Aalavandhan: `நுட்பமான காட்சிகளுக்கு வெட்டு!' ரி-ரிலீஸ் வெர்ஷனில் உருவான வெற்றிடம்; ஓர் அலசல்!

Estimated read time 1 min read

`ஆளவந்தான்’ படத்தை மறுவெளியீடு செய்தி கேட்ட போதே உடனே பார்க்கும் ஆசை மனதில் துளிர்விட்டது. காரணம் இப்படம் வெளியான காலகட்டத்தில் அப்போது திரையரங்கில் பார்க்க முடியாமல் போனது.

‘ஆளவந்தான்’ – இதுவரை பார்த்திருந்த தமிழ்த் திரைப்படங்களின் மொழியை முற்றிலும் வேறு விதத்தில் வடிவமைத்த விதம் ஒருபுறம் என்றால், மறுபுறம் கலைப்புலி தாணுவின் விளம்பர யுக்தி. கமல் மாடியிலிருந்து குதிக்கும் ஒரு போஸ்டரைக்கொண்டு காலைக்கதிர் இதழின் முதற்பக்கம் முழுவதும் பிரமாண்டமாக வடிவமைத்திருந்தது. மேலும், தீபாவளி சிறப்பிதழ் போல ‘ஆளவந்தான்’ திரைப்படம் தொடர்பாக தனியாகச் சிறப்பிதழ் ஒன்றை அதனுடன் வெளியிட்டிருந்தார்கள்.

ஆளவந்தான்

இது போக, வரிந்து கட்டிக்கொண்டு விளம்பரம் செய்தது சன் டிவி. Base Voice-ல் கமலின் குரலில் மயிர்க்கூச்செரிக்க வைக்கும் ”கடவுள் பாதி மிருகம் பாதி” எனத் தொடங்கும் பாடல், தூக்கி வீசும் கண்ணாடியை கமல் உடைக்கும் கிராபிக்ஸ் மாயம், திரைப்படத்தின் இடையில் 2D அனிமேஷனில் கதை சொன்ன விதம், மனநலக்காப்பகத்தில் அறிமுகமாகும் நந்து ஆக்கிரமித்துக்கொள்ளும் முழு (சின்னத்)திரை, இப்படத்திற்காகவே கமல்ஹாசன் தனியாக ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்ட காட்சிகள் நிறைந்த நீண்ட முன்னோட்டம் அத்திரைப்படத்திற்கு மக்கள் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

வெள்ளித்திரையில் பார்க்க முடியாமல் போயிருந்தாலும், சின்னத்திரையிலாவது பார்த்து ஆனந்தப்பட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தால் உண்மையில் அப்போது படம் புரியவில்லை. அதன் மொழியைத் தாங்கும் சிந்தனையும், அதை பிராசஸ் செய்யும் மதிநுட்பமும் அப்போதில்லை. அப்படம் எனக்கு புரியத்துவங்கும் நேரம் டிவிடிக்களைத் தாண்டி பெரிய திரையில் காணும் சூழலும் அப்போதில்லை. அதான் இப்போ ரிலீஸ் ஆகிடுச்சே இப்போ ஏன் புலம்புற என நீங்கள் கேட்டால்… படத்தில் விழுந்த வெட்டுக்கள் அப்படி.

ஒரு படம் உருவாவது படத்தொகுப்பு அறையில் என்பது திரைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு, திரைப்படம் சார்ந்த புரிதல் உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு நல்ல திரைப்படம் மக்களிடையே சரியான வரவேற்பை பெறாமல் போவதற்கும், படத்திலிருந்து அறுபட்டு ரசிகர்கள் மனதளவில் வெளியேறுவதற்கும் படத்தொகுப்பு அறையில் எடுக்கும் முடிவுகள் காரணமாக அமையலாம்.

ஆளவந்தான் | Aalavandhan

ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் வெளியாகியிருக்கும் இந்தப் பதிப்பில் நிறைய காட்சிகள் வெட்டப்பட்டு அதன் ஓட்டம் (flow) தடைபடுவது நன்றாகவே தெரிந்தது. ஏற்கெனவே படத்தின் முக்கியமான பல காட்சிகள் மீண்டும் மீண்டும் பார்த்து மனதிற்குள் ஊறிப்போனதால், இவர்கள் வெட்டி வீசியது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

நாயகி கர்ப்பமானதை கமலிடம் சொல்லும் காட்சி

தமிழ் சினிமாவில் மிகைப்படுத்தப்பட்ட அளவில் ரொமான்டிசைஸ் செய்யப்பட்டிருக்கும் ”எனக்கு மாங்கா சாப்பிடணும் போல இருக்கு” அல்லது ”நீங்க அப்பாவாகப் போறீங்க” என்று சொல்லும் வசனங்கள், கணவனின் கையை தன் வயிற்றில் வைத்து மனைவி காண்பிப்பது எதுவும் இல்லாமல் மெடிக்கல் ரிப்போர்டிலிருந்து இருவருக்குமான யதார்த்தமான உரையாடல்கள் ஆரம்பத்தில் தொடர்ந்தாலும், கமல் இன்னும் ஒரு படி மேலே போய் “அவ்ளோ உத்தமியா இருந்தா அன்னைக்கு வேணாம்னு சொல்லிருக்க வேண்டியதுதான?” என்று கேட்க, “எனக்கு புடிச்சிருந்துச்சே” என்று வெட்கத்துடன் ஒப்புக்கொள்வார். ஒரு வேளை ’பெண்களை இழிவுபடுத்துகிறார்’ என்று பெண்ணியவாதிகளும் மகளிர் அமைப்புகளும் போர்க்கொடி தூக்குவார்களோ என்று இந்தக் காட்சியை தவிர்த்திருக்கலாம்.

தொலைந்து போன மையக்’கரு’

ஆனால் அதன் பிறகு அறிமுகமாகும் கமலின் மாமா, இரு குடும்பங்களும் சந்தித்துக்கொள்ளும் துவக்கக்காட்சிகள், மாமாவிடம் சொல்ல விஜய் மற்றும் நாயகியின் குடும்பம் காட்டும் தயக்கம் எல்லாம் வெட்டித்தூக்கப்பட்டிருக்கிறது.

ஆளவந்தான்

நாயகி கர்ப்பமானதும், அதை சார்ந்த காட்சிகளும் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போல. ஆனால் பிரச்னையே அங்கிருந்துதான் துவங்குகிறது. நாயகி கர்ப்பமானதால் மட்டுமே மே மாதம் நிகழ வேண்டிய திருமணம், அதற்கு முன்பாக ஜனவரி 17-ம் தேதிக்கு மாறுகிறது. இதே போல முன்பு, ”நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வந்த சித்தியால்தான் இவர்கள் குடும்பமே சிதைந்து போனது. சித்தி வந்ததும் அதே ஜனவரி 17-ம் தேதி என்பதால், தேதியும் சூழலும் ஒன்று போக இருக்க, மீண்டும் இன்னொரு சித்தி குடும்பத்திற்குள் நுழைந்து விட்டாள் என்று நினைத்துக்கொண்டு தனது சகோதரனை அவளிடமிருந்து காப்பதற்காகத்தான் காப்பகத்திலிருந்து தப்பிக்கிறான் நந்து. படத்தின் மையக்கதை துவங்கும் இடம் அது.

ஆனால் வெட்டியதன் பின்னால், இப்படியாகக் காட்சி மாறிவிட்டது. முதல் காட்சியில் நாயகி கர்ப்பமானதை மட்டும் சொல்கிறார். அடுத்த காட்சியில் இரு குடும்பங்களும் சாப்பிடுகிறார்கள். அதில் நந்தகுமார் பற்றிய பேச்சு தொடங்குகிறது. மனநல காப்பகம் செல்கிறார்கள்.

இதில் இந்தக் கர்ப்பம் தொடர்பான காட்சியின் தீவரத்தன்மை மிகவும் குறைந்து போய்விட்டது. ”இப்ப என்ன? அவங்க கர்ப்பம்னு தெரியணும் அவ்ளோதானே! அதுக்கு ஒரு சீன் போதும்” என்ற மனநிலையில் நேராக நந்துவை அறிமுகம் செய்யும் காட்சிக்கு சென்றுவிட்டார்கள்.

மனநல காப்பகத்தில் ரியாஸும் அவன் கூட்டாளியும் அறிமுகமாகும் காட்சி. அதில் அவர்கள் ஏற்கெனவே திட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ வெளியே வந்து பேசுகிறேன் என்பது போன்ற செய்கையில் ஒரு Lead இருக்கும். அது மிஸ்ஸிங்!

கூடலுக்குப்பிறகு கமலும் நாயகியும் படுக்கையில் பேசிக்கொள்ளும் காட்சி. இது நீக்கப்பட்டதால் ரியாஸ் கொல்லப்படும் காட்சியும், கமலின் மாமா இறக்கும் காட்சியும் அடுத்தடுத்து உடன் நிகழ்வது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகின்றன.

ஆளவந்தான்

அடுத்து போதை ஊசி ஏற்றிய பிறகு மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒருவனின் சிந்தனையில் உலகம் எப்படி ‘Surrealism’ ஆக தெரியும் என்பதற்குக் குறிப்பிட்ட சில காட்சிகள் உதாரணம். குறிப்பாக, மெக்டொனல்ட் பொம்மை பேசுவது, தரையில் படகு செல்வது, கடிகாரம் வழியாக வேறு ஏரியாவுக்கு வருவது போன்ற காட்சிகள் அத்தனையும் நீக்கம்.

போதை ஊசி ஏற்றியவன் கமலிடம் கொடுத்த கண்ணாடி, தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் நிற்கும் போது மாறியிருக்கும். புதிதாகப் பார்த்தவர்கள் இதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இடையில் ஒரு கடையில், தான் அணிந்திருந்த கோடு போட்டிருக்கும் வித்தியாசமான கண்ணாடியை கடைக்காரர் கமலுக்கு அணிவிப்பார். அதைத்தான் நீங்கள் விளம்பர போஸ்டர்களில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

போதையில் நந்துவுக்கு போஸ்டரில் இருக்கும் ஷர்மிலி (மனிஷா கொய்ராலா) போஸ்டரில் இருந்து வெளிவந்து தன்னுடன் நடமாடுவது போல நினைத்துப் பார்ப்பார். பின்னர் சுதாரித்துக்கொள்பவன் ‘LIVE TONIGHT’ என்ற போஸ்டரின் ஓரத்தில் இருக்கும் ‘ஸ்டார் நியூஸ்’ லோகோவை பார்த்த பிறகு இன்று தனது வில்லியும் அங்கு வருவாள் என்பதற்கான குறியீடு என்று புரிந்துகொண்டு அங்கு செல்வார். அந்தக் காட்சி நீக்கப்பட்டு நேரடியாக நந்து இசைக்கச்சேரி நிகழும் இடத்துக்கு வருவது பொல இருக்கும். (அந்த நடனம் மட்டும் ஹோட்டல் காட்சியில் சேர்க்கப்பட்டிருக்கும்)

வெட்டுப்பட்ட ஆப்பிரிக்கா காட்டுப்புலி

விஜய் என நினைத்து “மேடம் கொடுக்க சொன்னாங்க” என்று ஒருவர் நந்துவிடம் ஒரு கவரைக் கொடுத்துவிட்டுப் போவார். அதை பிரித்துப்பார்த்தால் இசைக்கச்சேரியின் அழைப்பிதழ். அழைப்பிதழிலிருந்து ஜூம் ஆகி உள்ளே நிகழ்ச்சி நிகழும் காட்சிக்குள் கேமரா செல்லும். எல்லோரும் கைகளை உயர்த்தியபடி மேடையில் நின்றுகொண்டிருப்பார்கள். அத்தனை அருமையான Transition அது. கேமரா ஜூம் ஆக துவங்கும் போது பாடலின் இசையும் பிண்ணனியில் துவங்கும். ஆனால் இப்போது நந்து அழைப்பிதழை பார்த்தவுடன் நேராக “அப்பிரிக்கா காட்டுப்புலி” என்ற பாடல் வரிக்கே வந்துவிட்டார்கள். முன்னிருக்கும் இசை மற்றும் Transition காணவில்லை. அதன் விளைவு முன்னிசை இல்லாமல் சட்டென்று துவங்கும் பாடல் திரையில் நன்றாகவே தனித்து தெரிகிறது. அதாவது வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் டாப் கியரில் போவது போல்.

ஆளவந்தான்

ராணுவ அணிவகுப்பின் போது நாயகி என்று நினைத்து வேறு ஒரு பெண்ணைக் கழிவறையில் கொன்றுவிடுவது தேவையான நீக்கம். அதனால் கதையில் எந்தப் பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. ஆனால், அதன் பின் தொடருகின்ற பாடலையாவது முழுமையாக அனுமதித்திருக்கலாம். பாடகி சுஜாதாவின் ”ம்ஹீம்…” எனும் ஹம்மிங் குரலின் பின்ணனியில் விமான நிலையத்தில் செக்கின் செய்யும் போது, காட்சியிலிருந்து துவங்கும் ”உன் அழகுக்கு” என்ற பாடலும் ஆப்பிரிக்கா காட்டுப் புலியைப்போல சட்டென்று துவங்கிய உணர்வு.

ஃப்ளாஷ்பேகில் ஆசிரியரும் அப்பாவும் பேசுவதை நந்துவும் விஜய்யும் கீழே நின்றுகொண்டு ஒட்டு கேட்டுக்கொண்டிருக்க, நந்துவை அழைக்கும் அப்பாவின் காட்சியில், மேல் அறையிலிருந்து வருவது போன்று நின்ற இடத்தில் இருந்தே ஓடும் நந்துவின் புத்திசாலித்தனத்தையாவது காண்பித்திருக்கலாம்.

மனநலம் பாதிக்கப்பட்ட தேனுஷ்கூத் இவர்கள் இருவருக்கும் நெருக்கமாவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் முன்பே அதனுடன் தொடர்பான ஆசிரியருடைய காட்சிகளை நீக்கியிருந்ததால் அதன் தொடர்ச்சியான காட்சியையும் நீக்க வேண்டிய சூழல். இந்தக் காட்சி இருந்திருந்தால் அவர்கள் புகைக்கும் போது அவர்களுக்குள் இருக்கும் தோழமை நமக்குப் புரிந்திருக்கும். இக்காட்சி இல்லாததால், அவர்கள் புகைக்கும் போது நண்பர்களானது போன்ற ஒரு புரிதல் ஏற்படுகிறது.

டைரியை நந்து ஒளித்து வைப்பதற்கென்று ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில், ”அவர்கள் இன்னும் குழந்தைகள் அல்ல. பெரியவர்கள் படிக்கும் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைக் குறைவாக எடை போட வேண்டாம்” என்று சித்தி தன் அப்பாவிடம் சொல்வதை ஒட்டுக்கேட்கும் நந்து சட்டென்று ஓடிப்போய் தனது டைரியை சுவற்றின் இடுக்கில் ஒளித்து வைப்பான். காரணம், நன்றாகப் படிக்கிறான் என்றால் இவன் எதையாவது கிறுக்கி வைக்கத் துவங்குவான் என்று அப்பாவோ சித்தியோ கணிக்கத் துவங்கிவிடுவார்கள் என்பதை நந்து முன்னமே கணித்திருப்பான். (உண்மையில் நந்து விஜய்யை விட புத்திசாலி. ஆனா விஜய் தான் அதிர்ஷ்டசாலி. நந்துவின் போதாத காலம் அவன் விதியைச் சுண்டி விட்ட நாணயம் முடிவு செய்தது) இக்காட்சி படத்தில் இருந்திருந்தால் டைரி அங்கு வைக்கப்பட்ட காரணம் பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும்.

விஜய் சென்ற பிறகான தனிமையில் இருக்கும் நந்துவின் ஏக்கங்களை ஸ்கிசோஃப்ரினியா என்ற மனச்சிதைவு நோயாக எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அம்மா ஆக்கிரமிக்கிறாள் என்பதன் காட்சி அடுக்குகள் நிறைய விடுபட்டுப் போயிருக்கின்றன. இக்காட்சிகள் இருந்திருந்தால் இந்த நோயின் தீவிரம் இன்னும் ஆழமாகப் பார்வையாளர்கள் மனதில் பதிந்திருக்கும்.

ஆளவந்தான்

ஒரு தவறான கேமரா கோணம் கண் முன்னால் பல் இளித்துவிடும். தவறான இசையின் அளவு காதைப்பிடிக்க வைக்கும். தவறான நடிப்பு முகம் சுழிக்க வைக்கும். ஆனால், படத்தொகுப்பு இப்படி நேரடியாக பார்வையாளர்களை பாதிக்காது என்பதுதான் பிரச்னை. ஒட்டவில்லை, பிடிக்கவில்லை என்றுதான் அவர்களால் சொல்ல முடியுமே தவிர இப்படி ஒவ்வொரு காட்சியாகக் குறித்து அதன் பின்னால் இருக்கும் நுட்பங்களை எடுத்துச்சொல்ல முடியாது. அதனால்தான் படத்தொகுப்பை மறைமுகமான கலை (Invisible Art) என்கிறார்கள்.

”படம் ரொம்ப நீளம். எடிட்டர் தூங்கிவிட்டாரா?”, “படம் ரொம்ப போர் அடிக்குது. இன்னும் ஒரு 10-15 நிமிஷத்தைத் தூக்கிருந்தா படம் நருக்குன்னு நல்லாருந்திருக்கும்!”

நிறைய திரைப்பட விமர்சனங்களில் இந்த வார்த்தைகளை கவனித்திருக்கிறேன். சரி, பத்து நிமிடங்களை எப்படித் தூக்க வேண்டும்? ஒவ்வொரு காட்சியிலும் சில நொடிகளை? அப்படி தூக்கிவிட்டால் உங்களுக்குப் பிடிக்காமல் போன அந்தக் காட்சிகள் எல்லாம் இப்போது பிடிக்க ஆரம்பித்து விடுமா? பிரச்னை நீளத்தில் அல்ல. கதையில்!

மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு திரைப்படத்தின் நீளத்திற்கும் படத்தொகுப்பாளருக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. அதை முடிவு செய்யும் தனிப்பட்ட அதிகாரமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பொதுவாக படத்தின் நீளம் என்பது இயக்குநர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் எல்லோரும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய கூட்டு முடிவு. சில சமயம் இயக்குநர்களின் கணிப்பும், சில சமயம் தயாரிப்பாளர்களின் கணிப்பும் வென்றிருக்கிறது. அதனால் இதைப் பொதுமைப்படுத்த முடியாது.

புதிதாக வெளியாகப்போகும் திரைப்படம் என்றால் கூட அதற்கொரு நியாயம் சொல்லலாம். அப்படியே இருந்தாலும், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜிகர்தண்டா 2’ திரைப்படம் கூட இரண்டு மணிநேரம் 52 நிமிடம் இருந்ததுதானே. அப்படியிருக்க இரண்டு மணிநேரம் 44 நிமிடங்கள் இருக்கும் கமல்ஹாசன் போன்ற ஒரு நடிகருடைய திரைப்படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் மூன்று நிமிடமாக குறைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

ஆளவந்தான்

மேலும் ஒரு திரைப்படத்தின் நீளம் தனித்தன்மையானது. அது ஒவ்வொரு திரைப்படத்தின் தன்மையைப் பொறுத்தே அமையும். ‘வடசென்னை’, ‘விடுதலை’ மாதிரியான ஒரு திரைப்படத்தையும், ‘பீட்ஸா’ போன்ற ஒரு திரைப்படத்தையும் ஒரே கால அளவில் வைத்துப் பார்க்க முடியாது. ஒவ்வொரு கதையும் அதைச்சொல்வதற்கு தகுந்த நேரத்தை எடுத்துக்கொள்கிறது. எடுத்துக்கோண்டுதான் வேண்டும். அப்போதுதான் கதை சொல்வதற்கான வெளி கிடைக்கும். அதில் சமரசம் செய்து கொள்ளாமல் வணிக நோக்கில் நேரத்தின் கழுத்தை நெரித்தால் படம் நிச்சயம் இறந்துவிடும்.

ஏற்கெனவே வெளியான ஒரு திரைப்படத்தை மறு வெளியீடு செய்வதே முந்தைய காலகட்டத்தில் திரையரங்கில் தவிர்த்த, அப்போது இதன் திரை மொழியை ஏற்றுக்கொள்ளாத/ புரிந்துகொள்ளாத கமல் ரசிகர்களுக்கும், இன்று புதிதாக பார்க்கும் புதிய தலைமுறைக்கும்தானே?! இந்தப் பிரச்சனை இங்கு மட்டுமா என்றால் இல்லை. ஹாலிவுட்டில் இன்னும் வேறு லெவலில்.

டிசி காமிக்ஸ் தயாரித்த ’ஜஸ்டிஸ் லீக்’ என்ற ஒரு திரைப்படம் 2021-ம் ஆண்டு தயாரானது. அதன் இயக்குநர் ’ஜாக் ஸ்னைடர்’ மீது தயாரிப்பு நிறுவனம் படத்தின் நீளம் உட்படப் பல்வேறு விஷயங்களில் கிடுக்குப்பிடிகளைப் போட படத்தை விட்டு நடையைக் கட்டினார். அவரை விட்டுவிட்டு தயாரிப்பு நிறுவனம் தங்களுக்குச் சாதகமான ஆட்களை வைத்து இரண்டு மணிநேரத்திற்கான ஒரு பதிப்பைத் தயார் செய்தது. ஆனால் வெளியான பிறகு பெரிய வரவேற்பு பெறாததால், இயக்குநரின் பதிப்பு வேண்டும் என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களிலும் திரைப்படம் மீது எதிர்ப்பு எழ, ஒரு வழியாக இயக்குநரது பிரதியை வெளியிட அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. படம் சற்றே நீளம் என்றாலும் மக்களுக்கு அந்தப் பதிப்புதான் பிடித்திருந்தது.

இப்படியாகத்தான் ‘ஆளவந்தான்’ திரைப்படமும் எனக்குப் புலப்படுகிறது. இந்த 2 மணி வேர பதிப்பை விட 2 மணி நேரம் 44 நிமிட பதிப்புதான் மக்களுக்குப் பிடிக்கிறது என்று பார்வையாளர்கள் போர்க்கொடி துவக்கினால் மட்டுமே இது மாறலாம். இத்திரைப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் மறுவெளியீடு, ஒருவேளை முழுக்க தயாரிப்பாளரின் முடிவாக இருக்கும் பட்சத்தில் இதில் யாரும் தலையிட முடியாது. (கமல் உட்பட!). இந்தப் படத்திற்கு அவர் எப்படியெல்லாம் உழைத்திருந்தார் என்பதை கே.பாலசந்தர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அத்தனை அர்ப்பணிப்புடன் இத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் கண்ணில் இந்த எடிட்டட் வெர்ஷன் படாமல் இருக்க வேண்டும் ஆண்டவரே! (நிஜக்கடவுள்).

ஆளவந்தான்

ஆக, படம் வெளியான காலகட்டத்தில் பத்து ஆண்டிற்கு முன்னோடியாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்பட்ட ஒரு திரைப்படம், அதன் நுட்பமான காட்சிகளை வெட்டிக்கூறு போட்டதன் மூலம் அதன் நுட்பமான பகுதிகளை இழந்து இப்போது மீண்டும் ஒரு வெற்றிடத்தை வேறு வடிவத்தில் உருவாக்கியிருக்கிறது. அதாவது தனித்தனி காட்சிகளாக நந்துவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும் முழுத்திரைப்படமாக மீண்டும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் சந்தேகமே!

– ஜி.ஏ.கௌதம்

கட்டுரையாளர் ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘டக்கர்’ உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ் சிலவற்றின் எடிட்டர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours