார்டி யார்? என்பதற்கு விடை சொல்கிறது மீதி படம்.
வெளிநாட்டு மாயையில் சட்டவிரோதமாக நாடு கடப்பவர்களின் உயிர் வலி பயணத்தை வேதனையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சொந்த நாட்டு சுகத்தை எந்த நாடும் தராது என்பதை ஆணி அடித்த மாதிரி பதிவு செய்திருக்கிறார், ‘டங்கி’யில். ஐந்து வருடத்துக்குப் பிறகு படம் இயக்கியிருக்கும் ஹிரானி, தனது ‘சிக்னேச்சர் ஸ்டைலை’ இதிலும் தொடர்கிறார் .
பெருங்கனவோடு இங்கிலாந்து செல்வதற்கான நேர்மையான வழிகளில், முக்கிய கதாபாத்திரங்கள் தோற்ற பிறகு, அவர்கள் வேறு வழியைத் தேர்வு செய்கிறார்கள். சட்டவிரோதமான அந்த வழி, பெரும் வலி நிறைந்தது என்பதை உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. இவ்வளவு வலி கடந்தாலும் அங்கு, தாங்கள் கனவு கண்ட வாழ்க்கை இல்லை எனும் போது, இத்தனை போராட்டமும் வீணாகித் தவிக்கிற வாழ்வையும் அழகாகக் கடத்துகிறது படம்.
ஆங்கிலம் கற்பதில் ஆரம்பித்து, விசா பெற முன்னணி கதாபாத்திரங்கள் போராடுவது வரை முதல் பாதி காமெடியாகவும் எமோஷனலாகவும் நகர்கிறது. ‘நீங்க ஒரு சப்ஜெட் கொடுங்க, 2 நிமிஷம் இங்கிலீஷ்ல எப்படி பேசறேன்னு மட்டும் பாருங்க’ என்று ஒவ்வொருவரும் ஒரே சப்ஜெக்ட்டை பேசும் அந்த இடம் மொத்த தியேட்டரும் குபீர் சிரிப்பில் திணறுகிறது.
தனக்காக லண்டனில் காத்திருக்கும் காதலியைக் காண விசாவுக்கு ஏங்கும் விக்கி கவுசல் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொண்டதும் கதையில் பற்றிக்கொள்கிறது, பரபரப்பு. உயிரை பணயம் வைத்து, நாடு கடந்து லண்டன் மண்ணை மிதித்ததும் அவர்கள் படும் மகிழ்ச்சியும் உற்சாகமும் போலீஸில் அகப்படும் அடுத்த நொடியே தவிடுபொடியாகும்போது அத்தனை யதார்த்தம். இரண்டாம் பாதி திரைக்கதையில் கண்ணீர் விட பல காட்சிகள் இருந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதை, படம் நீளமாக இருக்கும் உணர்வைத் தந்துவிடுகிறது. கிளைமாக்ஸ் முடிந்ததும் சட்டவிரோதமாக நாடு கடந்தவர்களின் உண்மை நிலையை புகைப்படங்களாகக் காண்பிக்கும்போது பரிதாபம் அள்ளுகிறது.
ஹார்டியாக ஷாருக்கான் இயல்பான நடிப்பால் ஈர்த்தாலும் மொத்தப் படத்தையும் தன் தோளில் சுமக்கிறார், டாப்ஸி. அதனால் தான் டைட்டில் கிரெடிட்டில் அவர் பெயரையே முதலில் போடுகிறார்கள் என்று தோன்றுகிறது. பரோட்டா செய்வது எப்படி என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தடுமாறும் இடம் உட்பட ஒவ்வொரு இடத்திலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் அவர். சிறப்புத் தோற்றம் என்றாலும் விக்கி கவுசல் மிரட்டி விடுகிறார். ஆங்கில ஆசிரியர் போமன் இரானி, நண்பர்கள் விக்ரம் கோச்சர், அனில் குரோவர் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பைத் தந்துள்ளனர்.
‘வெள்ளைக்காரன் இந்தியா வரும்போது, ஒனக்கு இந்தி தெரியுமா, கிராமர் தெரியுமா?ன்னு நாம கேட்டோமா?’ என்பது உட்பட பல வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. சி.கே.முரளிதரன், மனுஷ்நந்தன், அமித்ராய், குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவும் பிரீத்தமின் பாடல்களும் அமன் பந்தின் பின்னணி இசையும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கின்றன.
பணக்காரர்களுக்கு ஒரு விதமாகச் செயல்படும் நாடுகள், ஏழைகளின் விசா விஷயத்தில் எப்படி நடந்துகொள்கின்றன என்பதைச் சொல்லி இருக்கும் ராஜ்குமார் ஹிரானி அதில் இருக்கும் சட்டச்சிக்கல்களையும் தெளிவாக விளக்கி இருக்கலாம். அவரின் முந்தைய படங்களான ‘3 இடியட்ஸ்’, ‘பி.கே’தந்த பாதிப்பைத் தரவில்லை என்றாலும் ‘டங்கி’நிறைவான உணர்வைத் தருகிறது.