த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு
09 டிச, 2023 – 13:59 IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் நடித்திருந்தனர். ஆனால், எந்தக் காட்சியிலும் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய மன்சூர் அலிகான் “லோகேஷ் கனகராஜ், த்ரிஷாவை கண்ணில் காட்டினார். ஆனால் உடன் நடிக்க விடவில்லை” என்று கூறினார்.
இதுதொடர்பாக தனியாக பேட்டி அளித்திருந்த மன்சூர் அலிகான், த்ரிஷா குஷ்பூ, ரோஜா பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார் அப்போது பேசிய அவதூறு சொற்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா, குஷ்பூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதற்கு த்ரிஷா, ‘தவறிழைப்பது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்’ என்று சொல்லி மன்சூர் அலிகானை மன்னித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது தலா ஒரு கோடி ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடி பணம் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது பேட்டியை எடிட் செய்து ஒளிபரப்பி தனது மதிப்புக்கு களங்கம் விளைவித்து விட்டதாக தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் அன்று நடக்கிறது.
+ There are no comments
Add yours