நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி
06 டிச, 2023 – 11:17 IST
மலையாள திரையுலகில் குணசித்திர நடிகையாக வலம் வருபவர் லேனா. தமிழில் அனேகன், திரவுபதி உள்ளிட்ட சில படங்களில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இங்குள்ள ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான். தனது கருத்துக்களை அவ்வப்போது துணிச்சலாக கூறும் லேனா, கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்பிறவியில் தான் ஒரு புத்த துறவியாக இருந்ததாக உணர்கிறேன் என்று கூறினார். அவரது இந்த கருத்திற்கு சோசியல் மீடியாவில் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்தனர்.
இந்த நிலையில் திருச்சூர் அருகில் உள்ள கல்லூரி ஒன்றின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சுரேஷ்கோபி பேசும்போது, நடிகை லேனாவுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை வெளியிட்டதுடன் அனைவரும் லேனாவை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார். அவர் இந்த இடத்தில், இந்த நிகழ்வுக்கு வராத நடிகை லேனா பற்றி பேசுவதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது.
இந்த நிகழ்வில் பேசிய சுரேஷ்கோபி, “கடந்த 2001ல் நான் இந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அப்போது இந்த கல்லூரியில் முதுகலை மாணவியாக படித்து வந்த லேனா தான் இந்த நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தார். அப்போது எனக்கு காலில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்த நிலையிலும் மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இன்று இந்த கல்லூரியில் படித்த லேனா, கேரளாவில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறார்.
அவர் எந்த ஒரு மதத்திற்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளாதவர். சில நேரம் இதுபோன்று நடிகர்கள் முற்போக்கு கருத்தை கூறும்போது அதை தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் நடிகர்கள் என்பதற்காகவே வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இன்னும் அவர்கள் பக்குவம் அடையவில்லை. பொறாமையின் காரணமாக தான் இப்படி பேசுகிறார்கள்.
நீங்கள் கட்டாயமாக லேனாவை உங்கள் கல்லூரியின் பெருமையாக கருத வேண்டும். அவரை இங்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்து அவரது பேச்சு குறித்து தாராளமாக அவரிடம் விவாதம் நடத்தலாம்” என்று மிக நீண்ட உரையாற்றி லேனாவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
+ There are no comments
Add yours