இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய இசைக்குயில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி.
11 டிச, 2023 – 12:31 IST
1. கனத்த இதயங்களையும் கரைக்கும் வண்ணம், கனிந்துருகும் இசையின் துணை கொண்டு, குயிலினும் இனிய தன் குரல்வளத்தால் கோடானு கோடி மக்களை மகிழ்வித்து, கானம் பாடி காற்றில் கரைந்த கானக்குயில் ‘இசையரசி’ எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் 19வது நினைவு தினம் இன்று…
2. மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்ற இயற்பெயரைக் கொண்ட திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, 1916ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று, சுப்ரமணியம் அய்யர் மற்றும் சண்முக வடிவு அம்மாள் தம்பதியரின் மகளாக, சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தார்.
3. இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த எம்எஸ் சுப்புலக்ஷ்மியின் பாட்டி வயலின் வாசிப்பதிலும், தாயார் வீணை வாசிப்பதிலும், பாடுவதிலும் திறமை பெற்றவர்களாக இருந்ததனால், மிகச் சிறிய வயதிலேயே எம்.எஸ் சுப்புலக்ஷ்மியும் இசையின் மீது ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். இவரது தாயார் தான் இவருக்கு முதல் இசை குருவாகவும் இருந்தார்.
4. செம்மங்குடி சீனிவாச அய்யரிடம் கர்நாடக இசையையும், பண்டிட் நாராயணராவ் வியாஸ் என்பவரிடம் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றதோடு, செம்பை வைத்தியநாத பாகவதர், பாலக்காடு டி.எஸ்.மணி அய்யர் போன்ற இசை மேதைகளின் இசைக் கச்சேரிகளையும் தனது தாயாருடன் சென்று ரசித்ததோடு, தனது இசை ஞானத்தையும் வளர்த்துக் கொண்டார்.
5. 1926ம் ஆண்டு தனது தாயாரின் வீணை இசையோடு சேர்ந்து பாடிய இவரது பாடல் முதன் முதலில் இசைத்தட்டாக வெளிவந்தது. பின் 1929ல் ‘சென்னை மியூசிக் அகாடமி’யில் இவரது முதல் மேடை கச்சேரி அரங்கேற்றமாகி, தொடர்ந்து பல கச்சேரிகளில் தனது தேனினும் இனிய குரலால் இசைப் பிரியர்களை தன்வயப்படுத்தியிருந்தார்.
6. 1938ல் இயக்குநர் கே சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த “ஸேவாசதனம்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரை நட்சத்திரமாக முதன் முதலில் வெள்ளித்திரையின் வெளிச்சம் கண்டார் எம் எஸ் சுப்புலக்ஷ்மி.
7. “ஸேவாசதனம்” திரைப்படத்தின் வெற்றி இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து, தனது கணவர் கல்கி சதாசிவத்துடன் இணைந்து “ராயல் டாக்கி டிஸ்டிரிபியூட்டர்” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து “சகுந்தலை” என்ற திரைப்படத்தையும் தயாரித்தார்.
8. 1940ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சகுந்தலையாக எம்.எஸ் சுப்புலக்ஷ்மியும், துஷ்யந்த் மகாராஜாவாக பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஜி.என் பாலசுப்ரமணியமும் நடித்திருக்க, அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் படத்தை இயக்கினார். 24 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்தில்தான் முதன் முதலில் க்ளோசப் காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு.
9. இதற்கு அடுத்து வந்த “சாவித்திரி” திரைப்படத்தில் வட இந்திய நடிகை சாந்தா ஆப்தே நாயகியாக நடிக்க, எம்.எஸ் சுப்புலக்ஷ்மி நாரதர் வேடமேற்று நடித்தார். 1945ல் வெளிவந்த “மீரா” திரைப்படம் இந்திய அளவில் அவருக்கு மிகப் பெரிய பெருமையை தேடித் தந்த படமாக அமைந்தது.
10. “மீரா” திரைப்படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே வரும் கீதம்” என்ற பாடல் இன்றைய தலைமுறை இசை ஆர்வலர்களையும் ஆக்கிரமித்து ஒரு சிரஞ்சீவித் தன்மை வாய்ந்த பாடலாகவே இன்றும் உள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியிலும் வெளிவந்து அங்கும் பெரிய வெற்றி பெற்றதோடு, அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பாராட்டப்பட்டார் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி.
11. கவிக்குயில் சரோஜினி நாயுடுவால் “நைட்டிங்கேள் ஆப் இந்தியா” என அழைக்கப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி குரலில் வந்த “பஜகோவிந்தம்”, “விஷ்ணு சகஸ்ரநாமம்”, “வெங்கடேச சுப்ரபாதம்” போன்றவற்றை கேட்கும்போது, கேட்போரின் மனங்களில் தெய்வம் தானாக குடிகொள்ளும் என்றால் அது மிகையன்று.
12. தனது கணவர் கல்கி சதாசிவமின் மரணத்திற்குப் பின் பாடுவதை நிறுத்திக் கொண்ட எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, 2004ஆம் ஆண்டு கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இம்மண்ணுலகை விட்டு இதேநாளில் (டிச., 11) பிரிந்து காற்றில் கலந்தார்.
13. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி விருது, மகசேசே விருது, சங்கீத கலாசிகாமணி விருது, இந்திரகாந்தி விருது என விருதுகளுக்கே பெருமை தேடித்தந்தார் இசையரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி. இசையாக பிறந்து, இசையாகவே வாழ்ந்து காற்றில் கலந்த அவரது நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.
+ There are no comments
Add yours