‘நா எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்’ அதிரடி பஞ்ச் வசனம்தான் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்காக இப்போதும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால், சொன்னபடி வந்தாரோ இல்லையோ இந்த பஞ்ச் வசனம் இடம்பெற்ற மெஹா ஹிட் ‘முத்து’ படம் 28 வருடங்களுக்குப்பிறகு லேட்டாகவும் லேட்டஸ்டாகவும் ரீ ரிலீஸ் ஆகியிருப்பதுதான் லேட்டஸ்ட் டாக்.
இதில், ரஜினியை அடியாய் அடித்து வீட்டை விட்டு அனுப்பும் காட்சி மிக முக்கியமானது. ரஜினியின் நடிப்பு ஒரு பக்கம் இதயத்தை ரணமாக்கி கண்களை குளமாக்கும். இன்னொரு பக்கம் ரஜினியை அடித்து விரட்டும் பொன்னம்பலத்தின் வில்லத்தனம் நம்மை கோபமாக்கும். நடிகர் பொன்னம்பலத்திற்கும் பாராட்டைக் குவித்த காட்சி. அப்பேர்ப்பட்ட ’முத்து’ படம் இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு ரீ-ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் பொன்னம்பலம்பத்திடம் நாம் கேட்டபோது,
”கடல்ல முத்து எப்படி அதிசயமோ, அதேமாதிரிதான் கே.எஸ். ரவிக்குமார் சார் இயக்குன ’முத்து’ படமும் சினிமாவுல அதிசயம்தான். ’முத்து’ இத்தனை வருஷம் கழிச்சும் திரும்பவும் ரிலீஸ் ஆகுறது மக்கள் இன்னமும் அந்தப் படத்தைக் கொண்டாடி ரசிக்குறதையேக் காட்டுது . ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்துப் பார்த்து செதுக்கினதாலதான் இன்னைக்கும் பொன்னம்பலத்துக்கு அந்த படம் நல்ல பேர் எடுத்துக்கொடுத்தது. மீனா, வடிவேல் இப்படி எல்லாரோட கேரக்டருமே பேசப்பட்டது. ரஜினி சார் படங்கள்ல எல்லா வயதினரும் ரசிக்கும்படியான காமெடியும் சீரியஸும் கலந்த படம் இது. எல்லா புகழும் கே.எஸ். ரவிக்குமார் சாருக்குத்தான் போய் சேரும். அவருக்கு இந்த நேரத்துல என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.
ரஜினி சார், 7 மணிக்கு ஷூட்டிங்குன்னா ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே இருக்குற ஆள். தொழில் மேல அவ்வளவு பற்றுகொண்ட ஒருத்தர்கூட ஒர்க் பன்றது மிகப்பெரிய பாக்கியம்.
அவரை அடிக்கிற சீன் படத்தோட திருப்புமுனை. அவர் அடி வாங்கிட்டு போகும்போது படத்துல இருக்குற கதாப்பாத்திரங்கள் மட்டுமில்ல, பார்வையாளர் அத்தனை பேரும் அழுதுருப்பாங்க. அப்படியொரு, பயங்கரமான செண்டிமெண்ட் சீன். நான், அவரை அடிக்கிற காட்சியில அவர் கொஞ்சம் முன்னாடி வந்ததால தெரியாம உண்மையிலேயே அடி விழுந்துடுச்சு. கீழே விழ பார்த்தவரை எல்லோரும் ஓடி வந்து புடிச்சுட்டாங்க. மற்ற நடிகரா இருந்திருந்தா என் மேல கோபப்பட்டிருப்பாங்க. ஆனா, ரஜினி சார் என்ன சொன்னார் தெரியுமா? ‘சாரி… சாரி… மை மிஸ்டேக்’ அப்படின்னு சொல்லிட்டாரு. உண்மையை சொல்லணும்னா, அவர் அப்படி சொன்னதும் அவர் எப்படி அந்த காட்சியில அழுதுக்கிட்டுப்போவாரோ அப்படித்தான் நான் ஆகிட்டேன். அதனால்தான், அவர் சூப்பர் ஸ்டார். எல்லாரையுமே ஷூட்டிங் ஸ்பாட்டுல ரொம்ப சமமா நடத்துவாரு. க்ளைமாக்ஸ் ஃபைட் மைசூர்ல நடந்துச்சு.
காலையில சண்டை காட்சி நாங்க எல்லாம் கிளம்புறதுக்காக வெளியில வந்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டுல பனி ஊற்றிக்கிட்டிருந்தது. யாரோ ஒருத்தர் 4.30 மணிக்கு சட்டை போடாம உட்கார்ந்திருந்தாங்க. கன்னடக்காரர்தான் யாரோ உட்கார்ந்திருக்காரு. நாம பேசுனாக்கூட அவருக்கு தெரியாது அப்படின்னு நினைச்சுக்கிட்டு, ’யார்ரா அவன்… சட்டைக்கூட போடாம இந்த நேரத்துல காட்டான் மாதிரி உட்கார்ந்திருக்கிறது’ன்னு சொல்லிட்டு, கிட்ட போயி பார்த்தா ரஜினி சார். தூக்கி வாரி போட்டுட்டுச்சு. அவரு ஏன் இமயமலைக்கு போறாரு? எப்படி அந்த குளிரைத் தாங்குறார்ன்னு அப்போதான் தெரிஞ்சது.
கூட ஒர்க் பன்றவங்களோட கஷ்ட நஷ்டத்தை உணர்ந்தவரு. பொதுவா, எந்த படத்துக்கும் அட்வான்ஸ் முன்னாடியே வாங்கமாட்டேன். ’உழைப்பாளி’ படத்துக்கு வாய்ப்பு கிடைச்சது. ரஜினி சார்க்கூட பாக்ஸிங் பன்ற மாதிரி சீன். ஆனா, அந்த நேரம் பார்த்து எனக்கு கால் அடிபட்டிருந்துச்சு. அந்த படத்தோட மேனேஜர் ராமநாதன் சார், அந்த சூழல்லேயும் என்னை நடிக்க கூப்பிட்டாரு. என் காலு அடிப்பட்டிருக்கு. நான் இன்னும் உங்க படத்துக்கு அட்வான்ஸ் கூட வாங்கல. என் நேர்மையை புரிஞ்சுக்கோங்க. கால் அடிபட்டிருக்குற சூழலில் கூப்பிடுறது சரியில்லைன்னு சொல்லிட்டேன். ரஜினி சார்க்கிட்ட போயி நான் சொல்லாதத ஒண்ணுக்கு ரெண்டா போயி சொல்லி விட்டுட்டாரு. எனக்கு பதிலா வேற ஒருத்தரை வெச்சு பண்ணிட்டாங்க. ரஜினி சார்க்கிட்ட தப்பா சொல்லிட்டதால அந்த படத்திலிருந்து விலகிட்டேன்.
அப்புறம், ஒருநாள் ரஜினி சார் டப்பிங்குல இருக்கும்போது அவரைப்போய் பார்த்து என் காலோட சூழலை சொன்னேன். நான் தாங்கி தாங்கி நடக்கிறதை அவரும் பார்த்து புரிஞ்சுக்கிட்டாரு. அதோட, விளைவுதான் எனக்கு ’முத்து’ பட வாய்ப்பு. அதுக்கு முன்னாடி என்னோட சம்பளம் இரண்டரை லட்ச ரூபாயாத்தான் இருந்தது. ’முத்து’ படத்துல ரஜினி சார் சொன்னபிறகு 5 லட்ச ரூபாய் சம்பளமாகிடுச்சு. என் குடும்பத்துக்கும் பல நல்ல விஷயங்கள் அந்த சம்பளத்தாலதான் பண்ண முடிஞ்சது. அதனால்தான் ரஜினி சாரை என் வாழ்க்கையில மறக்கமுடியாது. ரஜினி சாருக்கு கிடைச்ச சூப்பரான படம் ’முத்து’. ஆனா, ரஜினி சார்தான் எனக்கு கிடைச்ச முத்து.
’முத்து’ பட டப்பிங் பேச போனப்போ ரெண்டு சின்ன பொண்ணுங்க வந்து ஆட்டோகிராஃப் வாங்கினாங்க. வில்லனையும் ரசிக்கிற அளவுக்கு ஃபேன்ஸ் இருக்காங்களே, என்னம்மா படிக்கிறீங்க? எங்கம்மா இருக்கீங்கன்னு கேஷுவலா பேசி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துட்டேன். அப்புறம் தெரிஞ்சது அந்த ரெண்டு பேரும் ரஜினி சார் பொண்ணுங்க அப்படின்னு சொன்னாங்க. ரஜினி சார் தூரமா உட்கார்ந்தாரு. நான், வந்ததும் எனக்காக என்னோட ஃபேன்ஸ் ஒரு மணிநேரத்துக்கு முன்னால ரெடி பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருக்காரு. அப்புறம், அங்கிள் கீழல்லாம் விழுறீங்களே, உங்களுக்கு அடி படாதா? அப்படின்னு பேட்டி எடுக்கிற அளவுக்கு என்னை கேள்விகள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க ரெண்டு பேரும். எனக்கு அப்போ ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அவர், எப்பேர்ப்பட்ட ஹீரோ? அவரோட பிள்ளைங்க வந்து என்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்குறதும், பிரமிச்சு பேசுறதும் சாதாரணமான விஷயமா?
இப்போ இருக்கிற ஜனரேஷனுக்கு பொன்னம்பலத்தை எப்படி தெரியுதுன்னு தெரியல. ஆனா, ’முத்து’ படம் மீண்டும் ரிலீஸாகும்போது இப்போ இருக்கிற ஜனரேஷனுக்கு அப்போதைய பொன்னம்பலம் யாருன்னு தெரியும். அவங்களோட பார்வை மாறும். ’முத்து’ படத்தைப் பார்த்தால் பழைய பொன்னம்பலம் உயிர்த்தெழுவான். அதுக்கு மிக முக்கிய காரணம் ரஜினி சாரும், கே.எஸ் ரவிக்குமார் சாரும் தான்.
+ There are no comments
Add yours