ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணியிடம் செந்தில் பரிதாபமாகக் கேட்பார். “ஏண்ணே… எப்பவும் என்னை அடிக்கறீங்க?”. அதற்கு கவுண்டமணி “டேய் தேங்கா மண்டையா… நான் அடிக்கக்கூடாதுன்னுதாண்டா நெனக்கறேன். ஆனா அதென்னமோ தெரியல… உன்னைப் பார்த்தவுடனே அடிக்கத்தான் முதல்ல தோணுது” என்று. இது போல கமலுக்கும் பூர்ணிமாவிற்கும் இடையில் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி விஷயம் ஒத்துப் போகவில்லை. தன்னை கமல் தொடர்ந்து திட்டிக் கொண்டேயிருக்கிறார் என்கிற வருத்தமும் புலம்பலும் பூர்ணிமாவிடம் இருக்கிறது.
இதற்கான காரணம் எளிது. ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட தாங்கும் மனப்பக்குவம் பூர்ணிமாவிடம் இல்லை. உடனே அவரது முகமும் மனமும் சுருங்கிப் போகிறது. தலை தாழ்ந்து விடுகிறது. அப்போதைக்கு உணர்ச்சிவசப்பட்டாலும் நிதான மனநிலைக்கு வந்த பிறாகவது சுயபரிசீலனையுடன் யோசிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ‘தான் பிடித்த முயலுக்கு மூணே கால்’ என்கிற மாதிரி ‘நான் என்ன தப்பு பண்ணேன்?’ என்று மட்டும்தான் யோசிக்கிறார்.
இது நம்மில் பல பேருக்கு உள்ள கெட்ட பழக்கம்தான். நமக்கு ஒரு பிரச்னை வரும் போது ‘நான் யாருக்குக் கெடுதல் பண்ணேன். எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது’ என்று சுயபச்சாதாபத்துடன் கண்ணீர் சிந்துவோம். ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ நாம் எத்தனையோ மனிதர்களை மிதித்து விட்டு சென்றிருப்போம் என்பது மிகச் சௌகரியமாக அந்தச் சமயத்தில் நினைவிற்கு வராது.
விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பூர்ணிமாவிடம் இருக்கிறதா?
இந்த எபிசோடின் ஆரம்பத்தில் ஒரு துண்டுக்காட்சி வந்தது. கேமரா முன்பு தனியாக புலம்பிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. “என்னால முடியல சார். என்ன பேசணும். பேசக்கூடாதுன்னு தெரியல. ஹெல்ப் பண்ணுங்க சார். சரி பண்ணணும்னுன்ற நோக்கத்துலதான் நேத்து சொன்னேன்” என்று பரிதாபமாகக் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். இது கமலிடம் சென்று சேரும் என்பது அவருக்குத் தெரியும். அது நடந்தது. வீட்டிற்குள் நுழைந்த கமல், முதல் வேலையாக “பூர்ணிமா… மனம் வருந்தி மன்னிப்பு கேட்டா அது ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அதை மறந்துடுங்க… சிரிங்க” என்றார். அப்போதும் சந்தேகமாகவே சிரித்தார் பூர்ணிமா.
அதற்கும் முன்பாக அரங்கத்தில் கமல் பேசிய உரை முக்கியமானது. “விமானம் கண்டுபிடிக்கப்பட்டு 120 வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை வருடத்தில் அதன் முன்னேற்றம் எங்கேயோ போய் விட்டது. ஆனால் இங்கு இன்னமும் மலக்குழியில் மனிதன் இறங்கி வேலை செய்ய வேண்டிய சூழல். எண்ணூரில் நடந்த சுற்றுச் சூழல் கேட்டை விஞ்ஞானம் கண்டுபிடிக்க முடியாதா? நான் விஞ்ஞானத்திற்கு எதிரியல்ல. ஆனால் வியாபாரிகளின் சுயநலத்திற்கு யாரும் கைப்பாவையாக இருந்து விடக்கூடாது. அது மனிதர்களுக்கு உதவுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அத்தகைய கடமையை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது” என்றபடி அகம் டிவிக்குள் சென்றார்.
பூர்ணிமாவின் கேஸையே உதாரணமாக எடுத்துக் கொண்டு டாஸ்க் ஆடத் தீர்மானித்தாரோ, என்னவோ. “இந்த வீட்டில் ஷோவிற்காக தன்னை மாத்திக் கொண்டவர்கள் இருப்பார்கள். ஆனால் இன்னமும் மனது மாறாதவர்கள் யார்?” என்பது கேள்வி. இந்த டாஸ்க்கில் மாயாவைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டார்கள். “அவங்க இந்த கேமிற்காகத்தான் நிறைய ஸ்ட்ராட்டஜி பண்றாங்க… அவங்க உண்மையான குணம் வேறன்றது நெருங்கி பழகிப் பார்த்தாதான் தெரியுது” என்பது பலரின் அபிப்ராயம். “இந்த வாரம் நான் பார்க்கற விஷ்ணுதான் உண்மை. ஆனா சரியா ஆடறமான்னு அவருக்கு நிறைய குழப்பம் வந்துடுது” என்றார் விஜய். “ஓ… குழப்பம்தான் கோபமா மாறிடுதா?” என்று சிரித்தார் கமல்.
குணம் மாறாது – மனம் மாறலாம் – கமலின் லெக்சர்
இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் தவித்தார் விசித்ரா. “எனக்கு இங்க நிறைய பேரை தனிப்பட்ட வகையில் தெரியாது. அதனால சொல்லத் தெரியலை. ஷோவிற்காக ஆரம்பத்தில் ஆக்ரோஷமா ஆடறாங்க. அப்புறம் நார்மலுக்கு வந்துடறாங்க போல. ஆனா அப்படியும் சொல்ல முடியல” என்று தடுமாறினார்.
“நான் 150 கேரக்டருக்கு மேல நடிச்சிருக்கேன். எல்லாத்துலயும் கொஞ்சம் கமல் இருப்பான். எங்கேயும் கொஞ்சம் நிஜம் இருந்தாத்தான் அழகு. ஒருத்தரோட குணம் மாறாது. அது டிஎன்ஏ சம்பந்தப்பட்டது. அதில் கை வைக்க முடியாது. ஒரு தவறான பகைவன், தவறான நண்பனால கூட நாம மாறிடுவோம். இவங்க குணம் மாறாம இருக்கலாம். மனம் மாறியது முக்கியம். சீசன் முடிஞ்சவுடனே யோசிப்பாங்க. விஜய் சொன்ன மாதிரி இது ரியாலிட்டி ஷோ. நம்மளோட ரியல்தான் அதிகமா தெரியணும். லாபம்தான் வியாபாரிகளோட குணம். ஆனா மக்களுக்குக் கெட்ட மருந்து கொடுக்கக்கூடாதுன்னு மருந்து கம்பெனிகள் மனம் மாறினால் அதனால் நல்லதுதான் விளையும்” என்று திடம், குணம், மணம் பற்றி ஒரு லெக்சரே தந்து விட்டு பிரேக்கில் சென்றார் கமல்.
“அடிக்கக்கூடாது… குணமா வாய்ல சொல்லணும் சார்” என்பது பூர்ணிமாவின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம். முடிந்த டாஸ்க்கில் பூர்ணிமாவைப் பற்றி சொல்லும் போது “அவங்க சிரிக்கறது ஒரு மாதிரி வில்லத்தனமா, தந்திரமா தெரியும்” என்பது போல் விஷ்ணு சொல்லிவிட்டார். எனவே பிறகு “நான் தப்பா சொல்லிட்டனா… ஏன் லோவா இருக்கே…” என்றெல்லாம் மன்னிப்பு கோரும் தோரணையில் விஷ்ணு சிரித்துப் பேச, முதலில் “ஒண்ணும் இல்லீங்க” என்று மறுத்த பூர்ணிமா, பிறகு ‘அது வில்லத்தனமான சிரிப்பா தெரியுதா… ரொமான்டிக் சிரிப்புங்க” என்று சொல்லி விஷ்ணுவை மட்டுமல்லாது நம்மையும் அதிர வைத்தார். (ஓ… இதுதான் அந்த தெய்வீகச் சிரிப்பா?!).
மணியின் கேப்டன்சியைப் புகழ்ந்த போட்டியாளர்கள்
பிரேக் முடிந்த வந்த கமல் ‘மணி கேப்டன்சி’ பற்றி விசாரித்தார். சொல்ல என்ன இருக்கிறது?! இதில் பெரும்பாலும் பாசிட்டிவ்வான ரிசல்ட்களே வந்தன. மணியைப் பற்றிய பிம்பம் கூட பல பார்வையாளர்களுக்கு சற்று மாறியிருக்கலாம். அந்த அளவிற்கு அவரிடமுள்ள சில நற்குணங்கள் இந்த வாரம் வெளியே தெரிந்தன. “நான் கேப்டனா இருந்த போது செஞ்ச தப்பையெல்லாம் செய்யாம இருந்தான். அதுவே நல்ல விஷயம்தான்” என்று சொல்லி விஷ்ணு சிரிக்க, “பார்த்தீங்களா… நீங்க செஞ்ச தப்பு கூட இன்னொருத்தருக்கு பாடமா அமையுது. தவறான விதைகள்ல கூட உபயோகம் இருக்கு” என்று அதிலிருந்த நல்ல கோணத்தை எடுத்துரைத்தார் கமல்.
இரண்டாகப் பிரிந்திருந்த வீட்டை மணி ஒற்றுமையாக ஆக்கியதை அர்ச்சனா பாராட்டினார். “ஸ்ட்ரைக் மட்டும் இல்லாமப் போயிடுச்சு சார்” என்று மாயாவும் நிக்சனும் குறும்பாகச் சொல்ல, “அப்ப சொல்றதுக்கு ஏதாச்சும் இருக்கா.. இப்ப சொல்லிடுங்க” என்று கமல் தூண்டி விட, “அய்யோ.. ஒண்ணுமே இல்லை சார். அது இருந்திருந்தா அதை வெச்சு கொஞ்சம் கேம் ஆடியிருக்கலாம். மத்தபடி மணி… தங்கமணி” என்று சிரித்தார் மாயா. “ஓகே… கேப்டன் சுயவிமர்சனம் செஞ்சுக்க வேண்டிய நேரம்” என்றார் கமல். “அப்படி ஒண்ணுமில்லை சார்” என்று மணி தயங்கியபடி சொல்ல, “இருக்கணும். ஒரு நல்ல தலைமைக்கு சுயவிமர்சனம் இருக்கணும். Excellence is a continuous process” என்று கமல் சொன்னது முக்கியமான உபதேசம்.
“இன்னமும் கொஞ்ச நாள்தான் இருக்கு. ஸ்ட்ராட்டஜி பண்றேன்னு டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. கடைசி வரைக்கும் கத்திய கூர் பண்ணிட்டே இருந்தா அது மழுங்கல் கத்தியா மாறிடும். சுவாரசியமா ஏதாவது பண்ணுங்க. அதுதான் மக்களுக்குப் பிடிக்கும்” என்று பார்வையாளர்களை நோக்கி கை காட்டினார் கமல். (‘நீங்களே எல்லா வியாக்கியானத்தையும் சொல்லிட்டு கடைசில எங்க பக்கம் கை காண்பிச்சிடுங்க’ – இது பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ்?!).
டிக்கெட் டு ஃபினாலேவில் ஆட முடியாத படி வாக்கெடுப்பில் பின்தள்ளப்பட்ட விஜய் மற்றும் அர்ச்சனாவைப் பரிவுடன் விசாரித்தார் கமல். அவர்களுக்கு உள்ளுக்குள் நிச்சயம் வருத்தம் இருக்கும். என்றாலும் “அதெல்லாம் போராடி வந்துடுவோம். வெற்றி தோல்வியை விடவும் ஆடறதுதான் முக்கியம்” என்று இருவருமே பாசிட்டிவ்வாகச் சொன்னார்கள்.
“வாழ்க்கைக்கு வன்மம் தேவை போல இருக்கே?”
இன்று எவிக்ஷன் இல்லாததாலோ, என்னமோ, நேரத்தைக் கடத்துவதற்காக “ஸ்டோர் ரூம்ல சில பொருள்கள் இருக்கும்” என்கிற ஆட்டத்தை ஆரம்பித்தார் கமல். ஏட்டிக்குப் போட்டியான நபர்களைச் சரியாகக் கோர்த்து விட்டதால் இந்த ஆட்டம் சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும் மிக நீளமாக இழுத்து பொறுமையைச் சோதித்தது. ‘எப்படா முடியும்’ என்றிருந்தது. “சகிப்புத்தன்மைக்குப் பொறுமைன்னு இன்னொரு பெயர் வைக்கலாம்ன்னு சொன்னேன். அந்தப் பொறுமை பார்வையாளர்களுக்கு இருந்தது” என்று கமல் கடைசியில் சொல்லுமளவிற்கு இந்த சுயகணிப்பும் விமர்சனமும் நீண்டது.
அந்த ஆட்டம் இதுதான். சுயநலம், வன்மம், அதிர்ஷ்டம், திறமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, அன்பு போன்ற வார்த்தைகள் தரப்படும். ஒருவர் சுயகணிப்பாக தன்னிடம் இவை எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்பதை வரைபடமாக குறிக்க வேண்டும். அடுத்து வருபவர் இதைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்க வேண்டும்.
இதில் யார் யார் விமர்சனம் செய்யலாம் என்று கமல் கோர்த்து விட்ட வரிசை ரகளையாக இருந்தது. பூர்ணிமா சொல்லி முடித்ததும் “இதைப் பற்றி விஷ்ணு விமர்சனம் செய்வார்” என்று கமல் சொன்னதும் சபை கலகலத்தது. விஷ்ணுவைப் பற்றி மாயா ரெவ்யூ செய்வார் என்றதும் அவர் பொய் அழுகையுடன் சிணுங்கியபடியே எழுந்து வந்தார்.
இந்த டாஸ்க்கில், சுயகணிப்பு முன்னே பின்னே இருந்தாலும் விமர்சனம் ஏறத்தாழ சரியாக இருந்தது. விக்ரமின் முறை வரும் போது ‘அதிர்ஷ்டம்’ என்கிற வார்த்தையை வைக்கவில்லை. ஆனால் அதை ரிவ்யூ செய்ய வந்த மணி, அதற்கு நிறைய இடம் தந்து விட்டு “லக் இவனுக்குப் பயங்கரமா இருக்கு சார். இவனை வெளிய அனுப்ப நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். போக மாட்டேன்றான்” என்று சொல்லிச் சிரிக்க, விக்ரமும் அதற்கு உடன்பட்டு சிரித்தார்.
“விஷ்ணு… விஷ்ணுன்னு என் பெயரையெல்லாம் நீங்க சொல்றதே என் அதிர்ஷ்டம்தான் சார்” என்று விஷ்ணு சொல்ல, “பத்து வயசுக்கு அப்புறம் வீட்ல அதைச் சொல்றதை நிறுத்திட்டேன். அவங்களுக்கும் இது வருத்தம்தான்” என்று தனது நாத்திக கொள்கையை ஒட்டி கமல் ஜாலியாக நையாண்டி செய்தார். “இருந்தாலும் பாருங்க சார்… விஷ்ணு, விஷ்ணு… இப்ப சொல்றபடி ஆயிடுச்சு” என்று விஷ்ணு விடாமல் மல்லுக்கட்டியது சுவாரசியம். “அறிவோம்… அறிவோம்… என்று சொல்லி ‘ஹரி ஓம்’ என்று சொல்ல வைத்து விட்டான் பார்த்தாயா?” என்கிற ‘தசாவதாரம்’ வசனம்தான் நினைவிற்கு வந்தது.
வன்மம் இருக்கிறது என்பதை பல பேர் சுயவாக்குமூலமாக ஒப்புக் கொள்ள “வன்மம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது போலயே” என்று சொல்லிச் சிரித்தார் கமல். “சகிப்புத்தன்மைன்றதை நான் ஒப்புக்கவே மாட்டேன். இது விஷயமா காந்தியார் கிட்ட கூட எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு. ஒருத்தரை சகிச்சிக்க வேணாம். ஏத்துக்கங்க. Don’t tolerate it. Accept it.” என்றார் கமல். இதை கடந்த சீசனிலும் சொல்லியிருக்கிறார். மறைமுக குத்தல்கள் இருந்தாலும் ஒருவழியாக இந்த ஆட்டம் ஜாலியாக நடந்து முடிந்தது.
போட்டியாளர்களிடம் கடுமை காட்டிய கமல்
சபையில் எதையாவது சொல்லி விட்டு பிறகு பூர்ணிமாவை சமாதானப்படுத்துவதை பார்ட்-டைம் வேலையாகவே விஷ்ணு செய்கிறார். ‘சகிப்புத்தன்மை இல்லை. அன்பு இருக்கு. ஆனா ஒருத்தர் கிட்ட மட்டும்தான் காட்டுவாங்க’ என்று பூர்ணிமாவைப் பற்றி விஷ்ணு டாஸ்க்கில் சொன்னது சரியான கணிப்புதான். “ஏதாவது தப்பா சொல்லிட்டனா?” என்று விஷ்ணு தத்தளிக்க, “அதெல்லாம் இல்லைங்க” என்று விலகிச் சென்றார் பூர்ணிமா.
பிரேக் முடிந்து திரும்பிய கமல், “ஓகே… நிறைய சந்தோஷமா பேசிட்டோம். சில விஷயங்களை கறாரா சொல்ல வேண்டியிருக்கு. நீங்க அதை ஃபாலோ பண்ணலைன்னா, வெளியே வரவழைச்சு சொல்ல வேண்டியிருக்கும்” என்று இறுக்கமான முகத்துடன் சொல்ல அரங்கத்தில் உஷ்ணம் ஏறத் துவங்கியது. முதல் விஷயத்திற்கு நேரடியாக வந்தார் கமல். “நாமினேஷன் பத்தி டிஸ்கஸ் பண்ணாதீங்கன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு. தினேஷ்+விஷ்ணு குரூப் ஒரு பக்கம் பண்றீங்க. மாயா+விஷ்ணு குரூப் இன்னொரு பக்கம் பேசறீங்க…” என்ற கமல் சில ரகசியங்களை சபையில் உடைத்துப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
“’ரெண்டு வியை நான் பார்த்துக்கறேன்.. M+Pஐ நீங்க பார்த்துக்கங்க’ன்னு தினேஷ் விஷ்ணு கிட்ட சொல்றாரு” என்று அவர்கள் பேசிய ரகசியத்தை நேரடியாக கமல் பொதுவில் சொன்னது சரியில்லை. சூசகமாகச் சொல்லியிருக்கலாம். ஆட்டத்திற்குள் இவரும் புகுந்தது போல் ஆகிவிட்டது. தன்னைப் பற்றி விஷ்ணு புறணி பேசினாரா என்று ஷாக் ஆன பூர்ணிமா, அதைப் பற்றி மாயாவிடம் ஜாடைக் காண்பித்து சிரித்து, பின்பெஞ்ச் மாணவன் போல் கமலிடம் மாட்டிக் கொண்டார். “பூர்ணிமா… சிரிக்காதீங்க… இது ஜோக் இல்லை. நீங்கள்லாம் நாமினேஷன் மட்டும்தான் பண்ண முடியும். ஆனா இவங்க எலிமினேஷனே பண்ணிடுவாங்க” என்று காட்டமாகச் சொன்ன கமல் அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார்.
“கரப்பான்பூச்சியைக் கொல்லணும்ன்னு சொல்றீங்க. மாயா… யாரு அது? அணுகுண்டுல கூட தப்பிச்சிடும்ன்னு அர்த்தமா… என்னது அது… விக்ரம். நீங்க இதையெல்லாம் ஆட்சேபிக்கணும்.. இல்லைன்னா நிரந்தரமா முத்திரை குத்திடுவாங்க. கண்டுக்காம இருந்தா அந்தப் பெயர்தான் நிலைச்சுடும்… சக போட்டியாளரை தரக்குறைவா பேசறீங்க. பருத்தி மூட்டைன்றீங்க…” என்று கமல் கடுமையாகப் பேச, “சார்… அது ஜோக்காதான் சொன்னோம். அவன் மேல அன்பு இருக்கு” என்று மாயா சமாளிக்க முயன்றார். “நான் கூட உங்களைப் பிரியமா சில ஜந்துக்கள் பேர் வெச்சு சொல்லட்டுமா…” என்று நையாண்டியாக கேட்ட கமல், “யார்லாம் கரப்பான்பூச்சின்னு சொன்னது… எழுந்திருங்க” என்று சீரியஸானார். மாயா, பூர்ணிமா, நிக்சன், விஷ்ணு ஆகியோர் எழுந்திருக்க, “சார்… அது வந்து… நண்பர்கள். சும்மா தமாஷூக்கு…” என்று விக்ரமே இதைச் சமாளிக்க முயல, அவரையும் கண்டித்தார் கமல். “இதுல எல்லாம் பெருந்தன்மை வேண்டாம். அப்புறம் அதையே நிரந்தரமா முத்திரை குத்திடுவாங்க. அது ஓகேவா உங்களுக்கு?” என்று கமல் கோபமாக கேட்க அவசரமாக மறுத்தார் விக்ரம்.
நெருங்கிய நண்பராக இருந்தாலும் மிகையான கிண்டல் ஆபத்துதான்!
கமல் சொன்ன விஷயம் முக்கியமானது. என்னதான் நெருங்கிய நண்பர்கள் கூட்டம் என்றாலும் அதில் பலவீனமான ஒருவரை தொடர்ந்து குத்தி கிண்டல் செய்து கொண்டே இருந்தால் அவர் நட்பிற்காக வெளியில் சிரித்தாலும் நிச்சயம் உள்ளுக்குள் வருத்தமடைவார். இது நிச்சயம் அவருடைய மனதைப் பாதிக்கும். அது வன்மமாகவோ, கோபமாகவோ, சுயதண்டனையாகவோ கூட வளரலாம். எனவே நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவர் தலையிட்டு இதை தடுத்து நிறுத்துவதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.
அதற்காக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ரொம்ப ஃபார்மலாலிட்டியாக பேசத் தேவையில்லை. அது செயற்கையாக மாறி விடும். ஆனால் தன்னுடைய கிண்டலில் ஒருவர் முகம் சுருங்குகிறார் என்றால் உடனே அதை நிறுத்தி விடுவதுதான் நாகரிகம். போலவே பாதிக்கப்பட்ட நபரும் சுயமரியாதை உணர்வுடன், தடுத்து நிறுத்தி விடுவதுதான் நல்லது. இல்லையென்றால் அந்தக் கிண்டல் நண்பர்கள் வட்டத்தைத் தாண்டி, வெளியிலும் அப்படியே பரவி நிரந்தரமான கறையாகி விடும்.
இன்னொன்று. நண்பர்கள் வட்டத்திற்குள் உரிமையாகப் பேசிக் கொள்வது வேறு. ஆனால் மற்றவர்களிடம் பேசும் போது அதே உரிமையை எடுத்துக் கொண்டு நண்பனைப் பொதுவில் கிண்டல் செய்யக்கூடாது. எனில் புதியவர் முன்னாலும் அந்த நண்பர் தன் மதிப்பை உடனடியாக இழந்து விடும் அபாயம் இருக்கிறது. இதைக் கிண்டல் செய்பவர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் அடிப்படையான நாகரிகம். அழுத்திச் சொல்ல வேண்டிய உபதேசம் அல்ல.
இந்த சீசனில் பிக் பாஸ் உட்பட விக்ரமை கிண்டல் செய்வதை பல முறை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். ‘டைட்டில் வின்னர்’ என்று நம்புவது விக்ரமின் உரிமை. அதை வைத்தே வீட்டின் உள்ளேயும் வெளியிலும் கிண்டலடிப்பது முறையானதல்ல. யாருக்குத் தெரியும்?! மீதமுள்ள நாள்களில் ஏதாவதொரு திருப்பம் நிகழ்ந்து விக்ரமே கூட டைட்டில் அடிக்கலாம். எனில் கிண்டலடித்தவர்கள் தங்களின் முகங்களை எங்கே வைத்துக் கொள்வார்கள்?. மறுபடியும் அதேதான். ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்கிற வாசகத்தை நினைவில் வைத்திருந்தால் போதுமானது.
புத்தகப் பரிந்துரை – பருவம் – மகாபாரத நாவல்
பொதுவாக புத்தகப் பரிந்துரையை அரங்கில், பார்வையாளர்களின் முன்னிலையில் மட்டும்தான் கமல் நிகழ்த்துவார். ஆனால் இந்த முறை கிண்டல் தொடர்பான கோபத்தில் இருந்தாரோ, என்னவோ, அப்படியே அதே ப்ளோவில் போட்டியாளர்களையும் வைத்துக் கொண்டே தொடர்ந்தார்.
இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்திய நூல், எஸ்.எல்.பைரப்பா எழுதிய ‘பருவம்’ என்கிற நாவல். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. “பைரப்பா புகழ்பெற்ற கன்னட மொழி எழுத்தாளர். கன்னட இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஆளுமை. மகாபாரதம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று கள ஆராய்ச்சி செய்து இதை புராணமாக அல்லாமல் புதினமாக எழுதினார். இதில் வருபவர்களை புராண பாத்திரங்களாக அல்லாமல் சாதாரண மனிதர்களாக புனைந்தது வித்தியாசமான முயற்சியாக இருந்தது. இதில் வரும் கர்ணனுக்கு வயது 65. துரோணருக்கு எண்பது வயது. அறத்திற்காக நிகழ்ந்த போரைப் பற்றிய நூல்” என்று புத்தகப் பரிந்துரையை நிறைவு செய்தார் கமல்.
“ஓகே. அடுத்த வாரம் சந்திக்கலாம்” என்று நமட்டுச் சிரிப்புடன் கமல் எழுந்து கொள்ள “என்னது! எலிமினேஷன் இல்லையா?” என்று மக்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்கள். “வேணுமா…” என்று சிரித்த கமல் பிறகு உண்மையாகவே விடைபெற்றுக் கொண்டார்.
விக்ரமை கிண்டல் செய்தது பற்றி கமல் கண்டித்த விஷயம்தான் வீடெங்கும் பிறகு உலவிக் கொண்டிருந்தது. “நாங்க தப்பு செஞ்சிட்டோம். சாரி” என்று மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகிய மூவரும் வருத்தம் இல்லாத விளையாட்டுக் குரலில் சொல்ல, “நான் அப்படி எடுத்துக்கலை. ஆனா… கமல் சார் சொன்னதும் முக்கியமானது” என்று இரண்டிலும் நின்று தடுமாறினார் விக்ரம். “சொன்னவங்க எல்லோருமே எழுந்துக்கலை” என்று நிக்சன் புகார் சொன்னார். தினேஷ் கூட விக்ரம் குறித்து கிண்டலடித்திருக்கிறார்.
“விஷ்ணுதான் வந்து வந்து நாமினேஷன் பத்தி என்கிட்ட பேசிட்டே இருந்தான்” என்று குற்றம் சொன்னார் மாயா. விசித்ராவும் அர்ச்சனாவும் கமல் கருத்திற்கு ஆதரவளித்து பேசினார்கள். “என்னதான் ஜாலியா பேசினாலும் வெளில அப்படித்தான் முத்திரை குத்திடுவாங்க” என்று அவர்கள் சொன்னது சரியானது. “நான் உன்னைப் பத்தி ஒருமுறை கூட தப்பா சொன்னதில்லை” என்று விக்ரமிடம் பதிவு செய்தார் மணி. “நான் தப்பா எடுத்ததில்லை. சமயங்கள்ல கோபம் வரும். ஆனா அப்பக் கூட இவங்க என்னை சீரியஸா எடுத்ததில்ல” என்றார் விக்ரம் பரிதாபமாக.
கமல் சொன்ன உபதேசங்கள் எடுபடுமா அல்லது மீண்டும் இவர்கள் சேட்டையை ஆரம்பித்து விடுவார்களா என்று தெரியவில்லை. சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் அதிகமாகுமா அல்லது இப்படியே சவசவவென்று சம்பிராயத்திற்கு நடந்து முடியுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
+ There are no comments
Add yours