திரைப்பட விழாக்களின் நடிகராக மாறிய சூரி
20 டிச, 2023 – 11:49 IST
நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை யாரோ ஒருவர் சரியாகக் கண்டுபிடித்து ஒரு நாள் வெளிக் கொண்டு வருவார்கள். டிவியில் நடித்து, துணை நடிகராக சினிமாவில் நுழைந்து, நகைச்சுவை நடிகராக மாறி, பின் கதாநாயகனாகவும் வளர்ந்துள்ளவர் சூரி.
அவர் கதையின் நாயகனாக நடித்து இந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை பார்ட் 1’ அவரிடமிருந்த நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்தது. அப்படி அவரிடமிருந்த திறமையை வெளிக் கொண்டு வந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். ‘விடுதலை’ படம் ஏற்கெனவே பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட நிலையில் சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு முன்பே திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் பெருமையைப் பெற்றுள்ளது.
மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் சூரியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம் இயக்கத்தில் யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் அஞ்சலி. இப்படம் 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற உள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு போட்டியிடுகிறது.
சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலகத் திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகி உள்ள முதல் தமிழ்ப படம் என்ற பெருமையைப் பெறுகிறது. ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒரு நடிகராக சூரிக்குக் கிடைத்துள்ள பெருமை இது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
+ There are no comments
Add yours