திருமணத்திற்குப் பெண் பார்க்க வரும் நபர்களைப் பல்வேறு காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிக்கும் தாயினால் (மௌனிக்கா) அவதியுறும் கலை (அம்மு அபிராமி), கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டாமென வக்கீல் சசியின் (வெற்றி) உதவியை நாடும் நேத்ரா (வித்யா பிரதீப்), திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலாகி ‘ஒருத்தருக்கு ஒருத்தர்’ என ‘கம்பேனியன் ஷிப்’ வாழ்க்கையை வாழ விரும்பும் நதி (ஷாலின் சோயா), காதலன் யஷ்வந்த்தின் (யஷ்வந்த் கிஷோர்) உதவியோடு நான்கு மாத கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்யப் போராடும் கீதா என நான்கு பெண்களின் திருமண வாழ்வைச் சுற்றியிருக்கும் சிக்கல்களைப் பேசுவதே இந்த ‘கண்ணகி’ படத்தின் கதை.
திருமண ஆசையில் கண்ணாடி பார்த்து அழகை ரசிப்பது, தந்தையின் உணர்வைப் புரிந்து உருகுவது என முற்பாதியில் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் அம்மு அபிராமி. ஆனால் அவரது தாயாக நடித்துள்ள மௌனிகாவின் நாடகத்தனமான நடிப்போடு கூட்டணி சேர்ந்து பிற்பாதியில் காணாமல் போகிறார். தந்தையாக மயில்சாமி உணர்ச்சிவயமிக்க காட்சிகளில் நியாயம் சேர்த்திருக்கிறார். வித்யா பிரதீப்பிடமிருந்து திருமண வாழ்வை எப்படியாவது காத்துக்கொள்ள வேண்டுமென்கிற கனமான பாத்திரத்துக்கான நடிப்பு மிஸ்ஸிங். வழக்குரைஞராக வரும் வெற்றிக்குப் படத்தில் பெரிதாக வேலை இல்லை.
இழுத்து இழுத்துப் பேசுவது, செயற்கையான உடல் மொழியென அனைவரையும் உதாசீனம் செய்யும் ஷாலின் சோயாவின் கதாபாத்திரம் பொறுமையைச் சோதிக்கிறது. அவரிடம் மல்லுக்கட்டும் ஆதேஷ் சுதாகர் நடிப்பிலும் மல்லுக்கட்டுகிறார். நான்கு மாத கர்ப்பிணியாக மென் சோகத்தோடு படம் முழுக்க வந்தாலும் பிரதான காட்சிகளில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் குறையேதும் இல்லை. அறிமுக நடிகராக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். ஒட்டுமொத்தமாக நிறைவற்ற நடிகர்கள் தேர்வால் படம் தத்தளிக்கிறது.
டைட்டில் கார்டில் ஒளிப்பதிவு ராம்ஜி என்று பார்த்தவுடன் வந்த எதிர்பார்ப்பை சில நிமிடங்களில் சுக்குநூறாக உடைத்திருக்கிறார். பல காட்சிகளில் மொபைல் கேமராவில் எடுத்தது போன்ற இரைச்சல்கள், கன்னா பின்னா என்று நகரும் சிங்கிள் ஷாட் கேமரா கோணங்கள், தேவையில்லாத குளோஸ்-அப்கள் எனப் படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறார். படத்தொகுப்பாளர் கே.சரத்குமார் நான்கு கதையை மாற்றி மாற்றிக் கோர்த்த விதத்தில் பல தாவல்கள். இதனாலேயே எந்தக் கதையையும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை. ஷான் ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசைக்கு அரவிந்த் சுந்தரோடு கூட்டணி சேர்ந்தாலும் உணர்வுகளை உணர்த்தும் கடமையைத் தாண்டி பல இடங்களில் அவசியமற்று வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள்.
பெண்கள் உணர்வுள்ள மனிதராகப் பார்க்கப்படாமல் மணவாழ்வின் பொருளாகப் பார்க்கப்படுவதையும், திருமணம் எனும் பெயரில் பெண்களுக்குச் சமூகம் கட்டமைத்திருக்கும் வன்முறைகளையும் அலசி ஆராய முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். தனித்தன்மையான கதை தேர்வு, தைரியமான வசனங்கள் (சில இடங்களில் மட்டும்), க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என அதில் சில பிளஸ் மார்க்கும் வாங்குகிறார். குறிப்பாக நான்கு கதைகளையும் க்ளைமாக்ஸில் ஒன்றிணைத்த ஐடியாவும் அது தொடர்பான ட்விஸ்ட்டும் எதிர்பாராத ஒன்று.
இருப்பினும் நடிகர்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என மைனஸ்களும் ஆக்கிரமிக்கின்றன. பல உணர்வுபூர்வமான காட்சிகள் மோசமான நடிப்பினால் வீணடிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே சொல்கின்ற கருத்தில் சரி, தவறு என்பதை விவாதிக்கும் இடத்திற்கே அது கூட்டிச் செல்ல மறுக்கிறது.
நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையின் தொடக்கம் நாயகியின் தாயாரையே எதிரியாகக் கட்டமைக்கிறது. அந்தத் தாயார் சாதியவாதியாகவும், வறட்டு கௌரவம் கொள்பவராகவும் ஆரம்பக் காட்சிகளில் காட்டிவிட்டு, அவர் ‘அப்பாவி’ என்பதை இரண்டாம் பாதியில் போகிற போக்கில் வாய்மொழியாகச் சொல்லி நகர்வது அநீதி. அவர் தன் தவற்றை உணர்ந்ததற்கான வலுவான காட்சிகளும் வசனங்களும் எங்குமே இடம்பெறவில்லை.
இரண்டாம் கதையின் பெண் மோசமான கணவனோடு வாழ்ந்தே தீருவேன் என்று அடம்பிடித்து “திருமணம் என்பது பாதுகாப்பு, அங்கீகாரம்” என்று கட்டுரை வசனங்கள் பேசுவது அபத்தம். அவரின் எண்ணங்கள் மாறுவதற்கான வெளியும், அதைப் பறைசாற்றும் காட்சிகளும் மிஸ்ஸிங்! சொல்லப்போனால் இயக்குநருக்கே விவாகரத்து சரியா, தவறா என்கிற குழப்பம் ஊசலாடுகிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் காதலோடு ஒன்றாக வாழ்வதுதான் ‘லிவ்விங் ரிலேஷன்ஷிப்’. ‘காதலும் இல்லை கல்யாணமும் இல்லை ஒன்றாக வாழுவோம்’ எனப் புதிதாக ஒரு முயற்சியில் மூன்றாம் கதை நகர்கிறது. அந்த பெண் செய்கின்ற செயல்கள் யாவும் எதிர்த்தரப்பில் இருப்பவர்களுக்குத் தொந்தரவு தருபவையாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உளவியல் ரீதியாக ‘அவளுக்கென்று ஒரு கதை இருக்கிறது’ என்கிற வசனங்கள் கொடுக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டாலும், ‘எதிர்த்தரப்பில் இருக்கும் மனிதரின் நியாயத்துக்கும் ஒரு கதை இருக்கும்தானே?’ என்ற கேள்வியையே படத்தின் காட்சிகள் கேட்க வைக்கின்றன. பாதிக்கப்பட்டவர் பெண்தான் என்றால், அதற்கான சமூக காரணங்களோ, ஆணாதிக்க பின்னணியோ விவாதிக்கப்படவில்லை.
இப்படி ஊசலாடும் கேள்விகளுக்கு மத்தியில் கருக்கலைப்பு வேண்டுமா, வேண்டாமா என்கிற விவாதத்துடன் நகரும் நான்காவது கதையும் தீர்க்கமான ஒரு விடையை, ஒரு பார்வையைச் சொல்லவே இல்லை. அந்தச் சூழலின் உளவியல் சிக்கல்களும் மேம்போக்காகவே கையாளப்பட்டுள்ளன. இப்படி நான்கு பெண்களின் பிரச்னைகள் அலசப்பட்ட அளவுக்கு அதற்கான தீர்வுகள், அதை விமர்சிக்கும் முதிர்ச்சி எதுவுமே காட்சிகளில் இல்லை என்பது ஏமாற்றமே!
மொத்தத்தில் தனித்துவமான கதைத்தேர்வு என்றாலும் ஊசலாடும் பாலின சமத்துவ புரிதலாலும், நடிப்பு, ஒளிப்பதிவு என மோசமான ஆக்கத்தினாலும் படத்தைப் பார்க்கும் நபர்களின் நேரத்தை எரிக்கிறாள் இந்த `கண்ணகி’.
+ There are no comments
Add yours