தென்னிந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் ஆர்.நாகேந்திர ராவ். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், சிறந்த திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர். சென்னையில் வசித்துவந்த இவர், கன்னட சினிமாவின் முதல் பேசும் படமான ’சதி சுலோச்சனா’வில் (1934) ராவணனாக நடித்தவர். தமிழில் ராஜா சாண்டோ இயக்கி வெளிவந்த, ’பாரிஜாத புஷ்பரோஹம்’ (1932) படத்தில் நாரதராகவும், ’கோவலன்’ (1933) படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இவர், தனது ஆர்.என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த படம், ‘அன்பே தெய்வம்’. தமிழில் ஆர்.நாகேஸ்வர ராவுடன் எம்.கே.ராதா, கே.சாரங்கபாணி, சி.வி.வி.பந்துலு, ஸ்ரீரஞ்சனி ஜுனியர், என்.ஆர்.சந்தியா உட்பட பலர் நடித்தனர். இதே படம் கன்னடத்தில் ‘பிரமத புத்ரி’ என்ற பெயரில் உருவானது. ஹீரோவாக உதயகுமார் நடித்தார். சந்தியா நாயகியாக நடித்தார்.
திரைப்பட தயாரிப்பாளரான மோகன்ராவ் மனைவியுடன் வசித்து வருகிறார். அருகில் குழந்தை உமாவுடன் வசித்து வருகிறான் ஒரு திருடன். மோகன்ராவ் வீட்டில் கொள்ளையடிக்க முயலும்போது ஒருவரைக் கொன்றுவிடுகிறான். கணவனைக் காப்பாற்ற மனைவி பொய் சொல்கிறாள். ஆனால், கணவனும் மனைவியுமே சிறை செல்ல, குழந்தை உமாவைத் தத்தெடுத்து வளர்க்கிறார் மோகன் ராவ். வளரும் உமா, போலீஸ் அதிகாரி மகனைக் காதலிக்கிறார். திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது, சிறையில் இருந்து வரும் உமாவின் தந்தை, மோகன் ராவை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது படம்.
இதன் கதையை ஆர்.நாகேந்திர ராவ் மகன்ஆர்.என்.ஜெயகோபால் எழுதினார். பல கன்னடப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ள இவர், சில படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழில்கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நந்தகோபால் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
ஆர்.நாகேந்திர ராவின் மற்றொரு மகனான ஆர்.என்.கே.பிரசாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். இவர் தமிழில் நாயகன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
ஹெச்.ஆர்.பத்மநாப சாஸ்திரியும் விஜய பாஸ்கரும் இணைந்து இசை அமைத்தனர். சுந்தர கண்ணன் பாடல்களை எழுதினார். சீர்காழிகோவிந்தராஜன், பி.லீலா பாடிய ‘அத்தானை எங்கேயும் பாத்தீங்களா’, பி.சுசீலா பாடிய ‘இன்பமெல்லாம் தந்தருளும்…’, லீலா பாடிய, ‘வாராயோ.. நித்திரா தேவி, எந்தன் வண்ணச் சிலையைத் தூங்க செய்யாயோ’, ‘ அன்பே தெய்வ மயம் இவ்வுலகில்’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
எம்.கே.ராதா, திருடனாக நடித்திருந்தார். கிளைமாக்ஸில் அவர் நடிப்பு அப்போது பேசப்பட்டது. அன்பே தெய்வம் என்று தலைப்பு வைக்கப்பட்டதாலோ என்னமோ படத்தில் அன்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்