சென்னை: பிரணவ் ஜுவல்லரி மோசடிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று போலீஸார் தெரிவித்ததையடுத்து தன்னை நம்பியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகையைத் தராமல் அந்த நிறுவனம் ஏமாற்றிய தாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன், அவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது திருச்சி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மதுரையில் உள்ள பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி மதன் சரணடைந்தார். அவரை 7 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்த பிரணவ் ஜுவல்லரியின் மற்றொரு உரிமையாளரும், மதனின் மனைவியுமான கார்த்திகாவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் அண்மையில் திருச்சியில் வைத்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் இந்தக் கடையின் விளம்பர தூதுவராக உள்ள பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் கார்த்திகா மற்றும் மதன் இருவரிடமும் நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கும், நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், “என்னை நம்பியவர்களுக்கும், என்னோடு நின்றவர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.