‘தடம்’, ‘கலகத்தலைவன்’ படங்களின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. இதில் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பின், சஞ்சத் தத் தென்னிந்திய நடிகர் போல ஆகிவிட்டார். விஜய்யின் ‘லியோ’விலும் கவனம் ஈர்த்தார். இப்போது விடாமுயற்சியில் வித்தியாசமான அவதாரமெடுக்கிறார் என்கிறார்கள். படத்தில் அவர் தவிர, ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா எனத் தெரிந்த முகங்கள் பலர் நடித்து வருகின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாக படம் உருவாகி வருகிறது.
அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய படப்பிடிப்பு அங்கே தொடர்ந்து 50 நாட்கள் ஒரே ஷெட்யூலாக நடத்தத் திட்டமிட்டனர். கடந்த தீபாவளியைக்கூட, கொண்டாட சென்னை வரவில்லை. ஆனால், தீபாவளி கடந்த பின், படக்குழுவுக்கு சின்னதொரு பிரேக் தேவைப்பட, சென்னை திரும்பினார்கள். இப்போது படக்குழு மீண்டும் வெளிநாடு திரும்பியிருக்கிறது. ‘கங்குவா’ பட டீமிற்கும், ‘விடா முயற்சி’ டீமுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலை இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் என ஒரே டீம்தான். அஜர்பைஜானில் சுப்ரீம் சுந்தரின் சீறிப் பாயும் ஸ்டண்ட்களும், பரபரப்பான சேஸிங் சீன்களும் படமாக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் அஜர்பைஜானிலேயே படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தக் கதை ரோடு ஆக்ஷன் த்ரில்லர் என்றும் பேச்சு இருக்கிறது. இப்போது அஜித், த்ரிஷா, ரெஜினா காம்பினேஷன் காட்சிகள் நடந்து வருகின்றன. படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவை சில சூழல்கள் காரணமாக மாற்றியுள்ளனர். இந்த ஷெட்யூலில் இருந்து ‘அறம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours