இந்தப் படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலனாக, கணவனாக, கறாரான அதே சமயம், குழந்தையின் உடல் நலம் குறித்தக் கவலையான, குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் பாசம் மிக்க தந்தையாக அத்தனை எமோஷன்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். ஆரம்பக்கட்டத்தில் ஜாலியான இளைஞனாகவே படங்கள் நடித்து, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ இமேஜைப் பெற்ற நானி, தற்போது ஒரு தேர்ந்த நடிகராகத் திரையில் மிளிர்ந்து அப்ளாஸ் அள்ளுகிறார். இந்திய சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்கள் எல்லோரும் ஆக்ஷன், துப்பாக்கி, ரத்தம் என பக்கா பீஸ்ட் மோடில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, நானியின் கதைத் தேர்வும் அதை அவர் கையாளும் விதமும் அவரை தனித்துக் காட்டுகின்றன. வாழ்த்துகள் நானி காரு!
‘ஹாய் நான்னா’ படம் அப்பா – மகள் சம்பந்தப்பட்ட படமாக வெளியில் தெரிந்தாலும் நானிக்கு இணையான கதாபாத்திரம்தான் மிருணாள் தாக்கூருக்கும். ஒரு வழிப்போக்கராக அப்பா – மகளின் வாழ்க்கைக்குள் வரும் யஷ்னா, விராஜிடம் கதை கேட்கும் போது, தன்னை விராஜின் மனைவியாகவே நினைத்து கதை கேட்கிறார். அந்தக் கதைக்குள் விராஜின் காதலியாகவும் சரி, மனைவியாகவும் சரி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு வரும் மருத்துவமனை காட்சியில் இவரின் நடிப்பு அட்டகாசம்! திரையில் நடிப்பால் மிருணாள் ஜொலிக்கிறார் என்றால், திரைக்குப் பின்னால் தனது நேர்த்தியான டப்பிங்கின் மூலம் அவரது நடிப்பை மேலும் ஒருபடி கூட்டியிருக்கிறார் சின்மயி. ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு, மிருணாள் தாக்கூரின் கரியரில் மற்றுமொரு நட்சத்திரம் இந்தப் படம்.
+ There are no comments
Add yours