டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மோசடிசெய்து ரூ.200 கோடியைப் பறித்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டு, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சுகேஷ் தான் சம்பாதித்தப் பணத்தின் பெரும்பகுதியை சிறையிலிருந்து கொண்டே பாலிவுட் நடிகைகளுக்காகச் செலவு செய்தார். அதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதிக அளவில் பயனடைந்தார். அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் சுகேஷ் கோடிக்கணக்கில் பரிசும் பணமும் கொடுத்தார். சுகேஷ் பரோலில் வந்தபோது, அவரை சென்னையில் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் சந்தித்துப் பேசினார். இதற்காக ஜாக்குலினுக்கு சிறப்பு விமானத்தை சுகேஷ் ஏற்பாடு செய்தார். அமலாக்கப் பிரிவும், டெல்லி போலீஸாரும் சுகேஷ் மீதான பண மோசடி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
சுகேஷிடம் பரிசு மற்றும் பணம் பெற்ற நடிகைகளை அழைத்து விசாரித்தனர். அதனடிப்படையில் இந்த வழக்கில் ஜாக்குலினும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சுகேஷிடம் பரிசு, பணம் வாங்கிய மற்ற நடிகைகள் அனைவரும் இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஜாக்குலின் மட்டும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், `என்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. சுகேஷ் என்னை ஏமாற்றி, சிக்கவைத்துவிட்டார். எனவே அமலாக்கப் பிரிவு என்மீது பதிவுசெய்திருக்கும் வழக்கை ரத்து செய்யவேண்டும். நான் ஓர் அப்பாவி. சுகேஷ் சந்திரசேகரின் செயலால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். சுகேஷ் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்க எந்தவிதத்திலும் உதவவில்லை.
எனவே என்மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சுகேஷும் ஜாக்குலின் பெர்னாண்டஸும் நெருங்கிய காதல் உறவில் இருந்தனர். அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்கூட சோஷியல் மீடியாவில் வெளியாகின. அதோடு அடிக்கடி டெல்லி சிறையிலிருந்து கொண்டு ஜாக்குலினுக்கு சுகேஷ் கடிதம் எழுதுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours