பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
மாயாவின் செருப்பை சுவர் மீது தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. பிக் பாஸ் என்கிற பெயரின் மீது செருப்பைப் போடுவதின் மூலம் உலகத்திற்கு ஏதாவது செய்தியை உணர்த்த பூர்ணிமா விரும்பினாரோ, என்னவோ. இதெல்லாம் நண்பர்கள் குழுமத்தில் பொதுவாக நடக்கிற விளையாட்டு. இதைப் போய் துண்டாக எதற்கு எடிட்டிங் டீம் காட்டியது என்று தெரியவில்லை. பூர்ணிமாவும், மாயாவும் இத்தனை நெருக்கமான தோழிகளாக இருந்தாலும் இன்னமும் ஏன் ‘வாங்க.. போங்க’ என்று விளித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வடிவேலு மொழியில் சொன்னால் ‘உறுத்துதே!’
மொழியியல் ஆராய்ச்சியாளர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத, என்ன மொழியென்றே தெரியாத சத்தத்தில் ஒரு பாடல் ஒலித்தது. நாள் 54. விஷ்ணுவும் விக்ரமும் சக போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர்களைச் சூட்ட வேண்டும் என்கிற மார்னிங் டாஸ்க் தரப்பட்டது. இது சுவாரசியமாக இருந்தது. மாயாவிற்கு வைக்கோல் போர், பூர்ணிமாவிற்கு ‘சைதை தமிழரசி’, அக்ஷயாவிற்கு பருத்தி மூட்டை (எத்தனை முறை வெளியே அனுப்பிச்சாலும் மறுபடியும் குடோனுக்கே வந்துடுது!), சுரேஷிற்கு பதனி.. பதனி.., போன்ற ரகளையான பட்டப்பெயர்களை விஷ்ணு வழங்கினார்.
மணி – ரவீனா ஜோடிக்கு buy one, get one என்று பண்டிகை கால சலுகைத் திட்டம் மாதிரி விக்ரம் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தார் ரவீனா. விசித்ராவிற்கு தண்ணி லாரி, (குழாயடிச் சண்டை), தினேஷிற்கு இம்சை அரசன் போன்ற அடையாளங்கள் வழங்கப்பட்டன. விக்ரம் எவ்வாறு மற்றவரின் பின்னால் ஒளிந்திருந்து சண்டை போடுவார் என்பதை சுரேஷ் ஜாலியாக நடித்துக் காட்டினார். ‘தொட்டாற்சிணுங்கி’ என்று அர்ச்சனாவிற்கு விஷ்ணு பெயர் சூட்டியதை அவர் ரசிக்கவில்லை.
+ There are no comments
Add yours