விஜய்யின் ‘தளபதி 68’ படப்பிடிப்பு, டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. ‘லியோ’ படத்திற்குப் பிறகு, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இது அவரது 68 படம் என்பதால், அதனை விஜய்யின் ரசிகர்கள் ‘தளபதி 68’ என அழைத்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்தை அடுத்து இப்போது பக்கத்து மாநிலத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.
‘லியோ’ படத்தில் சஞ்சய்தத், அர்ஜூன், மிஷ்கின் என நடிகர்கள் பட்டாளம் களை கட்டியது போல, ‘தளபதி 68’ படத்திலும் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். பிரசாந்த், பிரபு தேவா, ‘மைக்’ மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் எனப் பலர் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் ‘புதிய கீதை’ படத்திற்குப் பின், விஜய்யுடன் யுவன் இணைந்திருக்கிறார்.
ஓப்பனிங் பாடல் கம்போஸிங்கை சமீபத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார் யுவன். அதை மதன் கார்க்கி எழுதியிருந்தார். விஜய் இதில் அப்பா – மகன் என இரண்டு கெட்டப்களில் வருகிறார். மகன் கதாபாத்திரத்தில் இளமையான தோற்றத்திற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் உள்ள வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தின் ஆலோசனைப்படி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதன் படப்பிடிப்பு இப்போது ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. இளமையான கெட்டப்பில் விஜய் அசத்தி வருகிறார் என்றும், இது ஃப்ளாஷ்பேக் போர்ஷன் என்றும் சொல்கிறார்கள். ‘துப்பாக்கி’ படத்திற்கு பின் ஜெயராமுடன் நடிக்கிறார் விஜய். சென்னை ஷெட்யூலில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா எனப் பலரும் பங்கேற்றனர். அதைப் போல தாய்லாந்து படப்பிடிப்பில் ஜெயராம், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி எனப் பலரின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கே சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்யின் ஓப்பனிங் பாடலும், ஹைதராபாத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் அதிரடி ஆட்டத்தைப் போட வைக்கும் பாடலாக யுவன் கொடுத்திருக்கிறாராம். ஹைதராபாத் ஷெட்யூலை தொடர்ந்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours