Bigg Boss 7 Day 75: டான்ஸ் மாரத்தான்; சபதம் எடுத்த தினேஷ்; ஸ்ட்ராட்டஜி குறித்து மாயா சொன்ன சீக்ரெட்!

Estimated read time 2 min read

இது எழுபத்தைந்தாவது நாள். வன ஆர்வலர் சுரேஷ், இந்த வாரம் தலையில் புறா கூடு வைத்திருந்த ராசியோ, என்னமோ, வீடு சர்ச்சையின்றி பெரும்பாலும் அமைதியாக இருந்தது. ‘இப்படியே ரெண்டு நாளைக் கொண்டு போய் முடிச்சிடுங்கப்பா’ என்று கேப்டன் மணி கூட மகிழ்ச்சியடைந்தார். அந்தளவிற்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி.

ஆனால் குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல, சென்டிமென்ட் ஆக பேசி கலங்கி முடித்த பிறகு ‘அடுத்த வாரம் யாரைத் தூக்கலாம்?’ என்று எபிசோடின் இறுதியில் ஆவேசமாகத் திட்டமிடவும் இவர்கள் தவறவில்லை. இது தவிர ரவீனாவின் மைக் மரணம் அடைந்த துர்சம்பவமும் நடந்தது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘லியோ’ திரைப்படத்தின் மூலம் புத்துயிர்ப்பு கிடைத்த ‘கரு கரு கருப்பாயி’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. நீண்ட நாள்கள் கழித்து ‘வேக் அப்’ பாடலைக் காண்பிக்கிறார்கள். காலையில் அலாரம் வைத்து எழுந்து, போர்வையில் புதைந்து மீண்டும் தூங்கிய விக்ரமை நாய் குலைத்து காட்டிக் கொடுக்க, “உஷாரா இருக்கணும்டா தம்பி. மாயா, தினேஷ், அர்ச்சனா கிட்டலாம் மாற்றம் தெரியுது. அடுத்த வாரம் நிச்சயம் செம அட்டாக் இருக்கும்” என்று எச்சரித்தார் விசித்ரா. அவருடைய யூகம் சரியானது என்பது எபிசோடின் இறுதியில் தெரிந்தது.

விசித்ரா

விக்ரமிற்கு ஒரு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. தூங்கியதற்காக அல்ல. ஆறு ஸ்டார்கள் பெற்று முன்னிலையில் இருப்பதற்காக. கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை வைத்து ஒரு விளம்பர டாஸ்க். இதில் நீதிபதிகளாக இருந்த அர்ச்சனாவிற்கும் ரவீனாவிற்கும் இடையில் ஓர் உரசல். ‘அர்ச்சனா கத்திட்டே இருக்காங்க’ என்று ரவீனா புகார் தெரிவிக்க ‘ஏ… இந்தாரு புள்ள… என்ட்ட ஒரண்ட இழுக்காத… வகுந்துடுவேன். பார்த்துக்க’ என்று ஈஸ்வரி மோடிலேயே இருந்தார் அர்ச்சனா. “நீ இந்தப் பக்கம் வந்து உக்காந்துக்க” என்று நடுவில் அமர்ந்து சமாதானம் செய்தார் மணி.

ரவீனாவின் மைக் இறந்து போன துக்க சம்பவம்

டாஸ்க் முடிந்தும் கோபம் அடங்காமல் இருந்தார் அர்ச்சனா. “என் வாய்ஸ் அப்படி. அதுக்கு நான் என்ன பண்றது… வந்ததுல இருந்து இதையே சொல்லிட்டு இருக்கா… நீ கூடத்தான் அடிக்கடி சிரிக்கற.. நான் ஏதாச்சும் சொல்லியிருக்கனா… She is very rude at times… என்னை மூட்அவுட் பண்ணிட்டா” என்றெல்லாம் புலம்பிய அர்ச்சனாவிடம் “ரெண்டு பேரும் உக்காந்து பேசித் தீர்த்துக்குங்க” என்று நிதானமான குரலில் சமாதானம் சொல்லிய மணிக்குப் பாராட்டு. கன்ஃபெஷன் அறைக்கு நிக்சனை அழைத்த பிக் பாஸ், “ஒரு துயரமான சம்பவம் நடந்திடுச்சு. ரவீனாவோட மைக் இயற்கை எய்தி விட்டது. இதற்கு முறைப்படி அஞ்சலி செலுத்திடுங்க” என்று சர்காஸ்டிக்காகச் சொன்னார். “அப்ரண்டீஸ்களா… ஒரு மைக் விலை எவ்வளவு தெரியுமா… சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா… எடுபட்ட பயலுவளா” என்பதுதான் அவர் உணர்த்த விரும்பிய செய்தி.

 பிணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த நிக்சன் அதே சர்காஸ்டிக்கை அருமையாக பின்பற்றி உலகத்திற்கு அந்த துக்கமான செய்தியை தெரிவிக்க மக்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை. ‘ரொம்ப கத்தறாங்க’ என்று சற்று முன்னர்தான் அர்ச்சனாவின் குரலைப் பற்றி ரவீனா புகார் சொல்லியிருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாக இப்படியொரு ட்விஸ்ட். ‘சாரி பிக் பாஸ்’ என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு மன்னிப்பு கோரினார் ரவீனா.

விக்ரம், மாயா, ரவீனா, விசித்ரா

‘முகத்தை கடைசியா பார்க்கறவங்க பார்த்துக்கங்க’ என்று நிக்சன் சொல்ல, இறந்த மைக்கிற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு சங்குச்சத்தம் கேட்க, ரகளையான தாளத்துடன் சவ ஊர்வலம் கிளம்பியது. பிறகு அது வரவேற்பறையில் பொதுமக்கள் மரியாதை செலுத்தும் விதமாக வைக்கப்பட்டது. மைக் இறந்ததை சிலர் காமெடியாக்கியதால் பிக் பாஸிற்கு வருத்தம் வந்திருக்கும். “இந்த மைக்தான் உங்க குரல்களை வெளியுலகத்திற்கு கொண்டு சேர்த்துச்சு… உங்கள் கருத்துகள் இதன் மூலம்தான் வெளிப்பட்டன. அதை மிதிச்சீங்க. அதன் மேல புரண்டீங்க. தூக்கிப் போட்டீங்க… அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்” என்று மைக் மரண நிகழ்வை ரொமான்டிசைஸ் செய்தார். புது மைக்கிற்கான செலவுதான் பிக் பாஸின் குரலில் விதம் விதமாக வெளிப்பட்டது. பிக் பாஸ் பேசுவதைக் கேட்டு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாலும் ‘இதுதானே எங்களை ரகசியம் பேச விடாம செய்யுது… எழவு செத்தொழியட்டும்’ என்பதே பலரின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.

சிரிப்புடன் நடந்த அஞ்சலிக் கூட்டம்

சிரிப்பை மறைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்த எழுந்து வந்தார் அர்ச்சனா. வீட்டில் வேறு எந்த சுவாரஸ்யமும் நடக்கவில்லை போல. எனவே இந்த அஞ்சலிக் கூட்ட காமெடியையே நீண்ட நேரத்திற்கு இழுத்தார்கள். “நான் பேசறது அடுத்தவங்க மைக்லயும் பிக்கப் ஆகற அளவுக்கு என் வாய்ஸ் இருக்கும். அப்படியொரு குரல்” என்றார் அர்ச்சனா. “உன்னை எப்படி சாகடிச்சேன்னு எனக்கே தெரியலை. சாரிடா தம்பி” என்று பாவனையாக வருத்தப்பட்டார் ரவீனா. மைக்கிற்கு மட்டும் பேசும் சக்தி இருந்திருந்தால் ரகளையான மொழியில் ரவீனாவிடம் திருப்பிப் பேசியிருக்கும்.

“நம்ம குரல் எத்தனை மட்டமா இருந்தாலும் அதை அழகா வெளியே கொண்டு போச்சு” என்று மிகையாகப் புகழ்ந்து கண் கசிந்து அழுகையை அடக்க முடியாமல் விஜய் நடிக்க சபை உருண்டு புரண்டு சிரித்தது. ‘ரெண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தலாம்’ என்று நிக்சன் சொல்ல அனைவரும் அடக்கிக் கொண்ட சிரிப்புடன் எழுந்து நின்றார்கள். ‘இன்னிக்கு செத்தா, நாளைக்கு பால்’ என்கிற இந்த நகைச்சுவை நாடகம் இத்துடன் நிறைவு பெற்றது. மைக்குக்கு ஒரு மனமார்ந்த அஞ்சலி.

 வீடு சுத்தம் செய்யும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். “விக்ரம் 2.0-ன்னு நீதானே ஆரம்பிச்சே?” என்று மணியிடம் ஆதங்கப்பட்டார் விக்ரம். “கேப்டனுக்கான பொறுப்பு, பிரச்னை போன்ற விஷயங்களுக்கு அவர்தான் சோதனை எலியா, ஒரு முன்னோடியா நமக்கு இருந்தார்’ என்று விக்ரமிற்கு ஆதரவு தந்தார் தினேஷ்.

மைக் செலவு கடுப்பை மறைத்துக் கொண்டு, 75 நாள்கள் நிறைவு ஆனதற்காக இரண்டு கிலோ Assorted Sweets அனுப்பியிருந்தார் பிக் பாஸ். இவர்கள் முன்னர் உருட்டிய லட்டு கூட அதில் கலந்திருக்கலாம். இத்தனை நாள்கள் இங்கு சிறைப்பட்டிருந்ததை மக்கள் கோரஸாகக் கட்டியணைத்து தேசபக்திப் பாடல் எல்லாம் பாடி கொண்டாடினார்கள். பிறகு ஒவ்வொருவராக வந்து வீடு தந்த அனுபவம் குறித்து சென்டிமென்ட்டாகப் பேசினார்கள்.

75 நாள்களைக் கடந்த அனுபவ உரைகள்

 முதலில் எழுந்து வந்த விஷ்ணு “இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்று ஆரம்பிக்க “எது… பூர்ணிமா கிட்ட பேசறதா?” என்று மைண்ட் வாய்ஸிற்குள் நினைத்துக் கொண்ட சுரேஷ் “எங்க மூஞ்சியையும் பார்த்து பேசுப்பா. அங்கயே பார்க்கற” என்று கிண்டல் செய்தார். “எனக்கும் நிறைய மைனஸ் பாயிண்ட்ஸ் இருந்தது. உங்களையெல்லாம் ஹர்ட் பண்ணியிருப்பேன். இனிமே பண்ண மாட்டேன்” என்று சொல்லி கலங்கினார் விஷ்ணு. “நீ அழும் போது க்யூட்டா இருக்கே” என்று பூர்ணிமா சொன்னாலும் சொல்லி விட்டார், சமயம் கிடைக்கும் போதெல்லாம் க்யூட் ஆகித் தொலைத்து நம்மை வதைக்கிறார் விஷ்ணு.

மாயா, பூர்ணிமா

“நான் ஒரு வெறி பிடிச்ச பிக் பாஸ் ஃபேன். இதில் சான்ஸ் கிடைச்சதை என்னால நம்ப முடியலை. சொகுசான சூழல்லயே வளர்ந்துட்டேன். யாராவது ஹர்ட் பண்ணா அங்க இருந்து ஓடிடுவேன். அவங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். ஆனா இங்க அவங்க கூடவே இருந்து ஃபேஸ் பண்ணி, சால்வ் பண்ற அனுபவம் எனக்கு புதுசா இருக்கு. இதையெல்லாம் இங்கதான் கத்துக்கிட்டேன். இது வெளியுலக வாழ்க்கைக்கு உபயோகமாகும்” என்று அர்ச்சனா சொன்னது சிறப்பு. ஒரு வரி கூட பேசத் தயங்கிய பெண், அடாவடி ‘ஈஸ்வரி’யாக முன்னேறியது நிச்சயம் ஒரு சாதனைதான்.

“கால்ல சக்கரம் கட்டி சுத்திக்கிட்டே இருப்பேன். ஒரே இடத்துல தங்கறது இதுதான் முதன்முறை” என்று அலுத்துக் கொண்டார் சுரேஷ். (இப்பல்லாம் நிறைய படம் OTT-லயே வந்துடுது!). “எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. இங்க யாரையாவது அண்ணான்னு கூப்பிட்டா அது உண்மையாலுமே ஃபீல் பண்ணிக் கூப்பிடறதுதான்” என்று உருக்கமாகப் பேசிய விஜய், தொடர முடியாமல் கலங்கினார். பிறகு “வெளில போன பிறகு இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடாதுன்னு நெனச்சேன். ஆனா முடியல. நண்பர்களைப் பார்க்க ஆர்வமா இருந்துச்சு. என்னமோ ஒரு உணர்வு சொல்லிச்சு. மீண்டும் இந்த வீட்டுக்குள்ள வருவேன்னு. அது நடந்துச்சு” என்று சொல்லி அமர்ந்தார் விஜய்.

தனது ஸ்ட்ராட்டஜி குறித்து மாயா சொன்ன சீக்ரெட்

 அடுத்ததாக எழுந்த மணி பாசிட்டிவ் வைப்ரேஷனில் பேசியது அழகு. “இந்த வீடு ஒரு வாரமா ரொம்ப அழகா மாறிடுச்சு. டான்ஸ் நிகழ்ச்சில உங்க அன்பு உண்மையா தெரிஞ்சது. அதுதான் நம்மோட உண்மையான முகம். இந்த வாரம் நாம மகிழ்ச்சியா இருந்தோம். நீங்க தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. ஒரு கேப்டனா அதுக்கான கிரெடிட்டை நான் எடுத்துக்கறேன். ரொம்ப பாசிட்டிவ்வா இருக்கு. இதே மாதிரி தொடர்ந்து இருங்க” என்று மணி பேசியது இந்தச் சமயத்தில் மிக மிக அவசியமானது. மணியின் தனித்தன்மையும் மெல்ல மெல்ல வெளியே தெரிவது சிறப்பான விஷயம்.

மாயா

அடுத்து எழுந்து வந்த மாயா “ஒரு சீக்ரெட் சொல்றேன்… நிக்சனும் ஐஷூவும் ஒரு சமயம் என்கிட்ட வந்து பேசினாங்க” என்று ஆரம்பிக்க நிக்சனின் முகத்தில் ஜெர்க் வந்தது. “ஏங்க… மறுபடியும் ஆரம்பிக்கறீங்க?” என்பது போலத் திகைத்தார். “இது என் சம்பந்தப்பட்ட சீக்ரெட்” என்று நிக்சனை அமைதிப்படுத்திய மாயா “ஒரு நாள் என்கிட்ட வந்து அவங்க பேசினாங்க… அவங்களுக்கு என்னைப் புரிஞ்சிடுச்சுன்னு நான் உணர்ந்த நாள் அது. அந்த நாள் எனக்கு முக்கியமானது. அந்த ரெண்டு பேர். அஃப்கோர்ஸ்… பூர்ணிமாவும் என்னைப் புரிந்த ஆள்” என்று தன் கேம் ஸ்ட்ராட்டஜி பற்றிச் சொல்லி விட்டுச் சென்றார் மாயா.

மற்ற போட்டியாளர்களைப் போலவே மாயாவும் நிறைய தவறுகள் செய்திருக்கலாம். எனக்கும் கூட அவர் மீது நிறைய அதிருப்திகளும் எரிச்சலும் தோன்றியதுண்டு. குறிப்பாக அவரது கேப்டன்சி வாரத்தில் இந்த எரிச்சல் உச்சக்கட்டத்திற்குச் சென்றது. ஆனால் மாயாவைத் தொடர்ந்து கவனிக்கும் போது ‘இந்த கேம் சுவாரஸ்யமாக நகர வேண்டும் என்பதற்காகத்தான் பல விஷயங்களை அவர் மெனக்கிட்டு செய்கிறார், அவப்பெயர் கிடைத்தாலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுத்து ஆடுகிறார்’ என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் பல விஷயங்கள் அவருக்கே பேக்ஃபயர் ஆவதால் எளிதில் கெட்ட பெயர் வாங்கி விடுகிறார். இந்த விஷயத்தில் மாயாவை ‘ஆண் பிரதீப்’ என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்ட்ராட்டஜிகளை பிளான் செய்கிறார். ஆனால் பிரதீப்பைப் புகழும் பலர், ஏன் மாயாவை இத்தனை தரக்குறைவாகத் தாக்குகிறார்கள் என்கிற மாய உளவியல்தான் புரியவில்லை. பூர்ணிமாவின் நட்பு உள்ளிட்ட விமர்சனங்கள் இருந்தாலும் மாயா இல்லையென்றால் இந்த ஆட்டம் எத்தனை சுவாரஸ்யத்தை இழக்கும் என்பதை அந்த வசையாளர்களால் உணரவே முடியவில்லையா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஓர் ஆண் செய்யும் போது பாராட்டும் அதே கூட்டம், பெண் தந்திரமாக ஆடினால் ஏன் இத்தனை வெறுப்பைக் கொட்ட வேண்டும்? எனில் இதன் பின்னுள்ளது ஆணாதிக்க வெறுப்பா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

P + M = டேஞ்சரஸ் என்பது உண்மையா?

 அடுத்து வந்த பூர்ணிமா, “பிக் பாஸ் வீட்லதான் இருக்கறனான்னு சில சமயத்துல திகைப்பாயிடும். இங்க அழவே கூடாதுன்னு நெனச்சு வந்தேன். ஆனா மாயா கிட்ட மட்டும்தான் ‘என்னால முடியல’ன்னு சொல்லி சொல்லி அழுவேன். அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கும். விஷ்ணு நல்லா பேசுவாரு. திடீர்ன்னு அன்பிரெண்ட் பண்ணிடுவாரு. இந்த வாரத்தோட வைப் நல்லாயிருந்தது. நான் விளையாடறதை நிறுத்திட்டேன். இந்த வாரத்துல நான் நானா இருந்தேன். விஷ்ணு அழுதப்ப அவர் மேல இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் போயிடுச்சு. நான் யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி. நீங்களும் என்னை ஹர்ட் பண்ணதை மன்னிச்சுடறேன். விஷ்ணு கிளாஸ் எடுக்கும் போது P+M = டேஞ்சரஸ்ன்னு சொன்னாரு. P = சிம்ப்ளி வேஸ்ட்டுன்னும் சொன்னாரு. மாயாவும் அதே மாதிரிதான். P+M = என்கிற கெமிக்கல் ஃபார்முலா எல்லொருக்கும் ஜாலியைத்தான் தரும்” என்று பேசி அமர்ந்தார். அது உண்மையும் கூட.

பூர்ணிமா

“ஒரு இக்கட்டான சூழல்ல இருந்த என்னை பிக் பாஸ் வாய்ப்புதான் காப்பாத்திடுச்சு. கமல் சார் பக்கத்துல நிக்கும் போது சினிமாவை நெருங்கிட்டனோன்னு தோணுச்சு. அந்த அளவிற்கு அதுவொரு கனவு. நான் பொதுவா அழ மாட்டேன். ஆனா யாராவது வெளியே போகும் போது உள்ளுக்குள்ள அழுகையா வரும்” என்றார் விக்ரம்.

 அடுத்து வந்த விசித்ராவின் பேச்சு ஆத்மார்த்தமாக இருந்தது. “இங்க ரெண்டு வாரத்துக்கு மேல இருக்க மாட்டேன்னு நெனச்சுதான் வந்தேன். ஆனா ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கேன். You all killed my ego. ‘I don’t trust you’ன்னு அர்ச்சனா ஒருமுறை சொன்னது உண்மையாவே எனக்கு ஹர்ட் ஆச்சு. நான் இங்க உண்மையாவே அன்பு செலுத்தியிருக்கேன்.

பிக் பாஸ் டைட்டில் விடவும் ‘அம்மா’ன்னு நீங்க உண்மையா கூப்பிடறதுதான் மகிழ்ச்சி. தினேஷ், சுரேஷ் கிட்ட மட்டும்தான் இன்னமும் கொஞ்சம் பிரச்னை இருக்கு” என்ற விசித்ரா “எங்களுக்கு ஏறத்தாழ ஒரே வயசுன்றது ஒரு காரணமா இருக்கலாம்” என்று சொல்ல அதைக் கேட்டு சம்பந்தப்பட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். தினேஷ் அவசரமான ஆட்சேபம் தெரிவித்தார்.

“ஓகே… நீங்க யூத்துதான்… ஒத்துக்கறேன்” என்று தினேஷை சமாதானப்படுத்தினார் விசித்ரா. “நான்தான் அவங்களுக்கு நாலு வாரமா நண்பனா இருந்தேன். இப்ப மாறிட்டேன் போல” என்று கசப்புடன் சிரித்தார் சுரேஷ். அடுத்து எழுந்த ரவீனா “எனக்கு நிறைய முறை லோவா ஃபீல் ஆகும். அப்பல்லாம் வெளிய போயிடணும்னு தோணும். மக்களா பார்த்து அனுப்பற வரைக்கும் விளையாடுவேன். வெளில போயும் நம்ம உறவு தொடரணும்” என்று முடித்தவர், பிறகு “அய்யோ சொல்ல மறந்துட்டேன். நான் அழும் போதெல்லாம் சப்போர்ட் பண்ணது மணிதான். வைல்ட் கார்டுல வந்து இந்த வீட்டைப் புரட்டிப் போட்ட நாயகி அர்ச்சனாவிற்கும் நன்றி” என்று சொல்லி அமர்ந்தார்.

அடுத்த வார நாமினேஷனைத் திட்டமிட்ட மக்கள்

 அடுத்து வந்த தினேஷ் எதைப் பற்றி பேசுகிறார் என்பதை உணர முடிந்தது. அவரது மணஉறவில் நிகழ்ந்த சிக்கல். “பிக் பாஸ் சீசன் ஆறு எனக்கு ரொம்ப கனெக்ட் ஆன விஷயம். சீசன் ஏழுலயாவது வரணும்ன்னு நெனச்சேன். நல்ல விஷயங்கள் நடக்க கொஞ்சம் தாமதம் ஆகும். இந்த வீட்டுக்குள்ள கொஞ்சம் லேட்டா வந்தேன். இந்த டைட்டிலை ஜெயிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. அப்ப நிறைய பேசுவேன். யோசிச்சு வெச்சிருக்கேன். வெளில நடந்த சில சர்ச்சைகளால என் இமேஜ் நிறைய மாறிடுச்சு. இந்த வீட்டின் மூலமா உண்மையான தினேஷ் யாருன்னு தெரியும்” என்று சொல்லி முடித்தார்.

Bigg Boss 7 – DAY 75

இத்தனை சென்டிமென்ட்டாக பேசி முடித்தாலும், அடுத்த வார தாக்குதலைப் பற்றி ஆங்காங்கே கொலைவெறியுடன் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். “கரப்பான்பூச்சிகளையெல்லாம் ஒழிக்கணும்” என்று பூச்சி மருந்து விளம்பரம் மாதிரி பேசிக் கொண்டிருந்தார் மாயா. (அந்தக் கிருமிகளைக் கொல்லுங்க!). “விச்சு, தினேஷ், சுரேஷ் மூணு பேரையும் தூக்கணும்” என்று மாயா சொன்னார்.

எத்தனை பல்ப் வாங்கினாலும் தனது பிளானிங்கை விஷ்ணு கைவிடுவதில்லை. “இல்லடா… நான் சொல்றேன் பாரு… விஜய்யை அடுத்த வாரம் பெட்டி தூக்க வைக்கணும்” என்றார் விஷ்ணு. பிஸிக்கல் டாஸ்க்கில் விஜய் எளிதாக வெல்ல வாய்ப்பிருக்கிறது என்பதால் அவரை முதலில் அகற்ற மக்கள் நினைக்கிறார்கள் போல. மேலும் வைல்ட் கார்டில் உள்ளே வந்தவர் ஜெயிப்பதற்கு இவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்.

மாயாவும் பூர்ணிமாவும் பெரிய வீட்டில் நீண்ட நேரம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்ததால் “கேப்டன்… மாயா ரொம்ப நேரம் அங்கேயே இருக்காங்க” என்று ரவீனா புகார் சொன்னார். “கொஞ்ச நேரம் சும்மா இருடா குண்டுப்பையா” என்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மணி சொன்னது சுவாரஸ்யமான காட்சி. “இப்பத்தான் சொல்லி முடிச்சு வந்து உக்காந்தேன். வீடு பாசிட்டிவ்வா இருக்கு. அப்படியே போகட்டும்ன்னு… திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க” என்று கேமராவைப் பார்த்து முனகினார் மணி. ‘கேப்டன்… என்னை அட்டாக் பண்றாங்க” என்று ரவீனா மீண்டும் ஹைடெசிபலில் கத்த “சாவு” என்று மணி ஜாலியாக சொன்னதற்கு வீடு கலகலத்தது.

Bigg Boss 7 – DAY 75

“என்னதிது… அவங்க வயசு கேட்டகிரில நம்மளயும் சேர்த்துட்டாங்க” என்று விசித்ரா குறித்து எரிச்சலுடன் சிரித்துக் கொண்டே சுரேஷிடம் சொன்னார் தினேஷ். பிறகு விஷ்ணுவிடம் “ரெண்டு ‘வி’யையும் அடுத்த வாரம் நிச்சயமா தூக்கிடணும். இந்த வாரம் மிஸ் ஆயிடுச்சு.” என்று சபதம் எடுத்தார் தினேஷ். அந்த இரண்டு வி – விசித்ரா மற்றும் விக்ரமா? அல்லது விஷ்ணுவிற்கே மறைமுகமாக வைத்த ஆப்பா? “நீ M + P-ஐ பார்த்துக்க” என்று விஷ்ணுவிடம் தினேஷ் சொன்னது யாரென்று நமக்கே தெரியும். ஆக, அடுத்த வார நாமினேஷன் கொலைவெறியுடன் களைகட்டும் என்று தெரிகிறது. நாமினேஷன் பற்றி பொதுவில் பேசக்கூடாது என்றாலும் இவர்கள் அடங்கவில்லை.

 டான்ஸ் மாரத்தான் கரன்சியில் நிகழ்ந்த பண மோசடி, மணியின் கேப்டன்சி போன்றவைத் தவிர விசாரிக்க இந்த வாரம் பெரிதான விஷயங்கள் இல்லை. எனவே ‘ஸ்டோர் ரூம்ல சில பொருள்கள் இருக்கு’ என்பதை வைத்தே வாரஇறுதியை கமல் ஓட்டி விடுவார் என்று தோன்றுகிறது. இந்த வாரம் யார் எலிமினேட் ஆகிறார்(கள்) என்பதும் முக்கியமான விஷயம். பார்ப்போம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours