தமிழ் சினிமாவில் இது ரீ-ரிலீஸ் சீசன் போல! சில வருடங்களுக்கு முன்னர் வெளியான படங்கள் தொடங்கி 30 வருடங்களுக்கு முன்னால் வந்த படங்கள் வரை தூசு தட்டி, டிஜிட்டலுக்கு மாற்றி, 4K, 2K என்று ரிலீஸ் செய்துவருகிறார்கள். புது ரிலீஸ் படங்களுக்கு நிகராக, பல சமயங்களில் அதற்கும் அதிகமாகவே பழைய படங்களுக்குக் கூட்டம் வருவது ஆச்சர்யமான ஒன்றுதான். அந்த வகையில் கடந்த வாரம் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட ‘முத்து’ மற்றும் ‘ஆளவந்தான்’ படங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. ‘ஆளவந்தான்’ படத்தை மீண்டும் எடிட் செய்து, சில காட்சிகளைக் கத்தரித்து வெளியிட்டிருக்கிறது தயாரிப்புத் தரப்பு.
ஹவுஸ்புல்லாக இருந்த தியேட்டரில் மீண்டும் அதைப் பார்த்த அனுபவம் எப்படியிருந்தது? படத்தில் இன்றும் நம்மை ஆச்சர்யமூட்டிய விஷயங்கள் என்னென்ன? ஒரு விமர்சனமாக இல்லாமல், ஓர் அனுபவமாக இங்கே பார்க்கலாம்.
பொதுவாகவே கமல் படங்கள் என்றால் ஒரு கருத்து உண்டு. ‘இப்ப புரியாது. வீட்டுக்குப் போனாலும் புரியாது. 20 வருஷத்துக்கு அப்பறம் கே டிவில போடறப்ப கொண்டாடுவோம்.’ இது கொஞ்சம் மிகையான ஒரு கமென்ட்டாகத் தோன்றினாலும் கமலின் ஒரு சில படங்களுக்கு அது பொருந்திப் போவது என்னவோ உண்மைதான். என்ன அது 20 வருடங்களா, அல்லது அதற்கும் குறைவான காலகட்டமா என்பதில் வேண்டுமானால் சில மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். அந்த வகையில் ‘ஆளவந்தான்’ நிச்சயம் ‘Way ahead of its time’ என்ற சொல்லாடலுக்குப் பொருத்தமான ஒன்றுதான்.
ஆளவந்தான் உருவான கதை
1980களில் ‘இதயம் பேசுகிறது’ என்ற பல்சுவை வார இதழுக்காக கமல் எழுதிய தொடர்கதை ‘தாயம்’. அதை அப்போதே படமாக எடுக்க நினைத்து இயக்குநர் கே.பாலசந்தரை அணுகியிருக்கிறார். பின்னர் இருவருமே இப்போதைய காலகட்டத்துக்கு இந்தக் கதை சரி வராது என முடிவெடுத்து அந்த முயற்சியைக் கைவிட்டிருக்கின்றனர். பின்னர், 2001-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனின் கதை – திரைக்கதை – வசனத்தில் ‘தாயம்’ கதை ‘ஆளவந்தான்’ என்ற பெயரில் படமாக மாறியது.
2017-ம் ஆண்டு, ஒரு பேட்டியில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா `ஆளவந்தான்’ படம் குறித்து இப்படித் தெரிவித்திருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் இது சாதாரணமான ஒன்றாகத் தெரியலாம். ஆனால் அன்றிருந்த தொழில்நுட்ப பற்றாக்குறைகள், பட்ஜெட் உள்ளிட்டவற்றைப் பார்க்கையில் இதற்கென ஒரு பெரும் உழைப்பைப் போட வேண்டியிருந்திருக்கும். அதற்கான பலன் 22 வருடங்களுக்குப் பிறகு படத்தைப் பெரிய திரையில் பார்க்கும்போதும் புலப்படவே செய்கிறது.
படத்தின் கதை
‘ஆளவந்தான்’ கதை அனைவரும் அறிந்ததே. நந்து தன் சித்தியைக் கொன்றதற்காகச் சிறுவயதிலேயே சிறை செல்கிறான். சிறு வயதின் கசப்பான அனுபவங்களால் அவனுக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது. ‘Schizophrenia’ எனப்படும் மனச்சிதைவு நோய் அது. ராணுவத்தில் பணிபுரியும் விஜய், டிவியில் ரிப்போர்ட்டராகப் பணிபுரியும் தேஜஸ்வினியைக் காதலிக்கிறார். தேஜு கர்ப்பமாகிவிட, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். மனநலக் காப்பகத்தில் இருக்கும் நந்துவிடம் தேஜுவை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறார் விஜய். சித்தியின் வளர்ப்பால் துயரங்களைச் சந்தித்த நந்து எல்லா பெண்களையும் அதே கோணத்தில் பார்க்கிறார். தேஜுவையும் தன் சித்தியின் பிரதிபலிப்பாகப் பார்க்கும் நந்து, அவரிடமிருந்து விஜய்யைக் காப்பதே தன் கடமை என உறுதி எடுக்கிறார். அதற்காக அவர் போகும் எல்லைதான் ‘ஆளவந்தான்’.
கமலின் அசுரத்தனமான உழைப்பு
இப்போது படத்தைப் பார்க்கும்போதுகூட, குறிப்பாக நந்துவும் விஜய்யும் ஒன்றாகத் திரையில் தோன்றும்போதுகூட, இருவருமே கமல்தான் என்ற எண்ணமோ, இருவரும் ஒரே ஆள்தான் என்கிற எண்ணமோ ஒரு ஃப்ரேமில்கூட தோன்றவில்லை. அந்த அளவுக்கு உடலளவிலும் மனதளவிலும் உழைப்பைப் போட்டிருக்கிறார் கமல். எந்தளவுக்கு என்றால், நந்து வித்தியாசமாகக் கண் சிமிட்டுவது, முரடன் போன்ற உடல்மொழியைக் கொண்டிருப்பது, குழந்தையாக கூனி குறுகி நிற்பது, குற்றவுணர்ச்சியில் வாய்விட்டு அழுவது, அப்பாவியாக அம்மா முன்பு ஏக்கத்துடன் நிற்பது என இந்தக் குணாதிசயங்கள், உடல்மொழி எதுவுமே ‘விஜய்’ கமலிடம் வெளிப்படவே இல்லை.
சொல்லப்போனால், அவர் தன் வாழ்வில் ஒவ்வொன்றையும் ஒரு மிலிட்டரி மிஷன்போலவே அணுகுகிறார். முதலில் நந்துவை வெளியே கொண்டுவர வேண்டும், நந்துதான் தப்பித்துவிட்டான் என்று நிரூபிக்க வேண்டும், பிறக்கப்போகும் தன் குழந்தையையும் தேஜுவையும் நந்துவிடமிருந்து காக்கவேண்டும், அதற்காக தன் சகோதரனையே கொலை செய்ய வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே ஏதோ ராணுவ அசைன்மென்ட்கள் போலவே இருக்கின்றன. அப்போதைய காலகட்டத்தில் பல மாஸ் ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடித்ததுண்டு. வில்லன் – ஹீரோ என்று காம்போவாக சவால்களை ஏற்றதுண்டு. ஆனால் இந்தளவுக்கான மெனக்கெடல் வெளிப்பட்டது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வே!
மனநலப் பிரச்னையை அணுகிய விதம்
`ஆளவந்தான்’ படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொரு விஷயம் அதன் அரசியல் தெளிவு. இப்போதுவரை சீரியல் கில்லர் கதைகள், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் தொடர் கொலையாளியாகும் கதைகள் என இந்த ஜானரில், இந்த டெம்ப்ளேட்டில் நிறையவே படங்கள் வந்துவிட்டன. ஆனால், அவை அனைத்திலும் சிறு சிறு `அரசியல் புரிதல்’ தொடர்பான குறைகள் தட்டுப்படவே செய்கின்றன. நாம் அதிகம் கொண்டாடி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில்கூட இந்தப் பிரச்னைகள் இருப்பது உண்டு. இந்த விஷயத்தில்தான் `ஆளவந்தான்’ தனித்து நிற்கிறது. இதுவும் கமெர்ஷியலானதொரு ரூட்டைப் பிடித்தாலும் உளவியல் பிரச்னையை உளவியல் ரீதியாகவே அணுகுகிறது.
நந்து ஏன் அப்படியொரு உளவியல் பிரச்னைக்கு ஆளானான்? ‘சித்தி கொடுமை’ என்று அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. நந்து கொலைகள் செய்கிறான். தான் ‘காதலித்த’ ஷர்மிலியையே கொல்கிறான். ஆனால், அதற்கான உளவியல் பின்னணி தெளிவாக விளக்கப்படுகிறது. ஏதோ ஒரு செயல், ஏதோ ஒரு வார்த்தை அவனுக்கு அவன் சித்தியை நினைவூட்டுகிறது. அல்லது போதை வஸ்துக்கள் அவனை அவன் கட்டுப்பாட்டில் இருக்கவிடாமல் செய்கின்றன. அது அவனைத் தூண்டுவதால் கொலைகள் செய்கிறான். ஆனால் அடுத்த விநாடியே அவனைக் குற்றவுணர்ச்சி ஆட்கொள்கிறது. உதாரணமாக, ஷர்மிலியைக் கொன்றவுடன், போதையின் பிடியில் சித்தி என்று நினைத்துக் கொன்றுவிட்டதாகக் கதறுவான். மூக்கை உறிஞ்சிக்கொண்டு தன் தாயிடம் அவன் கதறியழும் காட்சி அதற்கான வலுவான சான்று. அதில் கமல்ஹாசனின் நடிப்பு அத்தனை ஆழமான ஒன்று. கொலைகாரன் தன் தாயின் முன் குழந்தையாய் மாறியதை அட்டகாசமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.
ஆனால் மேம்போக்காக இந்த நிகழ்வுகளை அணுகினால் நாமும் விஜய் கதாபாத்திரம் போலக் கறுப்பு – வெள்ளையாக, ஆம் – இல்லை என்பதாகத்தான் முடிவுக்கு வரவேண்டியிருக்கும். நந்து கொலைகாரன், அவனைத் திருத்தவே முடியாது, அவன் அழிக்கப்படவேண்டும் என்பதில் விஜய் தீர்க்கமாகவே இருப்பான். தன் மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை அறிந்ததாலோ, அவன் அடிப்படையில் ஒரு ராணுவ வீரன் என்பதாலோ இத்தகையதொரு முடிவுக்கு அவன் சுலபமாக வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஆபத்திலிருக்கும் அவன் மனைவி தேஜுவுக்கே இதில் மாற்றுக் கருத்து உண்டு. குறிப்பாக, நந்துவின் டைரியைப் படித்து அவனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைத் தெரிந்துகொண்ட பின்னர், அவன் ஏன் இவ்வாறு மாறினான் என்பதைப் புரிந்துகொள்கிறாள். அவள் ஒரு பத்திரிகையாளர், தாயாகப் போகிறவள் என்பதெல்லாம்கூட இந்த கரிசனத்துக்கான காரணிகளாக இருக்க வாய்ப்புண்டு. இப்படிக் கதாபாத்திர வார்ப்பிலேயே ஒரு தெளிவு இருக்கும்போதுதான், அது இப்படியானதொரு முரணான, அதே சமயம் சுவாரஸ்யமான பாதைக்குப் படத்தை இட்டுச் செல்லும். அது ‘ஆளவந்தான்’ படத்தில் ஆழமாகவே இருக்கிறது.
வசனங்களில் பிரமிக்க வைத்த எழுத்தாளர் கமல்
மனநல பிரச்னையுள்ள கொலைகாரனுக்குக் கோபத்தை உண்டாக்குகிறேன் என்று வெற்று ஹீரோயிசமாக நம் ஹீரோக்கள் தவறான வார்த்தைகளை அவனிடம் பிரயோகிப்பதுண்டு. ‘ராட்சசன்’ படத்தின் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். ஆனால், ‘ஆளவந்தான்’ படத்தில் ஒரு காட்சியில் வந்து நந்துவைப் பற்றிப் பேசுபவர்கள்கூட சமூகப் பொறுப்புடனும் அரசியல் புரிதலுடனும் ஆத்மார்த்தமாகப் பேசுவார்கள். உதாரணமாக, நந்துவுக்கு விஜய்க்கும் சிறுவயதில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட தேனூஸ் என்ற ஒருவர் நண்பராக இருப்பார். அந்த மக்களின் தலைவர், நந்துவைத் தேடி வரும் விஜய்யிடம் இப்படிச் சொல்வார். “ஆடு, மாடு, கோழி எல்லாம் நாம பாத்துக்கலையா? இந்த தேனூஸை நாங்க அரவணைச்சுக்கலையா? நந்துவும் அப்படித்தான். அவனை எதுவும் பண்ணிடாதீங்க!” என்பார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையே இப்படிச் சரியான கோணத்தில்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்தக் கதையை அதீத சமூகப் பொறுப்புடன்தான் அணுகியிருக்கிறார் எழுத்தாளர் கமல்.
இது மட்டுமல்ல, படம் நெடுக வசனங்களில் தனி முத்திரை பதித்திருப்பார் கமல். க்ளைமாக்ஸில் விஜய்யின் கையைப் பிடித்து நந்து தொங்கும்போது கீழே அவனின் அம்மா அவனை அழைப்பது போன்று ஒரு ஷாட். “கிழே அச்சு அழைக்கிறது. மேலே பிரதி அழைக்கிறது” என்பதாக ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அதே காட்சியில் தன் தம்பியைப் பார்த்து “இந்தக் கட்டையின் பிசிறு நி!” என்பான் நந்து. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
படத்தின் சிறப்பம்சங்கள்
மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் ரியாஸ் கானும் அட்டகாசமாக நடித்திருப்பார். சுயமாகச் சிந்திக்கத் திறனில்லாதபோதும் நந்துவின் திட்டத்தை அவர் பாதியிலேயே கண்டறிவது சுவாரஸ்ய சினிமா. இந்தப் படத்தை இப்போது மீண்டும் பார்க்கும்போது ஒரு விஷயம் புதிதாகத் தெரிந்தது. கமாண்டோவான விஜய் படத்தின் ஆரம்பக் காட்சியில் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டுப் பிணைக் கைதிகளை மீட்பார். அங்கே அவர்களின் தலைவனாக நடித்திருந்தது யார் தெரியுமா? தற்போது ‘அயோத்தி’ படத்தில் கொடுமைக்கார கணவனாக தன் தனிமுத்திரையைப் பதித்தாரே யஷ்பால் சர்மா, அவர்தான்! அதேபோல, கமலிடம் போதை மருந்தை விற்பவராக வருபவர்தான் சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மா. அனுஹாசன் கமலின் அம்மாவாக நடித்ததோடு அல்லாமல், நாயகியான ரவீனா டாண்டனுக்கும் குரல் கொடுத்திருப்பார். ‘சிரி சிரி’ பாட்டில் மிர்ச்சி சிவா தலைகாட்டிவிட்டுப் போவார்.
படத்தின் இன்னொரு சிறப்பம்சம், பிளாஷ்பேக் என்பதை போகிறபோக்கில் இருவர் பேசிக்கொள்வது போல டெம்ப்ளேட் காட்சியாக வடிவமைக்காமல் இரண்டாம் பாதியில் அதற்கும் ஒரு வெளியை அட்டகாசமாகக் கட்டமைத்திருப்பார் கமல். பூர்விக வீடு, அதை விற்க முடிவு செய்வது, அங்கே நந்துவின் டைரியை எடுத்துப் படித்து பிளாஷ்பேக்கைச் சொல்வது என எழுத்து ரீதியாகவும், கலை வடிவமைப்பு, மேக்கிங் ரீதியாகவும் அதற்கென ஒரு மெனக்கெடல் இருக்கும். அதீத வன்முறையைக் காட்சிப்படுத்த அனிமேஷன் உதவியை நாடியிருப்பார்கள். எக்ஸ்டஸி என்ற போதை மருந்தால் வரும் சண்டைக் காட்சி அட்டகாசமான அனிமேஷனாக விரிவது புதியதொரு அனுபவம். மனிஷா கொய்ராலாவைக் கொல்லும் காட்சியிலும் இதே யுக்தி கையாளப்பட்டிருக்கும். பெல்ட்டுடன் கமல் தன் முகத்தைத் தடவிக்கொண்டே கத்தும் அந்த ஷாட் அப்படியே ரியலான ஷாட்டுடன் மேட்ச் கட் செய்யப்பட்டிருக்கும். இதையெல்லாம் இப்போதைய தொழில்நுட்பத்தில் நிகழ்த்திக் காட்டுவது என்பதே சவாலான ஒன்றுதான்!
சங்கர் – எஷான் – லாய் குழுவின் பாடல்களில் சில கதைக்கு வெளியே இருந்தாலும் அந்தக் கால டெம்ப்ளேட்டில் கச்சிதமாகவே பொருந்திவருகின்றன. ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ இன்று வரை ரீல்ஸில் டிரெண்டாகி வருவதே அதன் வெற்றிக்கான சான்று. திருவின் ஒளிப்பதிவு, அந்தக் காலத் தொழில்நுட்ப சிக்கல்களைக் கருத்தில்கொண்டு அப்போதைய நிலைக்கு ஒரு சிறப்பான உழைப்பு என்றே சொல்லலாம். நிறைய ஷாட்களின் கோணங்கள் புதுமையாகவும் மிரட்டலாகவும் இருந்தன. டபுள் ஆக்ட்டில் கிராபிக்ஸ் சற்றே பிசிரடித்தாலும் லைட்டிங்கில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஷர்மிலியைக் கொன்றுவிட்டு நந்து லிஃப்ட்டில் இறங்க, அப்போது ஒவ்வொரு ஃப்ளோராக லிஃப்ட்டின் கதவு திறந்து மூடும். அந்த இடத்தில் நந்துவின் வாழ்க்கையை அத்தியாயங்களாக நிரப்பியது நல்லதொரு கவிதை! அங்கு கடைசி தளத்தில் கமல் இறங்கி வெளியே நடக்க, அந்த ஷாட்டில் லைட்டிங் அத்தனை தத்ரூபமாக மேட்ச் செய்யப்பட்டிருக்கும்.
இப்போது என்னென்ன மாற்றங்கள்?
படம் வெளியான போது 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடியதாகத் தெரிகிறது. இதன் இந்திப் பதிப்பான `அபய்’ ஓ.டி.டி-யில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் எனக் காட்டுகிறது. தியேட்டரில் இப்போது வெளியாகியிருக்கும் தியேட்டர் வெர்ஷன் 2 மணி நேரம் 2 நிமிடங்கள்தான். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் படத்தை வெட்டியிருக்கின்றனர். பழைய வெர்ஷனை என்றோ பார்த்த ஞாபகத்தில் சொல்ல வேண்டும் என்றால் சில ரொமான்ஸ் காட்சிகள், பாடல்களின் சில புட்டேஜ்கள், பிளாஷ்பேக்கில் பள்ளி ஆசிரியர் வரும் காட்சி போன்றவை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல அந்த மாமா கதாபாத்திரத்தின் சில காட்சிகளும் கத்தரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த எடிட்டட் வெர்ஷனிலுள்ள குறை என்றால் பிளாஷ்பேக் காட்சியில் சில குழப்பங்கள் புலப்படுகின்றன. நந்துவை தந்தையிடமும் சித்தியிடமும் விட்டுவிட்டு, விஜய்யை போர்டிங் ஸ்கூலில் மாமா சேர்த்துவிட்டார் என்பது இந்த வெர்ஷனில் தெளிவாகக் காட்டப்படவில்லை. போகிறபோக்கில் அதைக் கடந்துபோய்விடுகின்றனர். மற்றபடி பெரியளவில் குறைகள் தென்படவில்லை. ஒருவேளை பழைய வெர்ஷனையே ரசித்துப் பார்த்தவர்களுக்கு அல்லது முழுப்படத்தையும் பெரிய திரையில் பார்க்கவேண்டும் என்று விரும்பியவர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தரலாம். அதேபோல படத்தின் தொடக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் கதாபாத்திரங்கள் பேசுவது தெளிவாகக் கேட்கவே இல்லை. பழைய டப்பிங் டிராக்கை மீட்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
படம் சொல்லும் அந்த மெசேஜ்
நந்துவுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால் டாஸ் போட்டுப் பார்க்கும் பழக்கம் உண்டு. க்ளைமாக்ஸில் தான் மீண்டும் கொலை செய்யவேண்டுமா அல்லது அம்மாவிடமே சென்றுவிடவேண்டுமா என்று முடிவெடுக்க டாஸ் போடுவார். தலை விழும். அதில் காந்தியின் படம் இடம்பெற்றிருக்கும். அதாவது இனி அஹிம்சை வழி என்பதை குறியீடாக உணர்த்தியிருப்பார் கமல்.
யாரை போர்டிங் ஸ்கூல் அனுப்புவது என்பதை முடிவு செய்யவும் காயின் டாஸ் போடப்படும். அதில் ஒருவேளை நந்துவின் பெயர் வந்திருந்தால், இன்று கொலைகாரனாக நந்து இருக்கும் இடத்தில் விஜய்யே இருந்திருக்கக்கூடும். (டைட்டில் கார்டில் படத்தின் பெயரை ஒரு காயின் கீழே விழாமல் வரைந்து காட்டுவதன் பின்னிருக்கும் குறியீடு – நந்துவின் வாழ்வை அந்த காயின்தான் செதுக்கியது என்பதுதானோ?!)
படத்தின் ஆரம்பத்தில்கூட நந்துவின் மருத்துவர் இப்படிச் சொல்வார். “நந்துவுக்கு நல்ல குழந்தைப் பருவம் அமைந்திருந்தால் அவனுக்கு இருக்கும் அறிவுக்கு ஒரு கவிஞனாகவோ, எழுத்தாளனாகவோ என்னைப்போல ஒரு மருத்துவராகவோ ஆயிருக்கக்கூடும்” என்று. இங்கு வாழ்வின் அனுபவங்கள்தான் ஒருவனின் குணாதிசயங்களை முடிவு செய்கின்றன. ‘ஆளவந்தான்’ சொல்லவரும் கருத்தும் அதுதான்!
`ஆளவந்தான்’ படம் குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours