குழந்தையை வைத்து மணி ஆறுதல் தேடிய அற்புதமான காட்சி
பிறகு நடந்தது ஒரு கவித்துவமான காட்சி. அண்ணனின் மகளை முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுவதின் மூலம் தன்னுடைய சோகத்தைக் கரைத்துக் கொள்ள மணி முயற்சித்தார். (வாங்கிய அடி அப்படி!) அப்போது ரவீனா அங்கு வர, மணிக்கு தன்னிச்சையாக கண்கள் கலங்கியதும், அதைச் சமாளித்துக் கொண்டு ‘அவங்களுக்கு முத்தம் கொடு’ என்று குழந்தையிடம் கேட்டுக் கொண்டதும் எந்தவொரு திரைப்படத்திலும் வர முடியாத இயல்பான காட்சி. மணியின் மீது எந்தவொரு விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் அப்படியே அடித்துக் கொண்டு போகுமளவிற்கான சோக உணர்வு மணியிடம் தத்ரூபமாக வெளிப்பட்டது.
இன்னொரு பக்கம் மாயாவும் என்ன காரணத்தினாலோ சோகமாக இருந்தார். ‘என் இடம் இது இல்ல. நான் வெளில போகணும்” என்று மூட் அப்செட் ஆகி அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய உறவினர்கள் பாசிட்டிவ்வாக ஊக்கப்படுத்தினாலும் வெளியில் இருக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து மெலிதாக சொல்லி எச்சரிக்கை செய்திருப்பார்களோ, என்னமோ! ‘நீதானே.. சொன்னே. ஒரு பூ பூக்கும்ன்னு. அதனால்தான் நானும் பூ வெச்சிட்டு வந்தேன்” என்று அதை எடுத்து மாயாவின் கைகளில் அவரது அம்மா கொடுத்தது ஒரு நல்ல காட்சி.
மணி மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரின் விருந்தினர்களின் குழந்தையும் வீடெங்கும் ஓடி விளையாடி சூழலையே மாற்றி விட்டார்கள். அவர்களைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. குழந்தைகளிடம் உடனே நெருக்கமாகிப் பழகி விடுவது ஒரு கலை. அது அர்ச்சனாவிடம் நிறைய இருக்கிறது. “மக்கள் மனசுலயும் இடம் பிடிக்கணும்.. பார்த்துக்க” என்பது போல் மெலிதாக எச்சரிக்கை செய்தார் பூர்ணிமாவின் உறவினர். “நான் இங்க இருக்கறவங்களை கன்வின்ஸ் பண்றது பத்திதான் யோசிக்கறேன். வெளில காமிரால பார்ப்பாங்கன்றதே தோண மாட்டேங்குது” என்று பூர்ணிமா குழம்ப ஆரம்பித்தார்.
“நான் கிளம்பி போனப்புறம் தனியா போய் உக்கார்ற பழக்கத்தை விட்டுடு. உன்னைப் பத்தி பின்னால பேசறாங்க. மாயாதான்.. இவனுக்கெல்லாம் ஃபைவ் ஸ்டாரான்னு சொல்றாங்க.. பூர்ணிமா பரவாயில்ல. உனக்கு சப்போர்ட் பண்ணி பேசறாங்க” என்று விக்ரமிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவரது தங்கை.
ரவீனாவை கட்டுப்படுத்த முயற்சித்தது உள்ளிட்டு பல புகார்கள் மணி மீது இருப்பது உண்மைதான். ஆனால் இருவரையும் தனியாக அமர வைத்து இதமான குரலில் குறைகளை அவர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்னமும் கேட்டால் இந்த ஆட்டத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு அதைப் பற்றி தன்னுடைய உறவினர், இதர போட்டியாளர்களிடம் எதையுமே பேசாமல் ‘இது அவர்களின் ஆட்டம். அவர்களே ஆடட்டும்’ என்று அப்படியே விட்டு விட்டு வெறும் பாசிட்டிவ் அலைவரிசையை மட்டுமே தந்து விட்டு வருவதுதான் அடிப்படையான புரிதலும் நாகரிகமும். அந்த தூரத்திற்கு எல்லாம் நாம் நகர்ந்து விட்டோமா, என்ன?!
ரவீனாவின் விருந்தினர் பேசிய கடுமையான முறையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கமெண்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours