இந்த வாரத்தின் கேப்டனுக்கு கூடுதலான இம்சை விதிகளை ஏற்படுத்தி ரசித்து மகிழ்ந்தார் பிக் பாஸ். எனவே கோபத்தை அடக்கிக் கொண்டு ‘வசூல்ராஜா’ பிரகாஷ் ராஜ் போல் சிரித்தே சமாளிக்க வேண்டிய நிலைமை விஷ்ணுவிற்கு. பெரிய வீடு செய்த நாமினேஷனில் நிக்சன் ஒருவர் மட்டுமே தேர்வானது, இந்த சீசனிலேயே நடக்காத அதிசயம். விக்ரம் தொடர்பாகவும் ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது, இன்னொரு அதிசயம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
விஷ்ணு கேப்டன் என்பதாலோ, என்னமோ, அவரது ரொமான்ஸ் மூடிற்கு ஏற்ப, ‘இச்சு. இச்சு.. இச்சு.. இச்சு கொடு’ என்று மழைக்காலத்திற்கு ஏற்ற பாட்டை போட்டு விட்டார் பிக் பாஸ். கடந்த முறை நிக்சனுக்கு இருந்ததைப் போலவே இந்த முறையும் கேப்டனுக்கான செக்மேட்கள் இருந்தன. கூடுதல் அம்சங்களுடன் தரமான சம்பவங்களாகவே இருந்தன.
விதிமீறல் நிகழ்வதில் கேப்டன் அலட்சியம் காட்டினாலோ, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டாலோ, வீட்டில் எண்டர்டெயின்மென்ட் இல்லாமல் போனாலோ கேப்டனுக்கு எதிராக மணி அடிக்கலாம். அவருடைய விளக்கம் தொடர்ந்து மூன்று முறை ஏற்கப்படாமல் போனால், கேப்டன் தன்னுடைய பதவியை இழப்பதோடு, அடுத்த வார நாமினேஷனிலும் நேரடியாக இடம் பெறுவார். விஷ்ணு, தன்னுடைய ‘சண்டைக்கோழி’ மோடில் இருந்து முற்றிலுமாக நகர்ந்து ‘ராஜதந்திர’ பாணிக்கு மாற வேண்டிய சமயம் இது. என்ன செய்வார்?
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஆறு நபர்களை கேப்டன் தன்னிச்சையாக முடிவு செய்து அனுப்ப வேண்டிய நேரம். இதற்காக மூன்று காரணங்களை பிக் பாஸே பட்டியலிட்டிருந்தார். ‘பெரும்பான்மையான ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிடிக்காத இரண்டு நபர்கள்’ என்கிற கேட்டகிரியில் விஜய் மற்றும் அனன்யா தேர்வு செய்யப்பட்டார்கள். ‘மக்களுக்குப் பிடிக்காத நபர்கள்’ என்கிற கேட்டகிரியில் பூர்ணிமா மற்றும் நிக்சனை தேர்ந்தெடுத்தார் விஷ்ணு. பூர்ணிமா இதை உள்ளூற எதிர்பார்த்திருந்தாலும் வழக்கம் போல் அப்பட்டமான திகைப்பு அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால் பூர்ணிமாவே பிறகு கேள்வி எழுப்பியபடி ‘மக்களுக்குப் பிடிக்காத நபர்கள்’ என்பது விஷ்ணுவிற்கு எப்படித் தெரியும்?
‘நான் மக்களுக்குப் பிடிக்காத நபரா?’ – பூர்ணிமா கோபம்
மூன்றாவது தலைப்பான ‘எனக்குப் பிடிக்காத நபர்கள்’ கேட்டகிரியில் விக்ரம் மற்றும் ரவீனாவை தேர்ந்தெடுத்தார் விஷ்ணு. இதற்காக அவர் சொன்ன காரணம் ‘மணி-ரவீனா கூட்டணியை பிரிக்க வேண்டுமாம்’. இது ஓகே. ஆனால் ‘விக்ரமை, அவரது கேப்டன்சி காலத்தில் இருந்தே எனக்குப் பிடிக்காது’ என்று சொன்னது ஏற்புடையதாக இல்லை.
‘மக்களுக்குப் பிடிக்காத நபர்கள்’ கேட்டகிரியில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பூர்ணிமாவிற்கு கடுமையான ஆட்சேபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. ‘மக்களுக்குப் பிடிக்கலைன்னு அவரா எப்படி முடிவு செய்ய முடியும்?’ என்று கேள்வியெழுப்ப “அதானே.. அந்த கேட்டகிரில என்னைத் தேர்ந்தெடுத்திருந்தா, நான் சண்டை போட்டிருப்பேன்” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார் விக்ரம். (பார்றா!). “விஷ்ணுவிற்கு மத்தவங்க மேல கை வைக்க தைரியமில்ல. நம்மள ஈஸியா நெனச்சிடறாரு. அசிங்கமான ஆட்டம் ஆடறாரு” என்றெல்லாம் பூர்ணிமாவின் புலம்பல்கள் நீண்டன.
“நான் ஈஸியான டார்கெட்டா.. என்னை எல்லோரும் ஏமாத்தறாங்க’ என்று கண்கலங்கிய பூர்ணிமாவை, வழக்கம் போல் கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார் மாயா. “விஷ்ணுவிற்கு மக்கள் சப்போர்ட் வேணும். அதுக்காக என்னை அட்டாக் பண்றார்” என்று மாயாவிடம் புலம்பிக் கொண்டிருந்த பூர்ணிமாவை தூரத்தில் குற்றவுணர்வுடன் பார்த்தபடி நின்றிருந்தார் விஷ்ணு, பிறகு அருகில் வந்து ஆறுதல் சொன்னார்.
“ஏண்டா. இப்படிப் பண்ற. இதை பர்சனலா எடுத்துக்காத. என் ஷூக்குள்ள நின்னு பாரு. நம்ம படத்துல ரெண்டு பேரும் ஹிட்டுதான்” என்றெல்லாம் சொல்ல “நான் வில்லன் இல்லை. ஓகே.. அதெல்லாம் வேணாம்.. நீங்க பண்ணது ஸ்ட்ராட்டஜியா.. அல்லது கேள்விக்கான பதிலா?” என்று பூர்ணிமா கறாராக கேட்க “என் ஆளு ஒருத்தர் அங்க இருக்கணும்னு நெனச்சேன். அதனாலதான் உன்னை அங்க அனுப்பறேன். நான் உன்னை நம்பறேன்” என்று விஷ்ணு தேன் கலந்து பேச “நீங்க என்னை நம்ப வேணாம்” என்று சொல்லி விலகினார் பூர்ணிமா. ‘பர்சனலா எடுத்துக்காத. ஸாரி’ என்கிற விஷ்ணுவின் குரல் பின்னால் கேட்டது.
ஒருவர் மீது ஒருவர் தன்னிச்சையான ஈர்ப்பு கொண்டிருந்தாலும், ஒருவரையொருவர் நம்பாத உறவாக விஷ்ணு – பூர்ணிமா உறவு நீண்டு கொண்டிருக்கிறது. சூட்கேஸின் மீது பூர்ணிமாவை அமர்த்தி தள்ளிக் கொண்டு போனார் நிக்சன். (இதை யூட்யூப் காரர்கள் எப்படி தலைப்பாக்குவார்கள் தெரியுமா?!)
சைக்கிள் ஓட்டினால்தான் அடுப்பு எரியும்
கடைசியில் நிக்சன் சொன்ன கிரியேட்டிவிட்டியை சற்று கொண்டு வருவதற்கு பிக் பாஸ் முயற்சி செய்தார் போலிருக்கிறது. சமையல் கேஸ் விஷயத்தில் ஒரு டிவிஸ்ட். அடுப்பு எரிய வேண்டுமென்றால், ஒருவர் சைக்கிளை தொடர்ந்து மிதிக்க வேண்டும். பார்வையாளர்களின் கருத்துக் கணிப்பு படி ‘பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள்தான் சைக்கிளை மிதிக்க வேண்டும்’ என்று முடிவுகள் வந்ததாம். நியாயமான முடிவு. பெரிய வீட்டில் உள்ளவர்கள்தான் வேலை, வெட்டியே இல்லாமல் பொழுதன்னிக்கும் படுக்கையில் உருண்டு வம்பு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சைக்கிள் ஓட்டும் இருவரை வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தினேஷ். ‘சுரேஷை இதுல கோர்த்து விடலாம்’ என்று சின்ன வீட்டு மக்கள் முடிவு செய்ய, சுரேஷ் தேர்வானார். ‘உலக ஆணழகன் போட்டியில்’ வென்றதைப் போல ஹைடெஸிபலில் கத்தி இதை வெற்றியாகக் கொண்டாடினார் சுரேஷ். ‘சைக்கிள் ஓட்டறது தண்டனை மாதிரியான வேலைண்ணே. ஆப்பு மாதிரி” என்று மற்றவர்கள் சொல்ல “நான் சைக்கிள் மிதிச்சாதான் சமையல். இல்லைன்னா கேஸ் ஆப்பு” என்று இதை பாசிட்டிவ்வாக எடுத்துச் சென்றாலும் சுரேஷால் சைக்கிளை சரியாக மிதிக்க முடியவில்லை. பெரும்பாலும் தினேஷ்தான் செய்ய வேண்டியிருந்தது.
கிச்சன் ஏரியாவில் ஒரு கலாட்டா
கிச்சனனுக்கு முன்னால் நின்று எதையோ தொடர்ந்து அர்ச்சனா சொல்லிக் கொண்டிருந்ததால் எரிச்சலான நிக்சன், “இங்க நிக்காதீங்க. டிஸ்டர்ப் ஆகுது” என்று ஆட்சேபிக்க “கடாயை எடுத்து மூஞ்சி கிட்ட நீட்டறான் ப்ரோ. ஏதாவது ஆச்சுன்னா இவனா ட்ரீட்மெண்ட் பார்ப்பான்?” என்று ஆவேசமாக மணியிடம பிறகு கேட்டுக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘அப்படில்லாம் பண்ணலை’ என்று விஷ்ணுவிடம் இதை மறுத்துக் கொண்டிருந்தார் நிக்சன். அப்படி கடாயை வைத்து டெமோ காட்டும் போது விஷ்ணுவின் முகத்திலும் அவர் இடித்திருப்பார். நல்ல வேளையாக நடக்கவில்லை.
“சரி. நில்லுங்க. ஆனா சமையல்ல கொஞ்சம் உப்பை கூடுதலா போட்டுருவோம். பரவால்லயா?” என்று ஜாலியாக பிளாக்மெயில் செய்தார் விக்ரம். அர்ச்சனாவிற்கு ஆதரவாக களத்தில் குதித்தார் மாயா. அதாவது அவர் உண்மையாகவே சோபாவைத் தாண்டிக் குதிக்க, சரேல் என்று சறுக்கி கீழே விழுந்தார். ஜோவிகா இல்லாத குறையை போக்குகிறார் போல. வலியால் முகம் சுளித்த மாயாவை அர்ச்சனா தூக்கிச் சென்றார். (இன்னமும் பயிற்சி வேண்டுமோ?!)
‘கிச்சன் முன்னாடி நிக்காதீங்க. டிஸ்டர்ப் ஆகுது’ என்று சின்ன வீடு ஒருபக்கம் கூப்பாடு போட “நிப்போம். என்ன இப்ப?’ என்று இன்னொரு பக்கம் பெரிய வீடு மல்லுக்கட்ட ‘யப்பா டேய்.. கெஞ்சிக் கேக்கறேன். விட்டுர்றா இதை” என்று நிக்சனிடம் கைகூப்பி கெஞ்சினார் விஷ்ணு. (நம்ம சண்டைக்கோழி விஷாலா இது?!)
‘என்னது?! நான் மட்டுமா?! – நிக்சன் அதிர்ச்சி
நாமினேஷனை ஆரம்பித்தார் பிக் பாஸ். முதலில் பெரிய வீடு. இது பற்றி பேசிக் கொள்ளக்கூடாது என்று கமல் கண்டித்ததை மக்கள் உண்மையாகவே பின்பற்றினார்களோ என்னமோ. இந்த சீசனின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே ஒருவர் மட்டும்தான் இறுதியில் நாமினேட் ஆனார். ஆம், நிக்சனுக்கு ஐந்து வாக்குகள் கிடைத்ததால் ‘நிக்சன் மற்றும் நிக்சன்’ என்று வித்தியாசமாக அறிவிப்பு செய்தார் பிக் பாஸ். நிக்சன் அதிர்ச்சியடைய, மற்றவர்கள் ‘அய்யா.. ஜாலி..’ என்று தப்பித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அனன்யா, விஜய், பூர்ணிமா ஆகியோருக்கு தலா இரண்டு வாக்குகள் விழுந்திருந்தன. ஆக, பெரிய வீட்டின் டார்கெட் முழுவதும் நிக்சன் மீது இருந்ததால் மற்றவர்கள் எளிதாக தப்பித்து விட்டார்கள்.
இப்போது சின்ன வீடு நாமினேட் செய்ய வேண்டிய நேரம். இவர்கள் சற்று பரவாயில்லை. ஆனால் இவர்களும் மாயா போன்ற முக்கிய டார்கெட்டுகளை வீழ்த்துவதில் சொதப்பினார்கள். ஆக, இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள்: நிக்சன், தினேஷ், மணி, விசித்ரா மற்றும் அர்ச்சனா.
பொறுப்பே இல்லாத 2 நபர்களை ஷாப்பிங் அனுப்ப வேண்டும் என்று கேப்டனுக்கு உத்தரவிட்டார் பிக் பாஸ். இதற்காக அனன்யாவின் பெயரை விஷ்ணு சொன்ன போது ‘என்னது?’ என்று அதிர்ச்சியில் வாய் பிளந்தார் அனன்யா. “உனக்கு வாய்ப்பு தரதில்லைன்னு சொன்னேயில்ல. அதுக்குத்தான் இப்ப தேர்வு செய்தேன்” என்று சாமர்த்தியமாக அல்வா கொடுத்தார் விஷ்ணு.
அடுத்ததாக மாயாவின் பெயரை விஷ்ணு சொல்ல ‘வாட்?’ என்று துள்ளிக்குதித்த மாயா “இது நிச்சயம் அட்டாக்தான். நான் பொறுப்பில்லையா” என்றெல்லாம் அலப்பறை செய்ய, மாயா கோப்பைகளை கழுவாத விவகாரம் மீண்டும் வெடித்து அர்ச்சனாவிற்கும் மாயாவிற்கும் இடையில் மெல்லிய உரசல் ஏற்பட்டது.
ஒருவழியாக இருவரும் ஷாப்பிங் கிளம்பினார்கள். ‘என்ன ஆகுமோ?’ என்று மற்றவர்கள் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது வெற்றிகரமாக முடித்து வந்தார்கள். “போன முறையை விட இது தேவலை’ என்று சான்றிதழ் தந்தார் விசித்ரா. ஷாப்பிங்கின் கடைசிக் கட்டத்தில் ‘ஃபைவ் ஸ்டார் சாக்லேட் எடுக்கலாமா?’ என்று அனன்யா அந்தப் பக்கமாக செல்ல “எடுடா.. செல்லம். எப்படி ஞாபகம் வெச்சிருக்கு பாரேன்’ என்று டிவி வழியாக பார்த்துக் கொண்டிருந்த ரவீனா துள்ளிக் குதித்தார். (சாக்லேட் பைத்தியம் போல!)
விக்ரம் செய்த சிறிய குறும்பால் நிகழ்ந்த பெரிய கலவரம்
அடுத்ததாக வீட்டுப்பணிக்கான டாஸ்க்கில் இரு வீடுகளும் மோத சின்ன வீடு வெற்றி பெற்றதில் துள்ளிக் குதித்தார்கள். சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த தினேஷ் மற்றும் சுரேஷ் (என்னத்த ஓட்டினாரு?!) ஆகிய இருவரில் ஒருவரை மாற்றிக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார். இதில் இரு வீடுகளும் பங்குபெறலாம் என்று விதியில் திருத்தமும் செய்தார். சுரேஷின் உடல்நலம் கருதி சைக்கிள் சேவையை தான் தொடர்வதாக தினேஷ் அறிவிக்க, இன்னொருவரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடந்தது. சைக்கிள் ஓட்டும் சாதாரண விஷயம்தான். இதற்கு நடந்த அல்லோலகல்லோலம் இருக்கிறதே?! அப்பப்பபா!
‘ஸ்மால் பிக் பாஸ் வீட்ல இருக்கறவங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன்’ என்று இதை ஏதோ உதவி போல விஷ்ணு ஆரம்பிக்க, அங்கிருந்து சிரிப்புச் சத்தம்தான் கேட்டது. ஒருவழியாக அவர்களும் பங்கெடுக்க முடிவு செய்து ரவீனா கைகளை உயர்த்த, அவரின் கைகளை விக்ரம் இறக்கி விட்டார். ஜாலியாக செய்த விஷயம்தான். ஆனால் இதுவே பெரிய சர்ச்சையாக மாறியது. விக்ரம் கூட சர்ச்சை ஏரியாவிற்குள் வருவது அதிசயம்தான்.
ரவீனாவின் கை விக்ரமால் இறக்கப்பட்டதன் காரணமாக ‘விதிமீறல் நிகழ்ந்து விட்டது’ என்று பெரிய வீடு கத்திக் கொண்டே கிச்சனை நோக்கி ஓடியது. ‘நான் சுரேஷ் வாயை இதே மாதிரி பொத்தினதுக்கு என்னல்லாம் பேசினப்பா தம்பி?” என்று விக்ரமை நோக்கி பஞ்சாயத்து வைத்தார் தினேஷ். ‘நான் ஜாலியாத்தான் பண்ணேன்” என்று விக்ரம் தொடர்ந்து சொன்னாலும் அது ஏற்கப்படவில்லை. “ஆக்சுவலி.. சைக்கிள் ஓட்டறது.. நாமினேஷன்ல இருக்கறவங்களுக்கு நல்லது. அப்பதான் கண்ல தெரிவோம்” என்று விஷ்ணு ஐடியா கொடுக்க, சைக்கிள் ஓட்டுவதற்காக அர்ச்சனா முயற்சி செய்தார். பிறகு ரவீனாவே இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விக்ரமை நோக்கி வந்த விஷ்ணு ஆவேசமான கேள்விகளை கேட்டதால் “ஏன்.. ஏன்.. இவ்வளவு கோபம். இவ்வளவு வேகம்.. பொறுமையா பேசுங்க” என்று அவரை விஜய்யும் பூர்ணிமாவும் ஆட்சேபித்தார்கள். சைக்கிள் ஓட்டுவதில் விக்ரமின் பெயரை அர்ச்சனா இழுத்ததால் “தேவையில்லாம என்னை சுரண்டிப் பார்க்காதே’ என்று படையப்பா போல பொங்கினார் விக்ரம். “இனிமே உன் பெயரையே சொல்ல மாட்டேன். போதுமா?” என்று காண்டானார் அர்ச்சனா. “விக்ரம் சைக்கிள் ஓட்டணும்..’ என்பதை ‘விக்ரமை ஓட்டணும்’ என்பதாகப் புரிந்து கொண்டதால் வந்த குழப்பமாம் இது. கடவுளே!
‘நெகட்டிவ்வோட முழு உருவம் பூர்ணிமா’
சின்ன வீட்டாரிடம் பொறுமையாக பேசி விட்டுத் திரும்பிய விஷ்ணுவிற்கு பொறுமை எல்லை கடந்து விட்டது போல. “நீங்க மணி அடிக்கறதுன்னா அடிங்க.. நான் நாமினேஷனை தைரியமா ஃபேஸ் பண்ணுவேன். எனக்குல்லாம் பயமில்லை” என்று எல்லை தாண்டி வந்து விட்ட தைரியத்தில் பேச “ஹலோ.. என்னாச்சு. இங்க இருந்தவரை ஒழுங்காத்தான பேசினீங்க. நாங்களும் விளக்கம் தந்தோம். திடீர்னு ஏன் துள்றீங்க?” என்கிற மாதிரி கேட்டார் பூர்ணிமா.
“விக்ரம் ஜாலிக்காக பண்ண ஒரு விஷயத்தை பெரிசு பண்ணாதீங்க” என்று விக்ரமிற்கு பரிந்து பேசினார் நிக்சன். “இது விளையாட்டுன்னா, சுரேஷ் வாயை தினேஷ் பொத்தினதும் விளையாட்டுதான். அப்ப மட்டும் அதை பெரிய பஞ்சாயத்தா மாத்தினீங்கள்ல?” என்று மணி கேட்டதில் நியாயமுள்ளது. “சின்னச் சின்ன தப்புகள்தான் பெரிய விஷயத்திற்கு இட்டுச் செல்லும்” என்கிற பெரிய தத்துவத்தை சிறியதாக சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
‘நெகட்டிவ்வோட முழு உருவமே பூர்ணிமாதான்” என்று பிறகு சுரேஷிடம் அனத்திக் கொண்டிருந்தார் விஷ்ணு. (என்னாச்சு.. ஜெஸ்ஸி?!) இந்த விவகாரம் இன்னமும் அடங்காமல் புகைந்து கொண்டிருந்தது. அர்ச்சனாவிற்கும் பூர்ணிமாவிற்கும் இடையில் ‘புரிஞ்சுதா.. புரியலையா?’ என்று தீவிரமான வாக்குவாதம் நடக்க, ஒரு கட்டத்தில் அர்ச்சனா உரையாடலில் இருந்து விலக “தைரியம் இருந்தா… உக்காந்து பேசுங்க” என்று சவால் விட்டார் பூர்ணிமா.
‘குமாரு.. இன்னிக்கு ஒரு நைட் தாண்டிட்டா..இந்த ஏரியா உந்துதான். எடுத்துக்க’ என்று புதுப்பேட்டை படத்தில் வசனம் வரும். அது போல இந்த வாரத்தை விஷ்ணு தாண்டி வருவது அவருக்கு கண்டம்தான் போல. இப்போது பார்வையாளர்களுக்கான கண்டத்தைப் பார்க்கலாம். இந்த வாரம் ‘குழந்தைகள் டாஸ்க்காம்’. போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி செயல்படுவார்கள். ஆம், அந்தப் புயல் நம்மை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்கள்!.
+ There are no comments
Add yours