தொடங்கியது முதலே ஒவ்வொரு விஷயத்திலும் முந்தைய சீசன்களிலிருந்து வித்தியாசப்பட்டுக் கொண்டே வருகிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7.
இரண்டு வீடுகள், ஓரே நேரத்தில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஆகிய விஷயங்களைத் தாண்டி தற்போது எவிக்ஷன் ஆகி வெளியேறிய போட்டியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு தரும் விதமாக அவர்களைத் திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்புவதும் முந்தைய சீசன்களில் நடக்காதவையே.
அடுத்த சில தினங்களில் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள், இந்த சீசனில் எவிக்ஷனில் வெளியேறிய விஜய் வர்மா, வினுஷா தேவி, மற்றும் அனன்யா ராவ்.
எலிமினேட் ஆகி வெளியேறியவர்களைத் திரும்பவும் அனுப்பும் முடிவை எடுத்த போதே யாரை அனுப்புவதென்பது குறித்து சேனலில் தீவிரமான விவாதம் நடந்திருக்கிறது.
இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் எழுத்தாளர் பவா செல்லத்துரை தானாகவே விரும்பி வெளியேற, பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். எனவே இவர்கள் இருவரது பெயரும் ஆரம்பத்திலேயே ரிஜெக்ட் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த இருவரைத் தவிர்த்து யுகேந்திரன், ஐஷு, கானா பாலா ஆகியோரும் கூட எவிக்ஷன் ஆகி வெளியேறியவர்களே! கானா பாலா கடந்த வாரம்தான் வெளியேறினார். எனவே அவரும் லிஸ்டில் இல்லை. ஐஷுவை அனுப்பலாமென்றால், அவரது வீட்டில் ‘ஒரு தடவை போனதே போதும்’ எனச் சொல்லி விட்டார்களாம்.
இந்த நிலையில்தான் நிகழ்ச்சியை உண்மையிலேயே மிஸ் செய்கிறவர்கள், எவிக்ஷனுக்காக நிஜமாகவே வருந்தியவர்களாக லிஸ்ட் எடுத்து அனுப்பலாமென முடிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கும் மூன்று பேருடைய ரீ-என்ட்ரியின் பின்னாலும் ஓர் அழுத்தமான காரணம் இருப்பதாக அடித்துச் சொல்கிறார்கள், நிகழ்ச்சி தொடர்பிலுருக்கும் சிலர். சரி, யார் யார் எந்தப் பின்னணியில் ரீ என்ட்ரி தருகிறார்கள் என்று பார்க்கலாமா?
பலிகடா ஆக்கியதுக்குப் பரிகாரம்!
முதலில் அனன்யா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஸ்ட்ராங் ரெகமன்டேஷனில் வந்தவர் என இவர் குறித்துச் சொன்னார்கள். ஆனால் நிகழ்ச்சிக்குச் சென்ற வேகத்தில் திரும்பினார் இவர்.
முதல் வார எவிக்ஷனில் இவர் வெளியேறுவார் என எவருமே எதிர்பார்க்கவில்லை. மக்களின் ஓட்டுகளையும் இவர் வாங்கியிருந்த நிலையில் இவர் எலிமினேட் ஆனதன் பின்னணி குறித்து அப்போதே சந்தேகம் எழுப்பினர் தொடர்ந்து பிக் பாஸ் பார்த்து வரும் ரசிகர்கள். ‘யுகேந்திரனைக் காப்பாற்ற இவரைப் பலிகடா ஆக்கிட்டாங்க’ என அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. தான் இப்படி வெளியேறியது குறித்து அனன்யாவுமே பெரிய வருத்தத்திலிருந்த நிலையில், அன்று நடந்ததைச் சரி செய்யும் விதமாகவே மீண்டும் அவரை உள்ளே அனுப்ப முடிவு செய்ததாகத் தெரிகிறது.
‘மிக்சர்’ காயத்துக்கு மருந்து!
‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவி இந்த சீசனில் சென்றது முதல் அந்த வீட்டில் சரியாக விளையாடவில்லை என்பதே பலரது பொதுவான கருத்து. எனவே அவரது எவிக்ஷன் குறித்து யாருக்கும் எந்தவித அதிருப்தியும் இல்லை. ஆனால் அவர் எவிக்ஷனாகி வெளியில் வந்த நாளன்று விஜய் டிவி செய்த ஒரு குசும்பு வினுஷாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.
அவர் வெளியேறுவதைச் சூசகமாகச் சொல்கிறோமெனச் சொல்லி, தங்களுடைய அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் ‘மிக்சர்’ பொட்டலத்தைக் காட்டிக் கலாய்த்திருந்தனர். சேனலின் இந்தச் செயலுக்குப் பலதரப்பிலும் கண்டனங்களும் எழுந்தன. ‘இவர்களே போட்டியாளர்களை அனுப்பிவிட்டு பின்னாடியே இப்படிக் கேலி செய்வது தவறு’ என எழுந்த கண்டனங்களுக்குப் பிறகு அந்த போஸ்ட்டை நீக்கியது சேனல். இந்த மிக்சர் கமென்ட்டுக்குப் பரிகாரம் செய்யும் விதமாகவே இப்போது இவரை மீண்டும் அனுப்ப முடிவு செய்ததாகச் சொல்கிறார்கள்.
நம்பிக்கை, அதானே எல்லாம்!
மூன்றாவது நபராக ரீ என்ட்ரி தரவிருப்பது விஜய் வர்மா. ‘வயசுப் பையன். கொஞ்சம் வேகத்துல சில விஷயங்களைச் செய்துட்டான். ஆனாலும் பிரதீப், நிக்ஷன் இவங்களை ஒப்பிடுகிற போது நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கையோட வந்தவன். அதனால இன்னொரு வாய்ப்பு தந்து பார்க்கலாம்’ என முடிவெடுத்தார்களாம்.
+ There are no comments
Add yours