தென் மாவட்ட மழையிலும் அமைதி காக்கும் ‘டாப்’ நடிகர்கள்
20 டிச, 2023 – 11:01 IST
இயற்கைப் பேரிடரான மழை, வெள்ளம் வந்தாலே டாப் நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது வழக்கம். சினிமாவில் மக்களுக்காக உழைக்கிறோம் என்ற வீர வசனம் பேசி அரசியலில் இறங்க உள்ள தங்களது ஆசையை சிலர் வெளிப்படுத்துவதால்தான் இந்த கேள்வி வருகிறது. தங்கள் மக்களின் துயரங்களில் பங்கெடுக்கிறோம் என்று முந்தைய காலங்களில் இயற்கைப் பேரிடர் வந்த போது முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கோடிகள் வரையிலும் கொட்டிக் கொடுத்தார்கள்.
ஆனால், இந்த வருடத்தில் மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்ட போது சில நடிகர்கள் மட்டுமே சில லட்சங்களை நிவாரண நிதியாக வழங்கினார்கள். டாப் நடிகர்கள் பலரும் அமைதி காத்து வருகிறார்கள். தற்போது தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்ட போதும் கூட அவர்கள் அமைதியாகவே இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நாங்களும் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்கு சில இடங்களில் மட்டும் அவர்களது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த சிலரை ஓரிரு உதவிகளைச் செய்ய வைத்து அதை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டதோடு அவர்கள் நிவாரண உதவியை முடித்துக் கொண்டுள்ளனர்.
சில நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ போடுவதுடன் தங்களது சேவையை முடித்துக் கொள்கின்றனர். டாப் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தமிழகத்தில் மழை வெள்ளம் வந்துள்ளது என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என்ற நிலையில் எதையுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.
அண்டை மாநிலங்களில் இயற்கைப் பேரிடர் வந்த போது கூட அவர்களின் துயரைத் துடைக்க உதவி செய்த இந்த டாப் நடிகர்கள் தங்களது சொந்த மாநில மக்களின் துயரத்தில் பெருமளவில் பங்கு கொள்ளாதது ஏன் ?. சினிமாவில் பேசும் ‘பன்ச்’ வசனங்களை நிஜ வாழ்க்கையில், காட்டாமல் ஒதுங்கிப் போவது ஏன் ?, என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
+ There are no comments
Add yours