சென்னை: அமீரின் ‘மாயவலை’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார். இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – தொடக்கத்தில் ‘நான் ராஜன்’ என இன்ட்ரோ கொடுக்கிறார் அமீர். ‘வடசென்னை’ ராஜன் போல ரக்கடு பாயாக இருப்பார் என எதிர்பார்த்தால் அடுத்தடுத்த காட்சிகள் அதனை உடைக்கின்றன. ‘நான் ராஜன், இது சாரா, இது சத்யா’ என மூன்று பேரை அறிமுகப்படுத்துகிறார். ‘மூன்று பேருக்குள்ளும் அன்பு இருக்கு, பாசம் இருக்கு, காதல் இருக்கு. எப்படி இதெல்லாம் ஒரே நாள்ல முடிவுக்கு வந்துச்சு’ என அவர் ட்விஸ்ட் வைக்கும்போது, படம் மூன்று பேரைச் சுற்றி நடக்கிறது என்பதை உணர முடிகிறது.
அடுத்தடுத்து வரும் காட்சிகள் பிரச்சினைகளை மையப்படுத்து நகர்கிறது. எனினும் மொத்த டீசரிலும் யுவன் சங்கர் ராஜாவின் மெல்லிய பின்னணி இசையும், ‘அடுத்த நிமிஷம் என்ன நடக்குப்போகுதுன்னு தெரியாமல கற்பனையிலயே வாழ்றோம் பாருங்க அதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே’, ‘வாழ்க்க எப்போதுமே ஒரு மாயவலை தான்’ என்ற வசனங்கள் ஹைலைட்ஸ். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ: