ஆன்ட்டி ஹீரோ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கெஸ்ட்டாக வந்திருந்த ஆன்ட்டியால் ஹீரோவாக ஆகி விட்டார் மணி.
ஆம், இந்த அனுதாபத்தின் மூலம் அவரது கடந்தகால பிழைகள் மங்கி அவர் மீது ஒரு தனிப்பட்ட பிரியமே பார்வையாளர்களுக்கு வந்திருக்கும். ‘Last but not least’ மாதிரி விசித்ராவின் குடும்பத்தினர் இன்று கடைசியாக வந்ததில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
சோர்வாக படுத்திருந்த மணிக்கு விஷ்ணு ஆறுதல் சொன்னார். “ஏண்டா.. இப்படி மூஞ்சை தூக்கி வெச்சிட்டிருக்க. இப்படி இருந்தா கேம் ஆட முடியாது. ரொம்ப யோசிக்காத. நீ நீயா இரு. பேசாம இருக்கறதுல்லாம் வேண்டாம்” என்று அவர் சொல்ல “காலைல சரியாயிடும். பேசவே கூடாதுன்ற மாதிரி அவங்க சொல்லிட்டாங்க. அவங்க அம்மா வந்திருந்தா இது நடந்திருக்காது. இஷ்டத்திற்கு பேசிட்டாங்க. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பெரிசு பண்ணிட்டாங்க” என்றெல்லாம் மணி ஆதங்கப்பட்டார்.
அடுத்த நாள் ரவீனா பேசும் போது “எங்க அம்மா வந்திருந்தா, இதை விடவும் டபுள் மடங்கா கேட்டிருப்பாங்க” என்று உண்மையை உடைத்தார். இது மணியின் யூகத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது. ரவீனாவின் அம்மா, ஏன் அவரே வராமல் இன்னொருவரை தன்னுடைய பிரதிநிதியாக அனுப்பியிருந்தார்? இதுவொரு நல்ல டெக்னிக். தான் சொல்ல வேண்டியதையெல்லாம் இன்னொருவரிடம் மூலம் சொல்லி அதில் வரும் சங்கடங்களில் இருந்து தப்பித்து விடலாம் என்பதாக இருக்கும். இந்த விஷயத்தில் ரவீனாவை விடவும் அவரது அம்மா பயங்கர கில்லாடி என்றல்லவா ஆகி விடுகிறது?!
“எங்க அம்மா வந்திருந்தா டபுள் மடங்கா கேட்டிருப்பாங்க”
“நீங்க இந்த கேமிற்கு வருவீங்கன்னு எங்களுக்கு முதல்ல தெரியாது” என்பது வந்திருந்த கெஸ்ட் சொன்னது. எனில். முன்பே ஏதோவொன்று இதில் புகைய ஆரம்பித்திருக்கலாம். ரவீனாவின் வளர்ச்சி கருதி அவர்கள் மௌனமாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அது பிக் பாஸில் வீடியோ காட்சிகளாக வெளிப்பட்டதும் சகிக்க முடியவில்லை என்பதாக யூகிக்க முடிகிறது. ‘எங்க அம்மா டபுள் மடங்கா கேட்பாங்க’ என்று சொல்லத் தெரிந்த ரவீனாவிற்கு ஏன் அது குறித்து மணியை எச்சரித்து தள்ளி நின்று விளையாட முடியவில்லை? ‘ரவீனா அம்மா பற்றி எனக்கு நல்லாத் தெரியும்’ என்கிற மணியால், ‘அவர் கடுமையாக ஆட்சேபிப்பார்’ என்பதை எவ்வாறு யூகிக்க முடியாமல் போயிற்று?
எப்படியோ, மணி மற்றும் ரவீனாவால் பரஸ்பரம் அவர்களின் ஆட்டம் பாழ்படுகிறது என்பதை பல காட்சிகளில் பார்த்து விட்டோம். இரண்டு தரப்புகளிலுமே பிழைகள் இருக்கின்றன. இந்த நோக்கில் வந்திருந்த விருந்தினர் சொன்னதெல்லாம் பெரும்பாலும் சரியானதுதான். ஆனால் அவர் சொன்ன விதம்தான் அராஜகமாக இருந்தது.
நாள் 82. தூங்கி எழுந்து படுக்கையில் இருந்து இறங்காமலேயே மாயாவும் பூர்ணிமாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “நமக்குள்ள இருக்கற உறவை வெளியில் இருந்து வந்தவங்க உடைச்சிட்டாங்க. இது முதிர்ச்சியற்ற அணுகுமுறை. இந்த விஷயத்தில் எங்க அம்மாவும் அக்காவும் சூப்பர்” என்று மாயா சொல்ல “ஆம். ஆட்டத்தை டிஸ்டர்ப் செய்யாம போயிருக்கலாம்” என்றார் பூர்ணிமா. “விக்ரமோட தங்கச்சில்லாம் ரொம்ப பண்ணிட்டாங்க. இந்த வாரம் அவன் போயிட்டா என்னவாகும்? மொக்கை வாங்கிடுவாங்க. இதுக்கப்புறம் அவன் எனக்கு பிரெண்டே இல்லை” என்று மாயா ஆத்திரப்பட “சரி.. அவன் கேமை ஆடிட்டுப் போகட்டும்’ என்று விக்ரம் மீதான சாஃப்ட் கார்னர் குறையாமல் பேசிக் கொண்டிருந்தார் பூர்ணிமா.
“உன் கேமை நீ ஆடு. தப்போ, ரைட்டோ.. நீயே முடிவெடுன்னு சொன்னாங்க” என்று தன் விருந்தினர் சொன்னதை ரவீனா சொல்ல “நான் எப்ப உனக்காக முடிவெடுத்திருக்கேன்?. குண்டுப்பையான்னு சொன்னதை திட்றாங்களா.. பத்துமுறை கூட சொல்வேன்.. உன் மோதிரத்தை வாங்கி பங்களாவா கட்டப் போறேன். இதெல்லாம் தப்பா போகும்ன்னு தெரியும்” என்றெல்லாம் அனத்தலைத் தொடர்ந்தார் மணி. “என் மோதிரத்தை வேணா தரவா?” என்று இடையில் புகுந்து விக்ரம் ஜோக் அடிக்க “யப்பா. சாமி.. மோதிரமே வேணாம். ஆள விடு” என்று நொந்து போய் பேசினார் மணி.
விக்ரமின் தங்கை சொல்லி விட்டுச் சென்ற விஷயங்களுக்காகவோ, என்னவோ, மாயா தனிமையில் ரகசியமாக அழுது கொண்டிருந்தார். பாடல் ஒலிக்க விஜய்யின் அண்ணன் வந்தார். “என்னங்க பார்த்தாலே பயமா இருக்கு” என்று அவரது திடகாத்திரமான உடலைப் பார்த்து பாவனையாக நடுங்கினார் பூர்ணிமா. அடுத்ததாக வந்தவர் நிக்சனின் நண்பர். தனது அப்பா வரும் போது தயங்கித் தயங்கி சென்ற நிக்சன், இப்போதோ உற்சாகத்துடன் ஓடிச் சென்று நண்பரை ஆரத்தழுவிக் கொண்டார். நண்பர்கள் தரும் வைப்ரேஷனே தனிதான்.
பூர்ணிமா வழக்கம் போல் தயங்கி மயங்கி நிற்பதைப் பார்த்து “என்ன ஃப்ரீஸ்ல இருக்கீங்களா?” என்று வந்தவர் அடித்த கமெண்ட் அருமை. அதை மாயா ரசித்து சிரித்தார். “உங்க பிளேல்லாம் பார்த்திருக்கேன்” என்று அவரிடம் சொல்லி ஆச்சரியப்படுத்திய நிக்சனின் நண்பர், “என்னோட இடத்துல இருந்து நிக்சனை பார்த்துக்கிட்டீங்க.. டான்ஸ்ல ஸ்பேஸ் கொடுத்தது. விஜய்க்கு 5 ஸ்டார் கொடுத்தது. எல்லாம் சூப்பர்” என்று விஜய்யைப் பாராட்டினார்.
‘பம்பரக்கட்டை மண்டையா’ – விஷ்ணுவை ஜாலியாக அழைத்த பூர்ணிமா
“ஏன் இப்படி என்னை வெயிட் பண்ண வைக்கறாங்க.. எனக்குத்தானே மொதல்ல வந்திருக்கணும்?” என்று தன் குடும்பத்தார் இன்னமும் வராதது பற்றி விசித்ரா வருத்தப்பட, “நீங்க ஸ்பெஷல்” என்று ஆறுதல் சொன்னார் மணி.
பிறகு நடந்ததெல்லாம் ஜாலியான கலாட்டா. ஃப்ரீஸ், ரிலீஸ் டாஸ்க்கில் நிகழும் வழக்கமான நகைச்சுவையெல்லாம் நடந்தன. ‘பம்பரக்கட்டை மண்டையா’ என்று விஷ்ணுவை பூர்ணிமா கிண்டலடிக்க அதை லூப் செய்ய வைத்தார் பிக் பாஸ். விஷ்ணுவை ஃப்ரீஸ் செய்ய அவருக்கு பூ வைத்து பொட்டு வைத்து அலங்காரம் செய்தார்கள். அந்தச் சமயத்தில் கிச்சன் ஏரியாவில் இருந்த குரங்கு பொம்மையைக் காட்டி குறும்பு செய்தது பிக் பாஸ் காமிரா.
“விசித்ராவைத் தவிர எல்லோரும் ரிலீஸ்” என்று பிக் பாஸ் அறிவிக்க அப்போதே தெரிந்து போயிற்று, அவரது குடும்பத்தினர் வரப்போகிறார்கள் என்று. விசித்ராவின் முகம் உணர்ச்சிக்கலவையாக மாறிற்று. மணி துள்ளிக் குதித்தார். ரவீனா ஓடி வந்து முத்தம் கொடுத்தார். பாடல் ஒலிக்க உள்ளே வந்தவர் விசித்ராவின் கணவர் ஷாஜி. மற்ற விருந்தினர்கள் பற்றி நமக்கு யாரென்று முன்பே தெரியாது. ஆனால் இவரோ உள்ளே வருவதற்கு முன்பே ஹீரோவாகி பிரபலமாகி விட்டிருந்தார். கமல் இவரைத் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். எனவே பார்வையாளர்களுக்கும் எதிர்பார்ப்பு நிச்சயம் இருந்திருக்கும்.
தொலைவில் தெரிந்த கணவரை ஃப்ரீஸ் நிலையில் பார்த்துக் கொண்டிருந்த விசித்ராவின் முகத்தில் ‘முதல் மரியாதை’ திரைப்பட ராதா மாதிரியான எக்ஸ்பிரஷன்கள் தாண்டவமாடின. எப்போது உள்ளே வருவார் என்று காத்துக் கொண்டிருந்தவர், ஓடிச் சென்று கட்டியணைத்து கதறியழ “அழமாட்டேன்னு சொன்னீங்களே” என்று மற்றவர்கள் கிண்டலடித்தார்கள். “பசங்க எங்கே” என்று விசித்ரா தவிப்புடன் கேட்க “எக்ஸாம் இருக்குல்ல. எப்படி வர முடியும்?”என்று சமாளித்தார் ஷாஜி. அப்போதே தெரிந்து போயிற்று. அதற்குப் பின்னால் ஏதோவொரு டிராமா இருக்கிறதென்று. பொதுவாக கணவர்களுக்கு திறமையாக பொய் சொல்ல வராது.
விசித்ராவின் அன்பான குடும்பத்தின் காட்சிகள்
விசித்ராவும் ஷாஜியும் தங்களின் அந்நியோன்யத்தை விதம் விதமான வார்த்தைகளில், முகபாவங்களில், உடல்மொழிகளில் வெளிப்படுத்தியது பார்க்க நன்றாக இருந்தது. ‘Our home missing the queen’ என்று விசித்ராவைப் பெருமைப்படுத்தும் விதமாக பேசினார் ஷாஜி. இவ்வாறு பேசினால் குடும்பத்தலைவிகளுக்கு மிகவும் பிடிக்கும். காலையில் இரண்டாவது காஃபி கூட கிடைக்கும்.
“எக்ஸாமிற்கு மட்டம் போட வெச்சு பசங்களை கூட்டிட்டு வர வேண்டியதுதானே?” என்று விசித்ரா சிணுங்க “மம்மி மாதிரியா இவ பேசறா?” என்று கிண்டலடித்தார் ஷாஜி. இருவரும் தனிமையில் பேச ஆரம்பிக்கும் போது நந்தி மாதிரி உள்ளே புகுந்த பிக் பாஸ் “விசித்ரா கன்ஃபெஷன் ரூமிற்கு வாங்க” என்று அழைத்தார். ஒரு டாஸ்க் லெட்டரை வாசிக்க வைத்து அதை பொதுவில் வாசிக்கச் சொன்னார். இதையெல்லாம் வைத்தே விசித்ரா யூகித்திருக்கலாம். அல்லது இந்த ‘கன்டென்ட்’ டிராமாவிற்கு அவரும் தன்னிச்சையாக ஒத்துழைத்தாரோ, என்னமோ.
இந்த இடைவெளில் விசித்ராவின் லட்டு, குட்டு, ரோஹன் ஆகிய மூவரும் ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே வந்தார்கள். அவர்களை இதர போட்டியாளர்களின் நடுவில் அமர வைத்தது ஒரு நல்ல ஐடியா. கூட்டமாக அமர்ந்திருக்கும் போது நமக்கு நெருக்கமானவர்களை சட்டென்று அடையாளம் தெரியாது. டாஸ்க் லெட்டரை சலிப்பான முகத்துடன் எடுத்து வந்து வாசிக்க ஆரம்பித்த விசித்ரா, ஒரு கணத்தில் கூட்டத்தில் நடுவே அமர்ந்திருந்த தனது மகன்களைக் கண்டு ஆச்சரியத்தில் வாய்பிளந்தது ஒரு க்யூட் மோமெண்ட்.
பாய்ந்து சென்று மூவரையும் கட்டியணைத்துக் கொண்டு வட்டமாக நின்று அவர்கள் பாசத்தைப் பரிமாறிக் கொள்ள ‘நானு. நானு.’ என்பது போல் அதன் உள்ளே புகுந்தார் ஷாஜி. வழக்கத்திற்கு மாறாக “எங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்க மாட்டீங்களா?” என்று பிக் பாஸ் குறும்பு செய்ய, தனது பெயரைச் சொல்வதற்கு மிகவும் தயங்கினான் கடைசிப் பையன். பிறகு அவர்களின் செல்லப் பெயர்களை வைத்தே பிக் பாஸ் வரவேற்றது குறும்பான காட்சி.
‘நாமினேஷன் முடிஞ்சவுடன் சண்டை போடணும். அதான் டெக்னிக்”
கணவரை வெளியே அமர வைத்து விட்டு மூன்று மகன்களையும் ஒன்றாக பக்கத்தி்ல் அமர வைத்து விசித்ரா பேசிக் கொண்டிருந்த காட்சிகள் சுவாரசியமாக இருந்தன. ‘ஸ்லிம் ஆயிட்டிங்க மம்மி’ என்று மூத்த பையன் கிண்டலடிக்க “நீங்க வெளிய பிரியாணி.. பிஸ்ஸான்னு வெளுத்துக் கட்டியிருப்பீங்களே” என்று பதிலுக்கு கலாய்த்தார் விசித்ரா. ‘அட.. இங்க பாரேன். இவனுக்கு மீசை முளைக்க ஆரம்பிச்சிடுச்சு’ என்று நடுவனை கொஞ்சியதும் க்யூட் ஆன காட்சி. “நாமினேஷன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏதாச்சும் பிரச்சினை பண்ணிடறீங்க. அது முடிஞ்சப்புறம் பண்ணா கூட ஓகே” என்று தாய்க்கே பிக் பாஸ் பாடம் சொல்லித் தந்தான், மூத்த மகன்.
பிறகு நடந்தது ஒரு நகைச்சுவை கலாட்டா. சரியான சமயத்தில் என்ட்ரி தந்த ஸ்மால் பாஸ் ‘என்ன விச்சு.. எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா என் கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே. இப்பச் சொல்லுங்க” என்று குறும்பு செய்ய அசட்டுச் சிரிப்புடன் ‘லவ் யூ ஸோ மச்’ என்று விசித்ரா சொல்ல, ஷாஜியின் முகத்தில் சங்கடமான சிரிப்பு. “சரி. சரி. எனக்கு சொல்ல வேணாம். உங்க ஹஸ்பெண்டுக்கு சொல்லுங்க” என்று சொல்லி கலாசாரத்தைக் காப்பாற்றினார் ஸ்மால் பாஸ். ‘அவர் மேல வெச்சிருக்கிறது பெரிய லவ்” என்று கணவரை நெருங்கி விசித்ரா கட்டியணைக்க, இடையில் மாட்டிக் கொண்ட பெரிய பையன் ‘அய்யோ. என் கை போச்சு’ என்று கையை உதறியது ஒரு நடைமுறை காமெடி.
வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் விடை பெற்றுக் கொண்டார்கள். ஒரு விளம்பர டாஸ்க் முடிந்த இரவு உணவு நடந்தது. சாப்பிட்டு முடித்ததும் மணியும் ரவீனாவும் மட்டும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்கள். (அடேய். இன்னமும் போகலையா நீ! – ஆன்ட்டியின் மைண்ட் வாய்ஸ்!) “நான் யாருன்னு உனக்குத் தெரியும். எப்படியெல்லாம் என்னைப் பேசினாங்க தெரியுமா. பிரச்சினை வரக்கூடாதுன்னு எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். நான் ஏதாவது பதிலுக்குப் பேசியிருந்தா என்னவாகியிருக்கும்?” என்றெல்லாம் மணி புலம்ப “என் ஃபேமிலி சைட்ல இருந்து அப்படித்தான் பேசுவாங்க. என்ன செய்ய?” என்பது மாதிரி ஆறுதல் சொன்னார் ரவீனா. (தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து!).
“மாயா வேணும்ன்ட்டே பண்றாங்க..” என்று விஷ்ணு கோபப்பட ‘அதான் பச்சையா தெரியுதே. நீ உன் கேமை ஆடு” என்று ஆறுதல் சொன்னார் மணி. எதிலாவது மாட்டிக் கொள்ளும் இருவரும் பரஸ்பரம் ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். நாட்கள் அதிகமாக அதிகமாக போட்டியாளர்களுக்குள் இணக்கமும் நட்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பிக் பாஸ் இடையில் புகுந்து குட்டையைப் குழப்பினால் மறுபடியும் ஏதாவது கலவரம் நிகழலாம். அதிலும் கடைசிக் கட்டத்தில் நிகழும் டாஸ்க்குகள் போட்டி மனப்பான்மையை அதிகரிக்கும்.
இன்று விசாரணை நாள். ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ தவிர பேசுவதற்கு ஒன்றுமில்லை. அதிலும் ரவீனா விவகாரம் மட்டும்தான் சற்று சர்ச்சையாகி இருக்கிறது. கமல் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
+ There are no comments
Add yours