ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘புஷ்பா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி. இவர் தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் துணை நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக ஐபிசி பிரிவு 174-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பஞ்சாகுட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாகுட்டா காவல்துறை அதிகாரி பி.துர்கா ராவ் கூறுகையில், “கடந்த நவம்பர் 29-ம் தேதி துணை நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான விசாரணையில் அவரை யாரோ தற்கொலைக்கு தூண்டியிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு சினிமாவின் மீது ஆர்வம் காரணமாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ஜெகதீஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருகட்டத்தில் பின்னர் இருவரும் தங்கள் உறவை முறித்துக்கொண்டனர். இருந்தபோதிலும், ஜெகதீஸ் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தனிப்பட்ட (அந்தரங்க) புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்தார்.
மேலும், அதனை இணையத்தில் கசிய விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மன அழுத்ததில் இருந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.