விஷாலின் 20 வருட கரியரில் மிக முக்கியமான படம் மட்டுமல்ல, இயக்குநர் லிங்குசாமிக்கும் பாராட்டுகளைக் குவித்த படம். அப்படிப்பட்ட மிரட்டல் அதிரடி படமான, ‘சண்டக்கோழி’ வெளியாகி 18 வருடங்கள் ஆவதையொட்டி, அப்படத்தின் தயாரிப்பாளரும் விஷாலின் அப்பாவுமான ஜி.கே ரெட்டியிடம் பேசினேன்…
“எனக்கு சினிமாவில் சாதிக்கணும்ங்குற பிடிவாதமும் திமிரும் உண்டு. பிசினஸ் பண்ணிக்கிட்டே படம் தயாரிக்கவும் ஆரம்பிச்சேன். எல்லா மொழியிலும் சினிமாத்துறையினரின் நட்புவட்டம் அதிகமாச்சு. என் மூத்த மகன் விக்கி பன்னிரண்டாம் வகுப்பும் விஷால் பத்தாம் வகுப்பும் படிச்சிட்டிருந்தாங்க. ரெண்டு பேருக்குமே அப்போ சினிமா ஆர்வமே கிடையாது. ஆனாலும், ரெண்டு பசங்கள்ல யாராவது ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அவங்க அம்மாவுக்கு விக்கியைத்தான் ஹீரோவாக்கணும்னு ஆசை இருந்துச்சு. அதனால, விக்கியை ஹீரோவா நடிக்குற படத்துல நீங்கதான் அப்பாவா நடிக்கணும்னு முதலில் சிவாஜி கணேசன் சார்கிட்ட கால் ஷீட் கேட்டேன். அவரும் உடனே கொடுத்துட்டார். அந்தப் படம்தான் ’பூப்பறிக்க வருகிறோம்.’
அதற்கடுத்து எடுத்த இரண்டாவது படமும் பெரிசா ஓடல. அதனால, என் மனைவி உங்க பணத்தை வீணாக்காதீங்க. விஷாலை வெச்சு முயற்சி பண்ணுங்கன்னு சொன்னாங்க. ஆனா, விஷாலுக்கு பிசினஸ் பண்ணுறதுலதான் ஆர்வம் இருந்தது.
பிசினஸ் விஷயமா எங்க போனாலும் ‘எங்க போறீங்க டாடி, நானும் கூட வர்றேன்’ அப்படின்னு ஆர்வமா என்கூட வர முயற்சி பண்ணுவான். என்கூட அவன் வரும்போதும், கறுப்பா களையா இருக்கானேன்னு நிறைய பேரு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அப்படிச் சொன்னது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
+ There are no comments
Add yours