போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி, ஒவ்வொரு சீசனிலும் ஆவலுடன் எதிர்பார்ப்பது ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ இந்த எபிசோடில் அதுதான் நடைபெற்றது.
ஒவ்வொரு பெற்றோராக வரவழைத்து சில மணி நேரங்களில் அவர்களை திருப்பி அனுப்பி விடுவதுதான் இதுவரையான வழக்கம். ஆனால் இந்த முறை சிலரின் பெற்றோர்கள் நீண்ட நேரம் இருந்து கலந்துரையாடியது நல்ல அம்சம்.
இந்த டாஸ்க்கில் வழக்கமான சென்டிமென்ட் அழுகாச்சியெல்லாம் பெரிதாக இல்லாமல் பெற்றோர்கள் மிக இயல்பாக உரையாடியது சுவாரசியம். பிள்ளைகளின் நண்பர்களுடன் எவ்வாறு உரையாடுவது, இணக்கமாகக் காட்டிக் கொள்வது, பழகுவது என்பது ஒவ்வொரு பெற்றோரும் கற்றுக் கொள்ள வேண்டிய கலை. அந்த வகையில் இன்று வந்த அனைவருமே நிறைவான அனுபவத்தைத் தந்தார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
காலையிலேயே போட்டியாளர்களிடம் ‘ஃப்ரீஸ்’ சொல்லி வார்ம்-அப் செய்தார் பிக் பாஸ். அப்போதே அவர்களுக்குப் புரிந்து போயிற்று. அர்ச்சனா அழுவதற்குத் தயாராகி விட்டார். உதடுகள் அப்போதே துடிக்க ஆரம்பித்து விட்டன. யாராவது வருவார்களோ என்று பார்த்தால் இல்லை. ‘ஓ டிரைலரா?” என்று சிரித்தார் தினேஷ். ‘எங்க அப்பா, அம்மாவைப் பார்க்கப் போறேன்’ என்று சொன்ன அர்ச்சனாவின் குரல் திடீரென்று குழந்தையைப் போல் மாறியிருந்தது.
மாயா ஏதோவொரு ஒப்பனையில் இருந்தார். அது குடுகுடுப்பைக்காரர் போலவும் இருந்தது. ஆனால் பாரதியார் பாடல்களையும் அவர் சொன்னதால் சற்று குழப்பம் ஏற்பட்டது. ‘குட்மார்னிங்’ என்கிற பிக் பாஸின் உற்சாகமான குரல் கேட்டது. அவரும் இன்றைக்குத்தான் தன்னுடைய பெற்றோரைக் காணவிருக்கிறாரா என்று தெரியவில்லை.
“என்ன நடக்கப் போகுதுன்னு உங்களுக்குத் தெரியும். இன்று அவரவர்களின் குடும்பத்து அங்கத்தினர்களை சந்திக்கப் போகிறீர்கள். ஒரே குடும்பத்தின் வெவ்வேறு அங்கத்தினர்கள் வெவ்வேறு நேரங்களில் வரலாம். இந்த வாரம் முழுக்கவே இந்தச் சந்திப்புகள் நிகழும்” என்று அறிவிப்பு வரவே போட்டியாளர்கள் உற்சாகமானார்கள். (காஃபி பொடி பாக்கெட் நிறைய அனுப்பும் போதே லைட்டா சந்தேகம் வந்தது!) “எங்க குடும்பத்துல மொத்தமே மூணு பேர்தானே?” என்றார் மணி.
உணர்ச்சிகரமான குடும்பச் சந்திப்புகள்
காலை 11.00 மணி. ‘ஃப்ரீஸ்’ என்று அறிவித்தார் பிக் பாஸ். ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ என்கிற பாடல் ஒலித்தது. ‘தங்களின் அம்மாவோ?’ என்கிற ஆர்வமும் ஏக்கமும் பால்வாடி பிள்ளைகளைப் போல் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. ரவீனா அழுவதற்கான முன்னேற்பாடுகளுடன் இருந்தார். வந்தது பூர்ணிமாவின் அம்மா. (உஷா நந்தினி). சம்பிரதாயப்படி வேகமாக ஓடிப் போய் கட்டிக் கொள்ளாமல் சோபாவின் பின்னால் ஒளிந்து விளையாடினார் பூர்ணிமா. “என் செல்லக்குட்டி’ என்றழைத்து அம்மா முத்த மழையாகப் பொழிய “ஏன் அழுவுற?” என்று சிரித்தபடி கேட்டார் பூர்ணிமா.
பல குடும்பங்களில் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக இங்குள்ள கலாசாரமே அப்படித்தான். ஆனால் உள்ளுக்குள் அத்தனையையும் ஒளித்து வைத்திருப்பார்கள். பிரிவு போன்ற சமயங்களில் இவை பீறிட்டுக் கொண்டு வரும். ஆனால் அந்த சமயங்களில் கூட சென்டிமென்ட் அதிகம் காட்டாதவர்களும் உண்டு. பூர்ணிமா அந்த வகை போலிருக்கிறது. எனவே இயல்பாக இருந்தார். அம்மா – மகள் பாசமழையைக் கண்டு மாயா விசிலடித்தார்.
உறைந்து நின்றிருந்த விஷ்ணுவின் பக்கம் தன் அம்மா செல்வதைக் கண்டு ‘இந்தப் பக்கம் வா’ என்று பூர்ணிமா இழுத்துச் சென்றது ஒரு சுவாரசியமான காட்சி. தன் மகளின் நெருங்கிய தோழியான மாயாவைக் கட்டிக் கொண்டார் உஷா. “ஸாரி மேம். என் மகள் உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா” என்று விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வந்திருந்த அனைவருமே விசித்ராவிற்கு மூத்த நபர் என்கிற மரியாதையைத் தந்தார்கள்.
அர்ச்சனாவை தனது அம்மா பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியத்தில் பூர்ணிமாவின் முகத்தில் உணர்ச்சிகள் தாண்டவமாடின. பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் அனைவரையுமே தங்களின் பிள்ளைகளாகவே கருதத் துவங்கி விடுவார்கள். “நீங்க அழலையா?” என்று பூர்ணிமாவிடம் ஆச்சரியத்துடன் விசாரித்தார் அர்ச்சனா.
குறும்பாக உரையாடிய பூர்ணிமாவின் அம்மா
“நேர்ல எல்லோரும் இன்னமும் அழகா இருக்கீங்க” என்றார் உஷா. பிறகு மாயாவுடனான தனி உரையாடலில் ‘தண்ணி தெளித்து விட்டு விட்டேன்’ என்று பூர்ணிமாவை நோக்கி கை காண்பித்தது ஒரு அழகான குறும்பு. பூர்ணிமாவின் அராத்துதனம் எங்கிருந்து வருகிறது என்பது புரிகிறது. “நான் உன்னை எப்படில்லாம் வளர்த்தேன்.. ஒழுங்கா நடந்துக்கோ” என்று பதிலுக்கு குறும்பு செய்தார் பூர்ணிமா.
“விஷ்ணு.. இங்க வர்றதுக்கு கூச்சப்படறான்” என்று அவரை ஜாலியாக கோர்த்து விட்டார் மணி. “ஹிஹி.. நான் ஏன் கூச்சப்படறேன்..” என்று வந்த விஷ்ணு, அங்கிருந்த சோபாவில் ஓரமாக ஒண்டி அமர்ந்து கொண்டார். பருத்தி வீரன் போஸில் விஷ்ணு கோட்டை விட்ட சான்ஸை மணி எடுத்துக் கொடுக்க உஷா உள்ளிட்ட அனைவரும் சிரித்தார்கள். “வீட்ல பூர்ணிமாவும் அவ அண்ணனும் இப்படித்தான் சண்டை போட்டுட்டே இருப்பாங்க. விஷ்ணுவைப் பார்க்கறப்ப அப்படித்தான் இருக்குது” என்று சொல்லி, இத்தனை நாட்களாக விஷ்ணு கட்டிக் கொண்டிருந்த கோட்டையை ஒரே நொடியில் அடித்து வீழ்த்தினார் உஷா. என்ன இருந்தாலும் சீனியர் இல்லையா? அதுவும் பெண்ணைப் பெற்ற அம்மாவும் கூட. எனவே மிக நுட்பமான தாக்குதல்.
“ஓஹோ.. அப்படின்னா.. விஷ்ணுவும் பூர்ணிமாவும் அண்ணன் தங்கச்சின்றீங்களா?” என்று மற்றவர்களும் சொல்லி கோட்டையை முழுதாக உடைப்பதற்கு உதவி செய்தார்கள். மாயாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பிறகு பூர்ணிமாவும் அவரது அம்மாவும் தனியாகப் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் மிக இயல்பாகவே பேசினார் உஷா. “ரொம்ப நல்லாத்தான் பண்றே.. ரொம்ப லெங்க்த்தா இல்லாம.. போராடிக்காம சுருக்கமா பேசு. இந்த வாரம்லாம் நல்லா பண்ண” என்று அம்மா சொல்ல ‘அவ்ளோ சத்தமாவா கேக்குது?’ என்றார் பூர்ணிமா. “உன் திறமையை வெளிப்படுத்து. முத்தழகு கேரக்டர்ல உன் நடிப்புத் திறமையை நல்லா காட்டியிருக்கலாம்” என்று உஷா சொன்னது மிகச் சரியானது. அர்ச்சனா அசத்தியதில் நூற்றில் பத்து பங்கு கூட பூர்ணிமா செய்யவில்லை.
“மாயா எப்படி?” என்று போட்டி மனப்பான்மையோடு விசாரித்தார் பூர்ணிமா. “ஜீன்ஸ் பாட்டுக்கு நீ ஆடினது ரொம்ப நல்லா இருந்தது” என்று மாயாவைப் பாராட்டிய போது பூர்ணிமாவிற்கு உள்ளே ஜெர்க் ஆகியிருக்க வேண்டும். “பூர்ணிமா கிட்ட நிறைய சண்டை போட்டிருக்கன்ல.. அதான் என் மேல கோபமா இருப்பாங்க” என்று விஷ்ணு சங்கடத்துடன் சொல்ல “அதெல்லாம் இது கேமுன்னு எல்லோருக்கும் தெரியும். அவங்க கேஷூவலாத்தான் இருக்காங்க” என்றார் தினேஷ். ‘நீங்க நெனக்கறது ஒரு நாள் நடக்கும் ப்ரோ” என்று அர்ச்சனா ஆறுதல் சொல்ல “வாட்.. நான்சென்ஸ்” என்றார் விஷ்ணு. (அதான் கோட்டையை தரைமட்டமா இடிச்சுட்டாங்களே!).
தாவி ஓடிய கன்னுக்குட்டி அர்ச்சனா
பிக் பாஸ் ‘ஃப்ரீஸ்’ என்று அறிவிக்க, இன்னொரு விருந்தினர் வரப்போகிறார் என்பது தெரிந்தது. அனைவரும் உறைந்து நிற்க “யாராவது பாடுங்க’ என்று பிக் பாஸ் சொல்லியிருப்பார் போல. ‘காட்டுப்பயல’ என்கிற பாடலை அருமையாகவே பாடினார் அர்ச்சனா. உடனே ‘வாயாடி பெத்த புள்ள’ என்கிற பாடல் கேட்டது. அப்போது அர்ச்சனாவிடம் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சி நடனங்களையெல்லாம் குறும்படமாக தொகுத்தால் அத்தனை சுவாரசியமாக இருக்கும்!
உள்ளே வந்தது அர்ச்சனாவின் பெற்றோரான ஜெயந்தியும் ரவிச்சந்திரனும். அவர்களைப் பார்த்தவுடனே கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடுகிற கன்னுக்குட்டி போல மற்றவர்களை இடித்துக் கொண்டு வெளியே பாய்ந்தார் அர்ச்சனா. அவர் முதலில் யாரைச் சென்று இறுக்கமாக கட்டிக் கொண்டார் என்பதில் இருந்து மகள்களைப் பெற்ற தகப்பன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியும். ஆம், தனது தந்தையைத்தான் முதலில் கட்டிக் கொண்டார். பிறகு தன் அம்மாவையும் இறுக்கமாக கட்டிக் கொண்ட அர்ச்சனா, “உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கலங்கினார். ‘எங்க அம்மாப்பா.. வந்திருக்காங்க” என்று மற்றவர்களிடம் சொன்ன போது அர்ச்சனாவிடம் மழலையின் தொனி வந்திருந்தது.
“நான் உங்களோட பெரிய ஃபேன்” என்று மாயாவிடம் சொன்னார் ரவிச்சந்திரன். “தமிழ்ல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க” என்று தன் அப்பா பற்றி அர்ச்சனா பெருமையாகச் சொல்ல “நான் இங்க தமிழாசிரியரா வரலை” என்று உடனே அதை தடுத்தார். ‘நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” என்று அர்ச்சனாவின் பெற்றோருக்கு ஐஸ் வைத்தார் ரவீனா. “நான் வந்தப்ப நீ இதைச் சொல்லவேயில்லையே?” என்று குறும்பாக கேட்டார் உஷா. தன்னுடைய மகளுக்கு பாதுகாவலராக இருந்த விசித்ராவிற்கு சிறப்பு நன்றியைச் சொன்னார் ரவிச்சந்திரன்.
“அடைபட்ட சூழல்ல மைண்ட் வித்தியாசமாத்தான் யோசிக்கும். சூழல்தான் காரணம். ‘இங்க குழாயைத் திறந்தா ரத்தம்தான் வரும்’ன்ற மாதிரில்லாம் கிடையாது. நீங்க எல்லோருமே நல்லா டீசன்ட்டாதான் ஆடறீங்க” என்று பொதுவாகப் பாராட்டிய ரவிச்சந்திரன், “பொம்மை டாஸ்க்ல ஏதாவது பாசிட்டிவ்வா சொல்லியிருக்கலாம். அந்தச் சமயத்துல அவ மைண்ட் அப்படியிருந்தது போல. இப்ப தெளிவாயிட்டா” என்று அர்ச்சனா செய்த தவறுக்காக விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டார்.
விக்ரம் மற்றும் நிக்சனின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய அர்ச்சனாவின் தந்தை
அடுத்ததாக விக்ரமிடம் வந்தவர் “ஒருத்தருக்கு மனிதாபிமானம் நிச்சயமா வேணும். ஒருத்தர் கஷ்டத்துல இருக்கும் போது ஆறுதல் சொல்லலைன்னாலும் பரவாயில்லை. கூடுதலா கஷ்டம் தரக்கூடாது. நீங்க நல்ல பையன்தான். ஆனா அர்ச்சனா அழுதிட்டு இருக்கும் போது நீங்களும் அக்ஷயாவும் சேர்ந்து பின்னாடி ஒழுங்கு காட்டினீங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு” என்று வருத்தப்பட்டார் ரவிச்சந்திரன். “நான் சும்மா ஜாலிக்குத்தான்” என்று சங்கடமான சிரிப்புடன் மன்னிப்பு கேட்டார் விக்ரம். ‘அது எந்தச் சம்பவம்?’ என்று நினைவில் இல்லாத முகபாவம்தான் அவரிடம் தெரிந்தது.
‘சூழல்தான் இங்கு மனிதர்களை இயக்குகிறது’ என்பதைப் புரிந்து வைத்திருக்கும் ரவிச்சந்திரன், ஒரு தகப்பனின் நிலையில் யோசிக்கும் போது தன்னிச்சையாக சுயநலமாகி விடுவது இயல்புதான். அந்தச் சமயத்தில் வடிவேலு மாதிரி ‘அவ்வ்வ்வ்வ்’ என்று விக்ரம் ஒழுங்கு காட்டிய நினைவிருக்கிறது. அது தவறுதான். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மற்றவர்களோடு ஒப்பிடும் போது விக்ரம் மற்றவர்களின் மனதைப் புண்படுத்த மாட்டார். மாறாக புண்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதில்தான் முன்னால் நிற்பார்.
அடுத்ததாக நிக்சனின் பக்கம் சென்ற ரவிச்சந்திரன். “நிக்சனும் ரொம்ப நல்ல பையன்தான். ஆனா கோபம்தான்.. அதைக் கண்ட்ரோல் பண்ணிக்கணும். ‘நானா இருந்தா குழந்தைலயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னு இருப்பேன்’ன்னு நீங்க அர்ச்சனா பற்றி சொன்னது மனசுக்கு வேதனையா இருந்தது தம்பி” என்ற அதிகம் உறுத்தாமல் சொல்ல “என்னது!. நான் சொன்னேனா.. ஏதாவது டாஸ்க்லயா?” என்று எதுவும் நினைவிற்கு வராமல் பயங்கர அதிர்ச்சி அடைந்தார் நிக்சன். எந்தவொரு பெற்றோருக்கும் அது வேதனை தரக்கூடிய வார்த்தைகள்தான்.
ஒரே வீட்டில் இருந்தாலும் பல சம்பவங்களை போட்டியாளர்களே மறந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. காட்சி வழியாகப் பார்ப்பதால் நமக்கு மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ஒருவகையில் மறதிதான் நமக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரிய சௌகரியம். அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் மூளைதான் குழம்பும். நிக்சன் சொன்னது நிச்சயம் தவறுதான். ஆனால் சூழல்தான் ஒருவரை நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் இயக்குகிறது.
‘நீ டைட்டில் வின்னரா வர்ற சான்ஸ் இருக்கு’ – விக்ரமின் அம்மா
‘ஒரேயொரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா.’ என்கிற பாடல் அடுத்ததாக ஒலிக்க விக்ரமின் பெற்றோர், (சரோஜினி, கதிரேசன்) ‘யய்யா.. நல்லாயிருக்கியாய்யா’ என்று கிராமத்து மொழி வாசனையுடன் உள்ளே நுழைந்தார்கள். விக்ரம் கண்கலங்க ‘அழாதய்யா..’ என்று துடைத்து விட்ட கதிரேசன், ‘முடி வெட்டிக்கக் கூடாதாய்யா?” என்று கேட்டதில் அப்பாவின் வாசனையும் தெரிந்தது.
அர்ச்சனாவிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் “பிளாக் டீ விஷயத்துல நீ அப்படி பேசியிருக்கக்கூடாதும்மா” என்று மகள் செய்த தவறுகளை தனிமையில் சுட்டிக் காட்டியது புத்திசாலித்தனம். “நலலாத்தான் விளையாடற. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடு. உங்களுக்கு ஒருத்தர் சின்ன உதவி செஞ்சு இருந்தாலும் அவங்களை மறக்காம இருக்கணும். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” என்றெல்லாம் ரவிச்சந்திரன் உபதேசம் செய்தது, விசித்ராவிடம் அர்ச்சனா சண்டை போட்டது குறித்ததாக இருக்கலாம்.
‘எனக்கு ஒரு ஸ்டாரு கூட கிடைக்கலைப்பா’ என்று அர்ச்சனா ஏக்கத்துடன் சொல்ல, ‘நீயே ஒரு ஸ்டார்தாண்டா.. உனக்கெதுக்கு ஸ்டாரு” என்று ரவிச்சந்திரன் சொல்லியதில் ஒரு அன்பான அப்பாவின் பெருமிதமான ஆறுதல் தெரிந்தது.
‘நீயே.. நீயே’ என்கிற பாடல் ஒலிக்க விஜய்யின் அம்மா, கிருஷ்ணவேணி உள்ளே நுழைந்தார். பார்ப்பதற்கு கண்டிப்பான அம்மா போல தோற்றமளித்தாலும் அதிக நட்புணர்வுடன் மற்றவர்களிடம் பழகினார். “மாயா, பூர்ணிமா, விஷ்ணுலாம் உன் பின்னாடி வேற மாதிரி பேசறாங்க. ஜாக்கிரதையா விளையாடு” என்று தன் மகனை ரகசியமாக எச்சரித்தார் விக்ரமின் அம்மா. “கூல் சுரேஷ் இருப்பாருன்னு வந்தேன். அது யாரா இருந்தாலும் ‘செட் ப்ராப்பர்ட்டின்னுல்லாம் சொல்லக்கூடாது” என்று அவர் சொன்னதில் ஒரு தாயின் வேதனை தெரிந்தது. “யாராவது குறை சொன்னா, உடனே அதைப் பத்தி கேட்டுரு” எனறு அவர் சொன்ன உபதேசம் நன்று. கமலும் அதைத்தான் சொன்னார்.
ரவீனாவைக் கண்களால் சுட்டிக் காட்டிய விஜய்யின் அம்மா “என்ன நடக்குது?” என்று மணியிடம் குறும்பாகக் கேட்டது ஒரு ஹைலைட்டான மோமெண்ட். அந்தக் கிண்டலினால் மணி உற்சாகமாகி உடனே நெருக்கமாகி விட்டார். “அம்மா.. எப்ப சாப்பாடு எடுத்துட்டு வருவாங்கன்னு ஸ்கூல் பசங்க உக்காந்திருப்பாங்கள்ல. அப்படி எங்க வீட்ல இருந்து எப்ப வருவாங்கன்னு உக்காந்திருக்கோம்” என்று மணி சொன்னது நல்ல உதாரணம்.
‘விளையாட்டு ஒரு அளவுக்கு இருக்கட்டும்” என்று மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு பொதுவான உபதேசத்தைச் சொன்னார் உஷா. பிறகு ‘பேசும் போது வார்த்தைகளை கவனமா பயன்படுத்து” என்று பூர்ணிமாவிற்கு அறிவுரை சொன்னார். (குடிகார அங்கிள்ன்னு சொன்னது காரணமா இருக்குமோ?!) தன் அம்மாவின் காலில் பூர்ணிமா சாஷ்டாங்கமாக விழ “இன்னிக்குத்தான் இப்படி கால்ல விழுந்திருக்கா” என்று சந்தோஷப்பட்டார் உஷா. வீட்டில் காட்டாத மரியாதையையேல்லாம் பிள்ளைகள் பொதுவெளியில்தான் பாவனையாக காட்டுவார்கள்.
போட்டியாளர்கள் தந்த ரிட்டர்ன் கிஃப்ட்
பிக் பாஸின் அறிவிப்பு கேட்டது. ‘ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் சேர்ந்து…’ என்று அவர் முடிப்பதற்குள்ளாக ‘ஒருத்தரை நாமினேட் பண்ணணுமா?’ என்று விஷ்ணு ஜோக் அடிக்க சபை கலகலத்தது. ரொமான்டிக் உணர்வு ஒருவரை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது?! “விஷ்ணு.. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று பிக் பாஸ் கிண்டலடித்தார். போட்டியாளர்கள் விருந்தினர்களுக்கு பரிசுப் பொருள் தர வேண்டுமாம். ஸ்டார், வளையல், ரிப்பன் என்று தங்களிடமிருக்கும் எளிய பொருட்களை அன்புடன் கொடுத்தார்கள்.
“நீ ஃபைனல் வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. நல்லா விளையாடு” என்று மகனிடம் கிசுகிசுத்தார் விக்ரமின் அம்மா. ‘பெற்றோர்களுக்கு ஒரு டாஸ்க்’ என்று அறிவித்த பிக் பாஸ், அவர்கள் அனைவரும் கூடிப்பேசி தங்களுக்குப் பிடித்தமான ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்கச் சொன்னார். ‘மூத்தவராக நின்று இளையவர்களை வழிநடத்துகிறார், ஆறுதல் சொல்கிறார்” என்கிற காரணங்களையொட்டி இவர்கள் விசித்ராவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தார்கள். நல்லவேளையாக இதில் சண்டை வரவில்லை. மகிழ்ச்சியான முகத்துடன் இதற்கான டிராஃபியை வாங்கிக் கொண்ட விசித்ரா “டைட்டில் ஜெயிச்சா கூட இவ்வளவு மகிழ்ச்சி கிடைத்திருக்காது” என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டார்.
அடுத்த எபிசோடில் வேறு சில போட்டியாளர்களின் பெற்றோர்கள் வருவார்கள். ஒரு சில கோணங்களில் அனைத்துப் பெற்றோர்களும் ஒரேமாதிரிதான் ரியாக்ட் செய்கிறார்கள். மற்றவர்களின் மீது பொதுப்பாசம் இருந்தாலும் தன்னுடைய பிள்ளையின் மீது தனியான பாசம் இருக்கிறது. அது இயல்பானதுதான். ‘காக்கைக்கு மட்டுமல்ல, அம்மா டைனோசருக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்’.
+ There are no comments
Add yours