சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், இரவு நேரத்தில் அபிஜித் (சைஜூ குருப்) என்பவர் அவரின் மனைவி கௌரியின் (நமீதா பிரமோத்) கண்முன்னாலேயே கொலை செய்யப்படுகிறார். இக்கொலையைச் செய்தது ஒரு பேய் என்று கொலையைப் பார்த்த சிலரும், பெண் என்று போலீஸாரும் யூகிக்கிறார்கள். இந்நிலையில், கௌரியின் தம்பியான நவீன் (காளிதாஸ் ஜெயராம்) கொலைக்கான பின்னணியைக் தேடும்போது, அவரை ஒரு பெண் பின்தொடர்ந்தே வருகிறார். உண்மையில் கொலை செய்தது ஒரு பெண்ணா, பேயா, பின்தொடரும் அந்தப் பெண் யார், அக்கொலைக்கான பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கு ஹாரரும் த்ரில்லருமாக ஒரு பதிலைச் சொல்கிறது வினில் ஸ்கரியா வர்கீஸின் “அவள் பெயர் ரஜ்னி’ (மலையாளத்தில் ‘Rajni’) படம்.
பதற்றம், கோவம், ஆக்ரோஷம், பயம், குழப்பம் என வெவ்வேறு சூழல்களுக்குத் தேவையான நடிப்பைக் குறையின்றி வழங்கியிருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். ஆனால், தனியாளாக ஒரு காட்சியை தன் தோளில் சுமக்கும் நிலை வரும்போது தடுமாறுகிறார். இன்னும் பயிற்சி வேண்டும் ப்ரோ! மிடுக்கான போலீஸாக மிரட்டலாக அறிமுகமாகிறார் அஸ்வின் கே.குமார். ஆனால், அதற்குப்பின் மிரட்டாமல் மிடுக்கை மட்டும் வைத்துக்கொண்டு போர் அடிக்க வைக்கிறார். ரஜ்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சாய் பக்காவான தேர்வு! வெவ்வேறு குணங்களையும், உடலமைப்பையும் கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் மூன்று நிலைகளையும் அட்டகாசமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். ‘பூ’ ராமு, நமீதா பிரமோத், சைஜு குருப் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்கள். கருணாகரன் மூன்று இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, ரெபா மோனிகா ஜான், சௌன் ரோமி ஆகியோர் வந்து போகிறார்கள்.
+ There are no comments
Add yours