சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லருக்கு ‘ரிலீஸ் ட்ரெய்லர்’ என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் படம் செப்.28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – பீரங்கிகள், அணிவகுக்கும் ஆயுதங்கள், பிரமாண்ட செட், பழங்கால கோட்டைகள், கலர் டோன், மேக்கப், உடைகள், அணிகலன்கள் என மிரட்டலான மேக்கிங்கில் பிரபாஸின் ‘மாஸ்’ காட்சிகளைச் சேர்த்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். ட்ரெய்லரின் பெரும்பாலான காட்சிகள், வெட்டுவது, ரத்தம் தெறிப்பது, துப்பாக்கியால் சுடுவது, தோட்டா பறப்பது, குண்டு வெடிப்பதாகவே இருக்கிறது.
இறுதியில் ‘கான்சாரோட கதைய மாத்துனது இரண்டு உயிர் நண்பர்கள்’ என்ற வசனம் இடம்பெறுகிறது. அதாவது ‘கேஜிஎஃப்’ பகுதியின் கதையை மாற்றினது யஷ் என்றால், ‘கன்சார்’ பகுதியின் கதையை மாற்றியது இரண்டு நண்பர்கள். தன் முந்தையப்படத்தில் தாய்ப் பாசத்தை எமோஷனாக பயன்படுத்திய பிரசாந்த் நீல் இந்தப் படத்தில் நண்பர்கள் மூலம் குறிபிட்ட சாம்ராஜ்ஜியத்தின் மாற்றங்களை அரங்கேற்றியிருப்பது தெரிகிறது. அவரின் ஒரே வகையான மேக்கிங்கை சலிப்படையாத வகையில் மாற்றுவது பிரமாண்ட காட்சி அமைப்புகள்தான். படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ: