‘இந்த எபிசோடில் எத்தனை முறை ‘ஸாரி’ என்கிற வார்த்தை சொல்லப்பட்டது? சரியான பதில் சொல்பவருக்கு ———— உபயோகித்த சோப்பு டப்பா பரிசாக அளிக்கப்படும்’ என்று ஒரு போட்டியே அறிவித்து விடலாம் என்கிற அளவிற்கு மன்னிப்புகள் இறைபட்டன. இது நல்ல விஷயம்தான்.
ஆனால் விக்ரமன் திரைப்படம் போல, அனைத்துமே நல்ல கேரக்டர்களாக மாறி விட்டால் அல்லது மாறியதுபோல் பாவனை செய்தால் நமக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிடும். சண்டை, சச்சரவு இல்லாமல் இந்த எபிசோடு முடிந்தது. கடிகார டாஸ்க் என்பதால் நாள் முழுக்க மக்கள் பிஸியாக இருந்ததாலோ என்னமோ? உருப்படியாக ஏதாவதொரு வேலையைச் செய்வதில் கவனம் செலுத்தினால் வம்புகள் குறைகின்றன என்பது இதன் நீதி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
தான் திருந்தியதோடு, மற்றவர்களையும் திருத்தும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ஊடல் மோடில் இருக்கும் பூர்ணிமாவையும் விஷ்ணுவையும் இணைத்து வைக்கும் பாலத்தைக் கட்டும் என்ஜினியர் ஆக மாறியிருந்தார். (பாலம் இடிந்து விழாமல் இருக்குமா?!) “நான் வாங்கின திட்டுக்கெல்லாம் நீதான் காரணம்” என்கிற செல்லச் சிணுங்கலுடன் புகார் சொன்னார் விஷ்ணு. நடந்ததை அப்படியே விடாமல் பேசினால்தான் அவருக்கு மன பாரம் இறங்குமாம்.
விஷ்ணு கேட்டுக் கொண்டபடி அர்ச்சனா அங்கிருந்து விலக “அதென்ன..? என்னாலதான் எல்லாம்ன்னு பழியைப் போடறீங்க. உங்க நல்லதுக்குத்தான் நான் பண்ணேன். அது உங்களுக்குப் புரியலையா?” என்று பூர்ணிமா ஆதங்கப்பட “ஸாரி.. ஒத்துக்கறேன்… அதாவது ஒண்ணு.. சொல்லணும் சரி. வெளில போய் சொல்லிக்கறேன்… இங்க எது சொன்னாலும் தப்பாயிடும்போல” என்று தலையைப் பிய்த்து வார்த்தைகள் கோர்வையாக வராமல் தடுமாறினார் விஷ்ணு.
கமலிடம் வாங்கிய திட்டா, உள்ளே இருக்கும் ஜெஸ்ஸியா.. பூர்ணிமாவை ஏமாற்றிய குற்றவுணர்வா.. எது அவரைத் தடுமாற வைக்கிறது?. அர்ச்சனா சொன்ன மாதிரி “எப்படி இருந்த மனுசனை.. எப்படி ஆக்கி வெச்சிருக்காங்க.. பாரேன். (சேது படத்து அறிமுகக் காட்சி விக்ரம் மாதிரி கெத்தா இருந்த நபரை , கிளைமாக்ஸ் காட்சி மாதிரி சிதைச்சு வெச்சிருக்காங்க!)
“பர்சனல் விஷயங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு கேப்டனா கூட நீங்க சரியா நடந்துக்கலையே. தினேஷ் எல்லோர் முன்னாடியும் ஆட்சேபமா ஒரு வார்த்தை சொல்றாரு. நீங்க ஒண்ணுமே கேக்கலை. கப்பு வாங்கறதுக்காக நீங்களும் தினேஷூம் சேர்ந்து என்னென்ன பேசினீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று பூர்ணிமா அமைதியாக வெடிக்க “ஸாரிடா..மன்னிச்சிடு” என்று சொன்ன விஷ்ணு, கண்கலங்கியபடி எழுந்து சோர்வாக நடந்து, பழைய கால திரைப்பட ஹீரோயின்கள் போல, படுக்கையில் போய் சரியாக பொத்தென்று விழுந்தார். (பின்னணியில் சோக பிஜிஎம் ஏதும் வரவில்லையே என்று யோசித்த போதுதான், இது பிரமோ இல்லை என்பதே நினைவிற்கு வந்தது!). “தப்புத் தப்பா கேம் ஆடற” என்கிற சுயவிமர்சன முனகல் வேறு விஷ்ணுவிடம் வெளிப்பட்டது.
மாயா – பூர்ணிமா – விஷ்ணு – ஒரு மாய விளையாட்டு
மாயா தன்னைக் கிண்டலடிப்பார், ஆனால் உள்ளுக்குள் கோபமாக இருப்பார் என்பது பூர்ணிமாவிற்குத் தெரியும். எனவே இந்தக் கலாட்டாவை ரகளையாக நிகழ்த்தினார் மாயா. கிச்சனின் அருகில் வந்த பூர்ணிமாவை ‘who are you.. யாரோ பக்கத்து வீட்டுப் பொண்ணு வந்திருக்கு மேம்” என்றார் விசித்ராவிடம். கடந்து சென்ற நிக்சனை அழைத்து ஸாரி சொன்னார் விஷ்ணு. (எண்.2). இன்னொரு பக்கம் விக்ரமிடம் ஸாரி சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா (எண்.3).
சாப்பிடும் போதும் விஷ்ணு – பூர்ணிமா உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. “நீங்களே எல்லாத் தப்பையும் பண்ணிட்டு என்னைக் காரணம் சொல்றீங்க?” என்று பூர்ணிமா கேட்க “அதான் ஸாரி சொல்லிட்டேனே.. உன் கிட்ட ஒரு நிமிஷம் பேசியிருந்தா கூட அப்பவே கூல் ஆகியிருப்பேன். வாய்ப்பே கிடைக்கலை” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் விஷ்ணு. சாப்பாட்டு மேஜையில் இருந்த இரு பறவைகள் பொம்மை, மாயா கிச்சனில் இருந்து இவர்களைக் கவனிப்பது போன்ற காட்சிகளையெல்லாம் காமிரா குறும்பாக காட்டிக் கொண்டிருந்தது.
மாயாவிடம் சென்று பேச தயக்கமும் அச்சமும் கொண்டிருந்தார் விஷ்ணு. “அவ உங்க மேல ரொம்ப காண்டா இருக்கா. அதுவும் என்னால. நான் திரும்பி போய் பேசறதால ‘எவ்வளவு சொன்னாலும் இவளுக்கு புத்தி வராது’ன்னு நெனப்பா” என்று தன் தோழியின் எண்ணத்தை சரியாக யூகித்துக் கொண்டிருந்தார் பூர்ணிமா. இவர்கள் மூலைக்கு மூலை நின்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் மாயாவிற்கு பொசசிவ்னஸ் தாங்கவில்லையோ, என்னமோ ‘பூர்ணிமா’ என்று உரக்க அழைத்து விட்டு “whats up.. You are annoying me.. Get out” என்றது சுவாரசியமான குறும்பு.
மாயாவின் ரகளையான குறும்பும் அறிவுரையும்
“Don’t judge me” என்கிற முன்னெச்சரிக்கை டிஸ்க்ளய்மருடன் மாயாவை நெருங்கினார் பூர்ணிமா. மாயாவிடம் பேசலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த விஷ்ணு…, வீட்டிற்கு வரும் புது மாப்பிள்ளை மாதிரி இளித்துக் கொண்டே பின்னால் வந்து அங்கிருந்த அனன்யாவிடம் ஸாரி கேட்டார். (எண்.4). அங்கிருந்த விக்ரமை ‘டேய் உள்ளே போடா’ என்று துரத்த முயன்று, பிறகு மாயாவிடமும் விஷ்ணு ‘ஸாரி’ கேட்டது சுவாரசியமான காட்சி. (எண்.5). ‘சந்து பொந்துல யாரு இருந்தாலும் வந்துடுங்க.. இந்த கபாலி மன்னிப்பு கேட்கற மூடுல இருக்கான்” என்கிற சத்யராஜ் காமெடி மோடில் இருந்தார் விஷ்ணு. “For what?.. Ok i forgive my child” என்று பெருந்தன்மையுடன் ஆசிர்வாதம் செய்தார் மாயா.
இரவு நேரம். பூர்ணிமாவைத் தனியாக அமர வைத்து, குறும்புத்தனங்களை ஓரம் வைத்து சீரியஸாக அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் மாயா. “நான் உங்களை டிஸ்கரேஜ் பண்ணலை. வார்ன் பண்றேன். விஷ்ணுல்லாம் எனக்கு முக்கியமே இல்லை. ஆனா திரும்பவும் உங்களுக்கு அடி விழும். அவர் இப்ப சமநிலையில்லாம இருக்காரு. உங்க கூட பேசி அமைதி தேட முயற்சிக்கறாரு. என்னை, விசித்ராவையெல்லாம் எவ்வளவோ கடுமையா பேசியிருக்காரு. ஆனா உங்க கிட்ட மட்டும் மன்னிப்பு கேட்கறாரு.. ஏன்னு புரியுதா” என்று ‘ஜெஸ்ஸி’ ஆட்டத்தை வெற்றிகரமாக கலைக்க முயன்றார் மாயா. ‘அதானே.. என் கிட்ட மட்டும் ஏன் மன்னிப்பு கேட்கணும்?” என்று குழம்ப ஆரம்பித்தார் பூர்ணிமா. மாயா ஆப்ரேஷன் சக்ஸஸ்.
இதில் யூகிப்பதற்கு பல்வேறு கோணங்கள் இருக்கின்றன. விஷ்ணுவிடம் மீண்டும் நெருங்காதே என்று மாயா எச்சரிப்பதற்கு தகுந்த காரணம் இருக்கிறது. “அவன் யாரை வேணா மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான்” என்று ஏற்கெனவே எச்சரித்தவர் மாயா. அது பிறகு சரியாக நடந்தது. பூர்ணிமா மிகவும் பாதிக்கப்பட்டார். அது மீண்டும் நிகழக்கூடாது என்று மாயா அட்வைஸ் செய்வது சரியே. இன்னொரு பக்கம் பார்த்தால், தன் தோழி இன்னொருவரிடம் நட்பாக இருப்பதை மாயா விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பூர்ணிமாவின் தரப்பு குழப்பமும் தெளிவும் கலந்து இருக்கிறது. அவரால் மாயாவின் நட்பை விட்டு விலகவே முடியாது. ஈருடல், ஓருயிர் மாதிரியான நட்பு அது. அதே சமயத்தில் அவருக்கு விஷ்ணுவின் மீது மெல்லிய ஈர்ப்பு இருக்கிறது. பிக் பாஸ் ஆட்டத்திற்கு இது போன்ற ரொமான்ஸ் போர்ஷன்கள் தேவை. எனவே அதற்காக இரு பக்கமும் இருப்பது போன்ற தோற்றத்தை பூர்ணிமா தர சாமர்த்தியமாக முயல்கிறாரா அல்லது உண்மையிலேயே இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளிக்கிறாரா என்பது சப்ஜெக்ட்டிவ்வான விஷயம்.
அனுதாப ஓட்டில் தொடர்கிறாரா சுரேஷ்?
விடியற்காலை. தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த விசித்ரா, சுரேஷிடம் ஸாரி கேட்டார். (எண்.6) “எதுவா இருந்தாலும் வீட்டுக்கு சொல்லிட்டு கிளம்புங்க” என்று விசித்ரா மீண்டும் ஆலோசனை தர “அதெல்லாம் சரிம்மா.. ஒரு மனிதனோட உணர்வுகளை நாமினேஷன்ல பயன்படுத்திக்கலாமா?” என்று இறுக்கம் குறையாமல் பேசினார் சுரேஷ். பிறகு காமிராவின் முன்பு வந்த பேசிய சுரேஷ் “வீட்டு ஞாபகமாவே இருக்கு.தூக்கம் வரல. மழை நிறைய வந்ததுன்னு சொல்றாங்க. இந்தச் சமயத்துல நான் அங்க இருந்திருக்கணும்… வெளில வந்துடலாமான்னுதான் இருக்கு” என்று புலம்பினார்.
சுரேஷ் இப்படிப் பேசி பேசியே அனுதாப ஓட்டுக்களை அள்ளி நீண்ட நாட்கள் இருந்து விடுவார்போல. அவரது வீட்டார்கள் இவர் ஆட்டத்தில் தொடர்வதைத்தான் நிச்சயம் விரும்புவார்கள். இதில் சம்பாதிப்பது உபயோகமாக இருக்குமே என்று. இவர் அனத்துவது அவர்களுக்கு நிச்சயம் நெருடலாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. தன்னால்தான் வீடு இயங்குகிறது என்கிற அதீதமான கற்பனை எந்தவொரு குடும்பத்தலைவனுக்கும் இருக்கக்கூடாது. ஓர் ஆணை விடவும் பல மடங்கு நிர்வாகத்திறன் கொண்டவர் பெண்.
நாள் 72. லுங்கி பிராண்ட் விளம்பரம் போலிருக்கிறது. ஏறத்தாழ அனைவரும் லுங்கி கட்டிக் கொண்டிருந்தார்கள். குழப்பமான முகத்துடன் அமர்ந்திருந்தார் பூர்ணிமா. “நேத்து நைட்டு நீங்க சொன்னதுல இருந்து குழப்பமா இருக்கு. அவர் மூஞ்சியை பார்க்கப் பிடிக்கலை” என்று தயங்கித் தயங்கி பூர்ணிமா சொல்ல “உங்களுக்குத் தோண்றதை பண்ணுங்க.. உங்க வாழ்க்கைல நான் குறுக்க வர விரும்பல” என்றெல்லாம் சர்காஸ்டிக்காக மாயா சொன்னது குறும்பு. விக்ரமும் மாயாவும் இணைந்து குறும்பாக ஸாரி சொன்னார்கள். (இது விளையாட்டு ஸாரி என்பதால் கணக்கில் வராது). “கலாய்க்கறீங்களா?” என்று கலக்கமான முகத்துடன் பூர்ணிமா கேட்க, மனம் தாங்காமல் அவரை கட்டியணைத்துக் கொண்டார் மாயா. “உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலைதான்” என்று கிண்டலடித்தார் விசித்ரா.
மாயா, பூர்ணிமா கூட்டணி ‘ஸ்டராட்டஜி’ என்கிற பெயரில் பல குறும்புகளை, தவறுகளை இழைத்திருக்கலாம். வில்லங்கமான வார்த்தைகளைப் பேசியிருக்கலாம். ஆனால் இருவருக்குமான நட்பு தொடர்பான காட்சிகளைப் பார்க்க அத்தனை அழகாக இருக்கிறது. ‘உலகத்தில் எவருமே கெட்டவர்கள் இல்லை, சூழல்தான் அவர்களைச் செலுத்துகிறது’ என்கிற நிதர்சனம் புரிந்து விட்டால் எவரையும் கரிசனத்துடன் பெருந்தன்மையுடன் பார்க்க முடியும். அந்த நோ்மறை எண்ண அலையே, தீமைகளின் சதவீதத்தைக் குறைப்பதற்கான மருந்தாக அமையும். ஒருவரின் மீதான வெறுப்போ அதன் மீதான மலினமான வம்புகளோ நெகட்டிவ் அலையைத் தவிர வேறு எந்தப் பயனையும் தராது.
நிக்சனின் சிறுபிள்ளைத்தனமான புறணி
“கேப்டன்னா ஜாலியா இருக்கலாம்ன்னு நெனச்சேன்” என்று நிக்சனிடம் நொந்து போய் சிரித்தார் விஷ்ணு. நிக்சனும் பதிலுக்கு சகஜமாக பேசத்துவங்கி “ண்ணோவ்.. அர்ச்சனா அக்கா இருக்காங்களே.. செம நடிப்பு. கமல் சார் எபிசோட் முடிஞ்சவுடனே அப்படியே மாறிட்டாங்க. தவறை உணர்ந்திருந்தா முன்னாடியே இல்ல மன்னிப்பு கேட்டிருக்கணும். அவங்க உணர்ந்து கேட்ட மாதிரி தெரியலை. பதிவு செய்யறதுக்கு கேட்ட மாதிரி இருக்குது” என்றெல்லாம் அனத்திக் கொண்டிருந்தார்.
நிக்சன் தன் வயதின் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறார் என்பதே இதன் பொருள். அர்ச்சனா உண்மையாக மன்னிப்பு கேட்டாரோ அல்லது நடித்தாரோ, வந்து கேட்டது நல்ல விஷயம். அதை வைத்துக் கொண்டு பாசிட்டிவ்வாக நகர வேண்டுமே தவிர, சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டு பழகுவது, புறணி பேசுவது நல்ல பண்பு அல்ல, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவர் அர்ச்சனாவை மோசமாக பேசியதற்கும் மிரட்டல் வார்த்தை விட்டதற்கும் மனம் உணர்ந்தி மன்னிப்பு கேட்டாரா? என்னதான் தூண்டுதல் காரணமாக பேசினாலும், தவறு, தவறுதானே?.. நிக்சன் உணர்ந்து மன்னிப்பு கேட்காமல், மன்னிப்பு கேட்டவரையே குற்றம் சொல்வது முறையாகாது.
கோல்டன் ஸ்டார் முடிந்து ‘டிக்கெட் டு பினாலே’ என்கிற டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இறுதிக்கட்டம் ஆரம்பித்திருக்கிறது என்கிற வாசனையை உணர வேண்டிய நேரம். ‘மனித கடிகாரம்’ என்கிற பழைய டாஸ்க்கை மீண்டும் தூசு தட்டி கொண்டு வந்தார். ஒருவர் விநாடியாகவும், ஒருவர் நிமிடமாகவும், ஒருவர் மணியாகவும் செயல்பட வேண்டும். பிக் பாஸ் வெவ்வேறு இடைவேளைகளில் ஏழு முறை மணி கேட்பார். இதில் ஐந்து முறை சரியாக மணி சொல்லி விட்டால் இந்த டாஸ்க்கில் வெற்றி. சிறப்பாக செயல்பட்ட இருவருக்கு டிக்கெட் கிடைக்கும். ஒருவேளை வீடு டாஸ்க்கில் தோற்று விட்டால் டைம்பாம் வெடிக்கும். அது என்னவென்பது சஸ்பென்ஸ்.
நேரத்தை பரிசோதிப்பதற்காக பிக் பாஸிடம் உதவியை நாடலாம். (ஹெல்ப்லைன்). ஆனால் அவ்வாறு உதவி கேட்கும் போதெல்லாம், கேட்பவர் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பை இழப்பார். ‘எனவே கவனமாக ஆடுங்கள்’ என்றார் பிக் பாஸ்.
மனிதக் கடிகார டாஸ்க் – விசித்ராவின் தியாகப் பின்னணி
சரியாக காலை 11:30 மணிக்கு இந்த கடிகார டாஸ்க் ஆரம்பித்தது. மணி, ரவீனா, விஷ்ணு ஆகிய மூவரும் முதல் சுற்றில் ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘ஹெல்ப்லைனை எப்படி, எவ்வாறு பயன்படுத்தலாம்’ என்று வீடு முழுக்க ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தன.
“வீட்டு ஞாபகமாவே இருக்கு. சுவரேறி குதிச்சலாடாமான்னு பார்க்கறேன்” என்று நேரம் கெட்ட நேரத்தில் சுரேஷ் அனத்த “ஏணி எடுத்துட்டு வரட்டுமா.” என்று ஜோக் அடித்த மணி, ‘ண்ணோவ்.. என்னண்ணா.. நீ இப்படிப் பண்றே?” என்று கண்களைத் துடைத்து ஆறுதல் சொன்னார்.
அவ்வப்போது ‘உதவி வேண்டுமா?” என்று பிக் பாஸ் கேட்க, மக்கள் யோசனையுடன் மறுத்துக் கொண்டிருந்தார்கள். “இப்ப டைம் என்ன?” என்று முதல் தடவை கேட்டார் பிக் பாஸ். அப்போது நேரம் சரியாக 3:50 PM. ஆனால் காமிராவின் முன்பு வந்த விஷ்ணு 3:37 என்றார். மூன்று தடவை இந்தச் சடங்கு முடிந்ததும் ‘உதவி வேண்டுமா” என்று பிக் பாஸ் கேட்க எல்லோருமே கேட்கத் தயங்கினார்கள்.
டிக்கெட் வாய்ப்பு கேட்பவருக்கு போய் விடும் என்பதால். விசித்ரா அந்த தியாகத்தைச் செய்ய முன்வந்தார். ஆனால் அது புத்திசாலித்தனமான தியாகம். ஏனெனில் டாஸ்க் எப்படியும் சிரமமாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அதற்குள் நிக்சன் முந்திக் கொண்டு தியாகம் செய்து விட்டார்.
இதற்கு இடையில் நடந்த வீட்டுப் பணி டாஸ்க்கில் சின்ன வீடு வெற்றி பெற்றது. எனவே அனைத்து விதமான தூய்மைப் பணிகளையும் பெரிய வீடுதான் செய்ய வேண்டும். சரியான சாவியைக் கண்டுபிடித்து பெட்டியைத் திறக்கும் விளையாட்டில், பெட்டியின் உள்ளேயே சுத்தம் செய்யும் பொருட்களை வைத்திருந்தது சுவாரசியமான ஐடியா.
கடிகார டாஸ்க் தொடர்ந்தது. வளர்த்துவானேன்?.. இந்த டாஸ்க்கில் வீடு தோற்றது. 7 முறை மணி கேட்ட போது மூன்று முறை மட்டுமே சரியாக பதில் சொல்ல முடிந்தது. ‘டைம்பாம் வெடிக்கும்’ என்று பிக் பாஸ் எச்சரிக்கை செய்ய பூர்ணிமா காதுகளை மூடிக் கொண்டார்.
டிக்கெட் வாய்ப்பை இழந்த இருவர்
அனைவரும் வாக்களித்து இரண்டு நபர்களைத் தேர்வு செய்து ‘டிக்கெட் டு பினாலே’ ஆட்டத்திற்குத் தகுதியிழக்க வைக்க வேண்டும். (ஓ.. இதுதான் டைம் பாமா?!) “வாயைத் திறந்தாலே இவன் பேருதான் வருது” என்று ஏதோ கெட்ட வார்த்தை போல சொல்லி விஷ்ணுவின் பெயரைச் சொன்னார் விக்ரம். “அஞ்சு ஸ்டாரா வாங்கற.. உடம்பெல்லாம் மச்சம் உனக்கு. இருடா வெச்சுக்கறேன்” என்று விக்ரமை சொல்லி ஜாலியாகப் பழிவாங்கினார் விஷ்ணு. தன்னுடைய தேர்வை சொல்ல விசித்ரா நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் கொட்டாவி விட்டு சபையை கலகலப்பாக்கினார் பிக் பாஸ். சங்கடமான தேர்வு என்றாலும் இந்த வாக்களிப்பு கலகலப்பாக நடந்து முடிந்தது.
இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விஜய் மற்றும் அர்ச்சனா. இருவருக்கும் உள்ளுக்குள் ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இருவருமே வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்கள் என்பதால் இதில் ஒருவித லாஜிக் நியாயம் இருந்தது. ‘எனக்கு அப்பவே தெரியும்’ என்று வெளியில் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
ஆட்டம் என்று வரும் போது நட்பு, பாரபட்சம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு கறாராக விளையாடி, இதர நேரங்களில் இணக்கமாக இருந்தால் வீட்டின் சச்சரவுகள் கணிசமாக குறையும். இனி வரும் நாட்களில் இது தொடருமா? (மன்னிப்பு எண்ணிக்கையை நானே வரிசைப்படுத்தி விட்டதால் சோப்பு டப்பா எனக்கே!).
+ There are no comments
Add yours