வீட்டிலிருந்து எஸ்கேப் ஆக முயன்ற சுரேஷ். நாடகமா, உண்மையான சோகமா?
நாள் 73. ஏதோவொரு யோசனையில் இங்கும் அங்குமாக உலாத்திக் கொண்டிருந்த சுரேஷ், சட்டென்று தீர்மானித்து ஒரு சேரைக் கொண்டு வந்து போட்டு சுவற்றின் மீது கால் வைத்து ஏறத்துவங்கி விட்டார். இயற்கை அழைப்பிற்காக வெளியே வந்த மணி, இதைப் பார்த்து விட்டு ஓடி வந்து அவரை இறக்கி விட்டார். ‘கீழ விழுந்தா என்னத்துக்கு ஆவறது?” என்று மணி கேட்டது சரியானது.
கன்ஃபெஷன் ரூமிற்கு சுரேஷை அழைத்த பிக் பாஸ் “என்ன டிரை பண்றீங்க?… விளைவுகள் விபரீதமாகியிருக்குமே.. இத்தனை நாள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகியிருக்குமே?” என்று அழுத்தமான உபதேசத்தை முன்வைக்க “பிழைக்கத் தெரியாதவனாவே இருந்துட்டேன்” என்று சுயபச்சாதாபத்துடன் அழத் துவங்கி விட்டார் சுரேஷ். “இப்ப நீங்க வெளில போனாலும் அதையேதான் சொல்வாங்க” என்று பிக் பாஸ் சொன்னது சரியானது. “ஃப்ரீயா வுட்டா பயங்கரமா காமெடி பண்ணி விளையாடுவேன்” என்றார் சுரேஷ். எனில் எது அவரைத் தடுக்கிறது? ‘ஸாரி சார்.. இப்படிப் பண்ணமாட்டேன்” என்று கண்ணைத் துடைத்தபடி வீட்டுக்குள் சென்றார் சுரேஷ்.
வெளியில் இருக்கும் போது திரைப்பட பிரமோஷன்களுக்கு தானே முன் வந்து பாடுபடும் சுரேஷ் “உங்களுக்காக நான் இவ்வளவு சிரமப்படறேன். எனக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு யாருக்காவது தோணுதா?” என்று திரையுலகை நோக்கி ஆதங்கத்துடன் கேட்பது வழக்கம். பிக் பாஸ் என்கிற மிகப் பெரிய வாய்ப்பை இப்படி சுவரேறித் தாண்டிச் செல்வதின் மூலம் வீணடிப்பது அதற்கு முரணாக அல்லவா இருக்கிறது?!
அனைத்தையும் விட சுதந்திரம் என்கிற விஷயம்தான் ஒரு மனிதனுக்கு முக்கியம் என்பதுதான் சுரேஷின் செயல் மூலம் புரிகிறது. ஒரு மனிதனை அடைத்து வைத்தால் அங்கிருந்து வெளியேறவே விரும்புவான். அதனால்தான் சிறைத்தண்டனைக்கு சமூகம் அஞ்சுகிறது.
சுரேஷ் வெளியில் செயல்படும் விதத்தைப் பார்த்து ‘அடாவடியான ஆசாமி, துடுக்குத்தனமாக இயங்குபவர், வாய்க்கொழுப்பு பிடித்தவர்’ என்கிற மாதிரியான பிம்பம்தான் நமக்கு இருந்திருக்கும். ஆனால் பிக் பாஸ் வீடு யாராக இருந்தாலும் அவரின் இன்னொரு பக்க முகத்தையும் அம்பலப்படுத்தி விடுகிறது. முன்னணி ஹீரோக்கள் திரையில் செய்யும் சாகசங்களை உண்மை என்று நம்பி விடும் அப்பாவி ரசிகர்கள், அவர்களை கடவுள்களாகவே தொழுகிறார்கள். அப்படிப்பட்ட ஸ்டார்களை கொண்டு வந்து பிக் பாஸ் வீட்டில் போட்டால், இரண்டே நாளில் அவர்களின் அவதாரங்கள் கலைந்து ஒப்பனைகள் பல்லிளித்து விடும்.
+ There are no comments
Add yours