Bigg Boss 7 Day 76: `ஹாசினி' ரவீனாவின் சமாளிப்புகள், கூல் சுரேஷ் இறக்கிய ஊசிகள், கமலின் ஆம்லேட் பசி!

Estimated read time 1 min read

‘கமல் சிலரை சரியாக விசாரிப்பதில்லை, பாரபட்சம் காட்டி விட்டு விடுகிறார், சிலரிடம் மட்டும் அதிகமாக காட்டம் காட்டுகிறார்’ என்றெல்லாம் புகார்கள் வருகின்றன. அவருடைய விசாரணை முறை பொதுவாக எப்படி அமையும் என்பதற்கான உதாரணமாக இந்த எபிசோடு இருந்தது.

தனது தவற்றை உணர்ந்து ‘ஐயா மன்னிச்சுடுங்க’ என்று சரணாகதி தத்துவத்தை ஒருவர் பின்பற்றினால் அவர்களை கமல் அதிகம் குடாய்வதில்லை. மாறாகத் தனது தவற்றை விதம் விதமாக நியாயப்படுத்திக் கொண்டேயிருந்தால் போட்டு வெளுத்து விடுகிறார். அதற்காக ‘அறிவிருக்கா?’ என்பது மாதிரியான முரட்டுத்தனத்தைக் கையாளாமல், தவறு செய்தவர் அதை உணரும்படியான வார்த்தைகளை இட்டு பேசுவது நல்ல விஷயம். ஆனால் பெரும்பாலானவர்கள் மசாலா ஆக்ஷன் காட்சிகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

மன்னிப்பு கேட்டுவிடும் வகையில் மாயா, நிக்சன் போன்றவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள். விஷ்ணு, பூர்ணிமா போன்றவர்கள் ‘விளக்கம் சொல்கிறேன்’ என்று இன்னமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். இதை இந்த எபிசோடிலும் கண்டிருக்க முடியும். ஆனால் ரவீனா என்கிற எக்ஸ்பயரி ஆன விஷபாட்டில், இந்த இரண்டிலும் சிக்காமல் சிரித்துக் கொண்டே சைக்கிள் கேப்பில் ஓட்டும் லாரி இருக்கிறதே?! அடேங்கப்பா!

Bigg Boss 7 Day 76

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

எண்ணூர் எண்ணெய்க் கசிவு பற்றிய தனது ஆழமான கவலையையும் விமர்சனத்தையும் வைத்தபடி அரங்கிற்குள் வந்தார் கமல். “இந்தச் சுற்றுச்சூழல் கேடு தமிழகத்தின் தலைநகரில் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய மழை இதை அம்பலப்படுத்தி விட்டது. தென்சென்னைதான் முக்கியமா? எண்ணூர் மக்களின் உயிர் விலை மலிவு என்று யார் முடிவு செய்துவிட முடியும்? எங்கேயோ எண்ணூர்ல நடக்குதுன்னு விட்டுட முடியுமா? கட்டைவிரல்தானே… போனாப் போகுது… தலைதான் முக்கியம்ன்ற மாதிரி ஆயிடும். இதைப் பற்றி பேச வேண்டியதுதான் முக்கியம். அதை விட்டு இந்த கேம்ல இவர் மேல பிரியமா இருக்காரு… இவர்கிட்ட பாரபட்சம் காட்டாறாருன்றாங்க. அதையெல்லாம் தாண்டி பேச வேண்டிய முக்கியமான சமூகக் கடமைகள் இருக்கின்றன” என்று தன் மீதான விமர்சனங்களுக்கும் போகிற போக்கில் பதில் சொல்லி விட்டுச் சென்றார் கமல்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். இதில் பெரிதாக ஒன்றுமில்லை. தினேஷிற்கும் விசித்ராவிற்கும் இடையில் நடந்த உரசல்கள் மட்டுமே. தன்னை நறுக்கென்று நாலு வார்த்தைத் திட்டியிருந்தால் கூட தினேஷ் ஒப்புக் கொண்டிருப்பாரோ, என்னமோ! ஆனால் ஒரே வயது என்று தன்னை இணைத்து விசித்ரா சொல்லிவிட்டதால் அவர் மீது கொலைவெறியில் இருக்கிறார் தினேஷ். சர்க்கரையில் இருந்தது கரப்பான்பூச்சியா அல்லது எறும்பா என்று இருவருக்கும் இடையே விவாத மோதல் நடந்து கொண்டே இருந்தது. வனஆர்வலரான சுரேஷிடம் கேட்டிருந்தால் ஒரே நொடியில் சந்தேகத்தைப் போக்கியிருப்பார்.

சமையலுக்கு உதவி செய்வது தொடர்பாக சுரேஷிடமும் பிறகு மோதல் ஏற்பட்டதால் “நீங்க ரெண்டு பேரும் இங்க சந்தோஷமா இருங்க. நான் வெளில போயிடறேன்” என்று பாவனையாக கண்ணைக் கசக்குகிற மாமியார் டெக்னிக் வார்த்தைகளைப் பயன்படுத்தி கோபப்பட்டார் விசித்ரா.

Bigg Boss 7 Day 76

‘கலைஞன் ஆயிட்டா மனிதத்தன்மை வந்துடும்’

அகம் டிவி. கமல் என்ட்ரி. “எப்படியிருந்தது இந்த வாரம். அன்பு பெருகிடுச்சு போல. பார்க்க நல்லாயிருந்தது” என்கிற பாராட்டு வார்த்தைகளுடன் உள்ளே வந்தார் கமல். குழந்தை மற்றும் பொம்மை டாஸ்க்கில் ஒப்பனைக்காக தினேஷ் எடுத்துக் கொண்ட சிரத்தை பற்றி கமல் பாராட்டுவார் என்று சென்ற வாரமே எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. அதை ஈடுசெய்யும் விதமாக இந்த எபிசோடில் அதைப் பற்றி குறிப்பிட்டுப் பாராட்டிய கமல், ‘படையப்பா’ கெட்டப்பிற்காக தினேஷ் மேற்கொண்ட முயற்சிகளையும் இணைத்துப் பாராட்டியது நன்று.

“டான்ஸ் அசிஸ்டென்ட்டா இருந்தததெல்லாம் ஞாபகம் வந்தது சார். யார் ஆடினாலும் கூடவே ஆடிட்டு இருந்தேன்” என்று மணி சொல்ல, “எனக்குப் புரியுது. நானும் அப்படி இருந்தவன்தான். மேடைல ஒருத்தர் ஆடும் போதெல்லாம் கீழ நின்னு நாமளும் ஆடிட்டே இருப்போம்” என்று மணியைப் பாராட்டினார் கமல். டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற முடியா விட்டாலும் தொலைக்காட்சியில் பார்த்தபடி டான்ஸ் ஆடிய மணியின் உற்சாகத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்து பரிதாபமான முகத்துடன் எழுந்து நின்றார் சுரேஷ். அப்போதுதான் அவர் எஸ்கேப் ஆக முயன்ற சம்பவம் நினைவிற்கு வந்தது. “சிம்பு மாதிரி பண்ணீங்க. அது ஓகே. ஆனா வம்பும் பண்ணிட்டீங்களே… கீழ விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்று கமல் கேட்டுக் கொண்டிருந்த போதே ஸ்விட்ச் போட்ட மாதிரி உடனே அழ ஆரம்பித்தார் சுரேஷ். (நடிகன்டா. நீ நடிகன்டா!). “விழுந்திருந்தா இந்த மாதிரிதான் அழுதிட்டு இருந்திருப்பீங்க” என்றார் கமல் டைமிங்கில். “வெளிய போறதுக்கு மெயின் கேட்டு பக்கம் வழி இருக்கு. இன்னமும் 2 தப்பு சேர்த்து பண்ணா மக்களே வெளியே அனுப்பிடப் போறாங்க” என்று சொன்னது கமலின் குறும்பு.

அடுத்து எழுந்த ரவீனாவிடம் “ஹாசினி பாத்திரம் நல்லா இருந்தது. ஆர்டிஸ்ட்டா மாறிட்டா மனுஷத்தன்மையும் கூடவே வந்துடும். ஒரு நல்ல மனுஷனாலதான் ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட்டா இருக்க முடியும்” என்றெல்லாம் கமல் பாராட்டியது சர்காஸ்டிக்காகவே இருந்தது. ரவீனா செய்த காரியம் அப்படி. அடுத்ததாக எழுந்த அர்ச்சனா “ரவுடி பாத்திரம்ன்னவுடனே முதல்ல அழுதுட்டேன்” என்று சொல்ல, “நானும் அப்படி அழுதிருக்கேன். ஆரம்பத்துல எனக்கு வில்லன் பாத்திரமா கிடைச்சது. நம்ம வேலையை நல்லாப் பண்ணா அப்படியே அது மாறிடும். வட்டார வழக்குல்லாம் நல்லாப் பேசினீங்க. நீன்னு சொல்லாம நீயின்னு இழுத்தது நல்லாயிருந்துச்சு” என்று பாராட்டினார் கமல். இன்னமும் கூட அழுத்தமாகப் பாராட்டியிருக்கலாம். அர்ச்சனாவின் பங்களிப்பு அத்தனை அருமையாக இருந்தது.

Bigg Boss 7 Day 76

விஷ்ணுவை பங்கமாக கிண்டல் செய்த கமல்

போன வாரம் திட்டு வாங்கி வாக்குவாதம் செய்து மேலும் திட்டு வாங்கிய விஷ்ணு, இப்போது அதற்கான உபாயத்தைக் கண்டுபிடித்து விட்டார் போல. எனவே எழுந்ததுமே “போன வாரம் நடந்தததுக்கு சாரி சார்” என்று ஆரம்பத்திலேயே சரண் அடைந்து விட்டார். “ஓகே… ஆனா மன்னிப்பு கேட்காம இன்னமும் நெறைய பேர் இங்க இருக்காங்க. (யாரா இருக்கும்?!) என்று மறைமுகமாகக் குத்திய கமல், “முயற்சி எடுத்து டானஸ்லாம் ஆடினீங்க. ஆனா ரிகர்சர்ல பார்த்த விஷயம் மாறிடுச்சு. நீங்க பண்ண டிலேல இன்னொரு ஆளு உள்ளே புகுந்துட்டாரு” என்று பூர்ணிமா ஆடிய நடனத்திற்கு இடையே மணி வந்துவிட்ட விஷயத்தை வைத்து ரகளையாகக் கிண்டலடித்தார் கமல். மணி எழுந்து “இதெல்லாம் எனக்குத் தெரியாது சார். கேப் பில்லப் பண்ணேன். அவ்வளவுதான்” என்றார்.

“உங்களுக்குத் தெரியாது மணி. பாவம் இதுக்காக பூர்ணிமா கூட விஷ்ணு ரெண்டு நாள் ரிகர்ஸல் பண்ணாரு. நீங்க டக்குன்னு வந்துட்டீங்க… விரக்தியாகி ‘சரி போ’ன்ற மாதிரி கை தட்டினாரு” என்று விஷ்ணுவை பங்கமாகக் கிண்டலடித்தார் கமல். விஷ்ணு அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்க, பூர்ணிமா உள்ளிட்ட அனைவருமே இதற்கு விழுந்து விழுந்து சிரித்தார்கள். “கட்டிப் பிடிக்க அவங்க வேற சைஸூக்கு அளவு எடுத்துட்டாங்க. ஆனா அவுட் ஆஃப் சிலபஸா போயிடுச்சு” என்று கமல் கூடுதலாக கிண்டலை இணைக்க சிரிப்பொலி உச்சத்திற்குச் சென்றது. “ஓகே… இந்த வாரம் உங்ககிட்ட இருந்த எம்பதி (Empathy) வெளியே வந்தது” என்று விஷ்ணுவைப் பாராட்டினார் கமல்.

மேடையில் நிக்சனுக்கு ஸ்பேஸ் தந்து ஆதரித்து ஆடிய விஜய்யைப் பாராட்டிய கமல், “’திருவிளையாடல்’ படத்துல நாகேஷ் காமெடிக்கு சிவாஜி இப்படி இடம் கொடுத்தாரு. பாலசந்தர், இளையராஜால்லாம் இப்படி பெருந்தன்மையா இடம் கொடுப்பாங்க. இதுக்குப் பேரு குரு ஸ்தானம். இப்படி நல்ல விஷயங்களைக் காண்பிக்காம சண்டை போடறதையே காண்பிக்கறீங்க” என்று கமல் சொன்னது அருமையான விஷயம்.

Bigg Boss 7 Day 76

தனக்கு வந்த பாட்டு பற்றி விசித்ரா நெருடலுடன் சொல்ல, “அங்க இருந்துதான் நீங்க வெளியே வந்துட்டீங்களே” என்று ஆறுதல் சொன்னார் கமல். “எல்லோர் நடனத்தையும் ரசிச்சோம். ரொம்ப பாசிட்டிவ்வா இருந்தது” என்று பூர்ணிமா சொல்ல, “அதைத்தான் சொன்னேன். இங்க யாரும் எதிரிகள் கிடையாது. போட்டியாளர்கள் மட்டும்தான். மற்றவங்க வெற்றிக்கு நாமளும் உதவலாம். பார்க்க நல்லாயிருக்கும்” என்ற கமல், ‘ஜீன்ஸ்’ படத்தின் பாடலுக்கு ஐஸ்வர்யா ராயின் எதிர்முனை தேர்வை எடுத்துக் கொண்டு எலும்புக்கூடாக ஆடிய மாயாவின் காமெடியைப் பாராட்டினார். துபாய் ரிட்டர்ன் வடிவேலுவையும் பாராட்டிய கமல், “கலைஞர்கள் கையில் பணம் வந்துட்டா அது ஆளையே மாத்திடும்” என்று அடுத்த விசாரணைக்கான கண்ணீர்ப்புகை குண்டை இப்போதே எறிந்துவிட்டு பிரேக்கில் சென்றார்.

ரவீனாவின் கல்லுளி மங்கத்தனம்

பிரேக் முடிந்து திரும்பிய கமல், டிக்கெட் டு ஃபினாலே பாயின்ட்டை பூர்ணிமாவிற்குத் தியாகம் செய்த அர்ச்சனாவைப் பாராட்டினார். “தனியா ஆடற மாதிரியான மாற்றங்கள் அவங்க கிட்ட தெரியுது. அதைப் பாராட்டும் விதமாகத் தந்தேன்” என்றார் அர்ச்சனா. டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்கள் செய்த ‘உடான்ஸ்’ விஷயத்திற்கு வந்த கமல் “பிக் பாஸ் வெறி பிடிச்ச மாதிரி very very very…ன்னு வருத்தப்பட்டாரே?” என்று ஆரம்பிக்க குற்றவுணர்வில் அனைவரும் தலை கவிழ்ந்தார்கள்.

ஆரம்பத்திலேயே கையைத் தூக்கி ரவீனா அப்ரூவர் ஆகிவிட்டார். “அது தப்புன்னே எனக்கு முதல்ல தெரியல. ஸ்ட்ராட்டஜின்னு கூட யோசிக்கலை. எதையும் யோசிக்காம அப்படியே கொடுத்துட்டேன்” என்று சாதித்தார். இதர விஷயங்களில் தெளிவாக யோசிக்கும் ரவீனாவிற்கு இது கூட புரியாது என்பது நம்பும்படியாக இல்லை. குழந்தை பாவனையில் ரவீனா நிறைய விஷயங்களைத் தந்திரமாகச் செய்கிறார். மணிக்கு இப்படி வெளிப்படையான ஆதரவைத் தருவது ஒட்டுமொத்த ஆட்டத்தையும் பாழ்படுத்தும், மணிக்கும் கூட அது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூடவா தெரியாது?!

“நான் டவுன் ஆனதுக்கு மத்தவங்கதான் காரணம். அள்ளிக் கொடுக்கலைன்னாலும் கிள்ளி கூட கொடுக்கறதில்ல. என்னை ஒதுக்கி வெச்சிடறாங்க” என்று மற்றவர்களை குறை சொன்னார் சுரேஷ். “யாருக்கும் கொடுக்கலாம். கொடுக்காமயும் இருக்கலாம். இப்படி ரூல் இருந்தது. ரவீனா எல்லாத்தையும் கொடுத்தது எனக்கு டிஸ்டர்ப் ஆயிட்டே இருந்தது” என்று குற்றவுணர்வுடன் சொன்னார் மணி.

Bigg Boss 7 Day 76

“மத்தவங்க ஃபர்பாமன்ஸ் பார்க்காமயே எப்படி முடிவு பண்ண முடியும்?” என்று கமல் கேட்டது சரியானது. “எல்லாக் காசையும் நான் மத்தவங்களுக்குக் கொடுத்துட்டேன்” என்று அர்ச்சனாவும் விசித்ராவும் தாங்கள் நேர்மையாக ஆடியதைப் பதிவு செய்தார்கள். “எல்லா ஆட்டமும் முடிஞ்சப்புறம் கடைசியா முடிவு பண்ணிக்கலாம்ன்னு வாங்கி வெச்சேன். ஆனா எல்லா ஆட்டத்தையும் ரவீனா என்ஜாய் பண்ணிப் பார்த்து முடிச்சாலும், மணி ஆடினதுதான் நல்லா இருந்ததுன்னு அப்பவும் சாதிச்சாங்க” என்று வருத்தப்பட்டார் விஜய்.

“சுரேஷூம் எல்லாப் பணத்தையும் கொடுத்துட்டாரு” என்று நிக்சன் குற்றம் சாட்ட, “யார் சொன்னது… நான்தான் வெச்சிருந்தேன்” என்று இதை மறுத்தார் சுரேஷ். “எங்க படம் போட்ட பணம்தான் செல்லும்ன்னு முதல்ல தெரியாது. விஜய் கிட்ட கொடுத்துட்டோம்” என்றார் நிக்சன். அதன் பிறகு எழுந்து நின்ற மாயா வழக்கம் போல் முழு சரணாகதி தத்துவத்தைப் பின்பற்றியது அவரது வழக்கமான உத்தி. “எனக்கே அவமானமா இருக்கு சார். தப்பு செஞ்சவங்களை கேள்வி கேட்டிருக்கணும்” என்று கமல் பாய்வதற்கு முன்பு தன் மீது தானே சாட்டையால் அடித்துக் கொண்டது ஒரு நல்ல தப்பித்தல் தந்திரம்.

தவற்றை மறைத்து தர்க்கம் செய்து மாட்டிய பூர்ணிமா

“செஞ்சது தப்புதான்” என்று விக்ரமும் ஒப்புக் கொள்ள, கையைத் தூக்கிய பூர்ணிமா “என்னை ஸ்கிப் பண்ணி போயிட்டீங்களே சார்” என்று தயக்கமாகக் கேட்டதும் ‘மாட்டினியா… மவளே’ என்று அவரை வெளுத்து வாங்கினார் கமல். “என்ன வேணா சொல்லி சமாளிக்கலாம்ன்னு சொன்னீங்க… சொல்லுங்களேன்… எப்படிச் சமாளிக்கறீங்கறன்னு பார்ப்போம். பூ இருந்தா கொண்டாங்கப்பா. யார் காதுல வெக்கறாங்கன்னு பார்ப்போம். எங்க காதுல வெக்க முடியாது. இத்தனை மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. அத்தனை பூ பத்தாது” என்றெல்லாம் நையாண்டி கடப்பாறைகளை இறக்கினார் கமல். இதனால் பூர்ணிமாவின் முகம் இருள் அடைந்தது.

“என்னால சமாளிச்சிட முடியும்ன்னு மாயா சொன்னாங்க சார்… அதுக்குத்தான் என்னாலயும் முடியும்ன்னு சொன்னேன்” என்று வலையில் தானே சென்று இறுக்கமாக மாட்டிக் கொண்டார் பூர்ணிமா. “அதைத்தான் இப்ப பண்ணிட்டு இருக்கீங்க” என்று தூண்டிலை இன்னமும் இறுக்கினார் கமல். பூர்ணிமாவின் முகத்தில் உணர்ச்சிகள் தாண்டவம் ஆடின. போச்சு! எனில் அடுத்த வாரம் முழுக்க பூர்ணிமாவின் புலம்பலைக் கேட்க வேண்டியிருக்கும் போல.

“மணி… உங்களுக்கு ரவீனா பணம் தந்தது அன்பினாலா அல்லது உங்க திறமைக்காகவா?” என்று கமல் கேட்டது முக்கியமான கேள்வி. “மணிக்காக ரெண்டு பேர் விளையாடியது மாதிரி இருக்கு. ஆனால இதனால மணிக்கு அப்புறம் டான்ஸ் ஆடற வாய்ப்பு கிடைக்காம போச்சு பார்த்தீங்களா… ஒரு தப்பிற்கு எதிர்வினையா மேலும் தவறுகளை செஞ்சு கூட்டிட்டே போறீங்க…” என்று இரண்டு தரப்புகளையும் காட்டமாகக் கேள்வி கேட்டார் கமல். “விஜய் கிட்ட எல்லாத்தையும் கொடுத்துட்டு அதன் மூலமா பாயின்ட் வாங்கிக்கலாம்ன்னு நாங்க நெனச்சோம்” என்று நிக்சன் சொல்ல “நாங்கன்னா யாரு?” என்று கிடுக்கிப்பிடி போட்டார் கமல். நிக்சன், மாயா, பூர்ணிமா, விக்ரம் என்பதாக அந்தக் கூட்டணி இருந்தது.

Bigg Boss 7 Day 76

“ஒரு தப்பை அழிக்க இன்னொரு தப்பு செய்யலாமா… மணியோட வெற்றியை இதன் மூலம் நிறுத்திட்டீங்க… உங்களுக்கு நிறைய கரன்ஸி வந்ததே… நிக்சன்… ஒருவேளை மணி டான்ஸ்ல கலந்துட்டு இருந்தா அவர் வெற்றி பெற வாய்ப்பு இருந்ததில்லையா?” என்று கமல் லாஜிக்காக மடக்க, அதை நிக்சன் ஒப்புக் கொண்டார்.

“ரவீனா பண்ணது தப்புன்னு தெரிஞ்ச உங்களுக்கு, நீங்க செய்யறதும் தப்புன்னு தெரியலையா… பண்றதையெல்லாம் பண்ணிட்டு, வாரக் கடைசில என்ன வேணா சொல்லி சமாளிக்கலாம்… மன்னிப்பு கேட்கலாம்ன்னு நெனச்சா… அதுக்கு நான் ஆள் இல்லை.” என்று கமல் காட்டமாகச் சொன்னதும் பூர்ணிமாவின் தலை இன்னமும் கீழே தாழ்ந்தது.

‘தப்புன்னு யாராவது சொல்லியிருக்கணும்’ – சாதித்த ரவீனா

இவ்வளவு திட்டுகள் வாங்கிய பிறகும் ரவீனா எழுந்து ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கணும்… கல்லுளிமங்கத்தனம் என்பது அதுதான்! ஒட்டு மொத்த தவற்றுக்கும் தான்தான் காரணம் என்பதை அவர் உண்மையாகவே உணரவில்லை என்பதற்கான நிரூபணம் அது. “நிக்சன் என்கிட்ட நல்லாத்தான் பேசிட்டு இருந்தான். அவன் கூட இது தப்புன்னு என்கிட்ட சொல்லலை. சொல்லியிருந்தா நான் மாத்தி ஆடியிருப்பேன்” என்று இன்னொருவரின் மீதுதான் பழி போட முயன்றார் ரவீனா. “அதான் அர்ச்சனா சொல்லியும் நீங்க கேக்கலையே?” என்று கமல் மடக்க “ஸ்ட்ராங்கா சொல்லலை” என்று இன்னமும் சாதிக்க முயன்ற ரவீனாவை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

“ஸ்ட்ராங்கான்னா எப்படி சொல்லணும்… அந்த தப்பை நான் பண்ணியிருந்தா நீங்க மன்னிப்பீங்களா… ஒருத்தருக்கு பாரபட்சம் காட்டி கோப்பையை அவர்கிட்ட கொடுத்துட்டா என்னை விட்டுடுவீ்ங்களா… அது கூட புரியாத அளவிற்கு நீங்க குழந்தையா… நீங்க செஞ்சது மணிக்குப் பெரிய பாதகத்தை ஏற்படுத்திடுச்சு… மத்தவங்க ஆட்டத்தையும் கெடுத்து! பெரிய ஸ்பாயிலரா ஆகிட்டீங்க…” என்று கமல் இறங்கி அடித்தாலும் சிரித்த முகம் மாறாமல் திறமையாக இருந்தார் ரவீனா.

“பினாலே நெருங்குது. அவங்க அவங்க ஆட்டத்தை அவங்கவங்க ஆடுங்க” என்று கமல் சொல்ல, தயக்கத்துடன் எழுந்த பூர்ணிமா “சாரி சார்” என்றார். தர்க்கம் செய்யாமல் தவற்றை ஒப்புக் கொள்வதுதான் சிறந்த வழி என்பது இப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அடுத்து கமல் சொன்னது உண்மையிலேயே ஒரு நேரடித் தாக்குதல். கமல் பற்றி பூர்ணிமா அலட்சியமாகப் பேசுவதெல்லாம் அவருக்கு உண்மையாகவே கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை உணர முடிந்தது. போலவே அவர் மீது வெளியே எழும் கடுமையான விமர்சனங்களும்.

Bigg Boss 7 Day 76

“Mind your language… Plan your game. இங்க யார் மேலயும் எனக்கு ஃபேவரைட்டிஸம் கிடையாது. என்னோட ஃபேவரைட் மக்கள்தான் (கைத்தட்டல்). அடுத்தது நான். அப்புறம்தான் நீங்க. அது கூட ஒரே உருவமாத்தான் தெரியறீங்க. உங்க நடிப்புத் திறமையையெல்லாம் வெளியே வந்து காட்டுங்க. ‘இந்தப் பையன் நல்லா டான்ஸ் ஆடினான்ல’ன்னு வெளிய பார்த்தா உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும்” என்ற கமல் இறுக்கமான முகத்துடன் பிரேக்கில் சென்றார். ‘ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ என்று புன்னகையுடன் சொல்கிற வழக்கமான வசனத்தைச் சொல்லவில்லை.

“நான் செஞ்சது தப்புன்னே ஆரம்பத்துல தெரியல” என்று அதே பல்லவியை இன்னமும் திறமையாகப் பாடிக் கொண்டிருந்த ரவீனா, “இனிமே உங்களுக்காக ஆடாம இருக்கறதுதான் உங்களுக்கு நல்லது போல” என்று மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (ஹப்பாடா! ஹாசினிக்கு இப்பவாவது புரிஞ்சுதே!).

கமலின் ஆம்லேட் பசி

பிரேக் முடிந்து திரும்பிய கமல், எவிக்ஷன் கார்டுடன் நுழைய மக்கள் திகைப்படைந்தார்கள். “ரொம்ப பசிக்குது. ரெண்டு இல்லைன்னா… மூணு முட்டை போட்ட ஆம்லேட் கூட சாப்பிடுவேன்” என்று மிட் வீக் எவிக்ஷனைத் தாண்டி, மேலும் இரண்டு எவிக்ஷன்கள் இருக்கலாம் என்கிற ஜெர்க்கைத் தந்தார் கமல். “சார்… அதிகமா சாப்பிடாம டயட்ல இருங்க. அதுதான் ஹெல்த்திற்கு நல்லது” என்பதைத் தயங்கியபடியே சொன்னார் விஷ்ணு.

“யாரு போவாங்க” என்கிற வழக்கமான ஆட்டத்தை கமல் கையில் எடுக்க, சுரேஷின் முறை வரும் போது “வீட்டுக்குப் போகணும்ன்னு நான்தான் சொல்லுவேன். நானா இருக்கலாம்… இல்லைன்னா விஷ்ணுவா இருக்கலாம்” என்று அந்தப் பக்கம் கோர்த்துவிட்டார். காரணம் கேட்டதற்கு “என்னவோ கேப்டன்சியாமே… அதுல விஷ்ணு சரியா பண்ணலைன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க” என்பது போல் தனக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லை என்பது போலவே பேசினார் சுரேஷ்.

விஷ்ணு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எவிக்ஷன் கார்டை நீட்டினார் கமல். அதில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருந்தது. “கேட்டு திறக்கும். அந்த வழியா வாங்க. மதில் மேல ஏற வேணாம்” என்று கிண்டலடித்தார் கமல்.

Bigg Boss 7 Day 76

மற்றவர்கள் அனைவரிடமும் கட்டியணைத்து விடைபெற்ற சுரேஷ், விசித்ராவைத் தவிர்த்தது போல் இருந்தது. விசித்ராவும் இறுக்கமான முகத்துடன் தள்ளி நின்று கொண்டிருந்தார். யார் சென்றாலும் இம்சை தந்து நாணயங்களைப் பெற்ற சுரேஷ், ‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ கதையாக, இப்போது அவற்றைத் திருப்பித் தர வேண்டிய நேரம். விசித்ராவிடம் ஒரு நாணயத்தை நீட்டி தன்னுடைய நாணயத்தைக் காட்ட முயன்றார் சுரேஷ். ‘அய்யோ எனக்கா” என்று மறுத்தார் விசித்ரா. ரவீனா, மாயா, விஷ்ணு ஆகியோருக்கும் தலா ஒவ்வொரு நாணயம் தரப்பட்டது.

கண்ணீர் விடுவதைத் தவிர்த்து உருக்கமாகப் பேசி விடைபெற்ற சுரேஷ், “எல்லோரும் பால் பாயாசம் சாப்பிடுங்க. மேடம் வெச்சுக் கொடுப்பாங்க” என்று கிளம்பும் போது குத்தலாகப் பேசியதால் விசித்ராவின் முகம் மாறியது. சுரேஷிடம் உள்ள கெட்ட வழக்கங்களில் இதுவும் ஒன்று. அசந்தர்ப்பமாக எதையாவது விவஸ்தையின்றி சொல்லி விடுவார்.

சுரேஷ் பெருந்தன்மையாக நடந்திருக்கலாமோ?

மேடைக்கு வந்த சுரேஷிடம் “தாமரை இலை தண்ணீர் மாதிரியே இருந்துட்டீங்களே” என்று கமல் விசாரிக்க, “சண்டை, சச்சரவுல்லாம் வேணாம்ன்னு தள்ளி இருந்துட்டேன் சார்” என்று சுரேஷ் பதில் அளிக்க “சரி… மத்தவங்களைப் பத்தி உங்க அபிப்ராயங்களை இப்ப சொல்லுங்க. அவங்க முன்னாடி சொல்ற தயக்கம் வேணாம்” என்று கமல் உசுப்பி விட, “அவங்க முன்னாடியும் சொல்லுவேன். எனக்கென்ன பயம்?” என்பது போல் பழைய கூல் சுரேஷ் வெளியே வந்தார்.

கமல் குரல் மாதிரி மிமிக்ரி செய்து விட்டு சுரேஷ் சொன்ன அபிப்ராயங்களில் பெருந்தன்மைக்குப் பதிலாக அவரது சார்பு மனப்பான்மைதான் தெரிந்தது. தனக்குப் பிடிக்காதவர்களின் மீது நையாண்டி ஊசிகளைப் பலமாக இறக்கினார். தனக்குப் பிடித்தவர்களை “நன்றாக விளையாடினால் கமல் கையைத் தூக்குவார்” என்று எல்லோருக்கும் சொல்ல “ஒரு கையைத்தான் தூக்க முடியும்” என்று காமெடி செய்தார் கமல்.

‘உண்மையான முகத்தைக் காட்டும்மா’ என்று மாயாவிற்கும் ‘மாயாக்கா… பூர்ணிமாக்கா’ன்னு போறதை நிப்பாட்டு’ என்று நிக்சனிற்கும் ‘ஷூட்டிங் வந்த மாதிரியே இருக்காங்க. கேமராவைப் பார்த்துதான் சாப்பிடறாங்க’ என்று விசித்ராவிற்கும் ‘ஒருத்தரைப் பிடிக்கலைன்னா சண்டை போட்டுட்டே இருக்காத’ என்று அர்ச்சனாவிற்கும் சொன்னார் சுரேஷ். கடைசியாக ‘நிக்சன் நல்லா விளையாடு, அந்த விளையாட்டு இல்ல’ என்றது ரசிக்கும்படியாக இல்லை.

Bigg Boss 7 Day 76

“இந்த சேட்டையெல்லாம் உள்ளே இருக்கும்போது பண்ணியிருக்கலாமே?” என்ற கமலிடம், “என்னை மாத்திட்டீங்க சார். எனக்கே நல்லா தெரியுது. உங்க முன்னாடியே சொல்லக்கூடாது” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னார் சுரேஷ். அந்த மாற்றம் வெளியில் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். எனில் இனிமேலாவது மலினமான சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பாரா? சிம்பு பெயரையும் மறக்காமல் சொல்லிவிட்டு தடுமாறி இறங்கிச் சென்றார் சுரேஷ். பிறகு கமலும் விடைபெற்றுக் கொண்டார்.

“சுரேஷ் பேசற மாதிரியா நாம நடந்துக்கறோம்?” என்று நிக்சனும் விசித்ராவும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். வீட்டை விட்டு செல்லும் போதாவது ஒருவரிடமுள்ள நற்குணங்களைச் சொல்லிவிட்டு கிளம்புவதுதான் மரபு. அதற்கு சுரேஷிற்கு மனமில்லாமல் குத்தல்களை இறக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

அடுத்த எபிசோடில் கமல் இன்னொரு ஆம்லேட் சாப்பிடும் பசியில் இருக்கிறாரா, அல்லது முட்டைகளை அடைகாத்து விட்டு வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours