Bigg Boss 7 Day 56: `இனி அவ்வளவுதான்!' – சாட்டை சுழற்றிய கமல்; கதிகலங்கிய பூர்ணிமா!

Estimated read time 1 min read

`என்னை மட்டுமே விசாரிக்கறாரு. மத்தவங்களை விசாரிப்பதில்லை’ என்பது கமல் அங்கிள் குறித்து தொடர்கிற பூர்ணிமாவின் அனத்தல். ‘கமல் இதையெல்லாம் விசாரிக்காமல் விட்டு விடுகிறார்’ என்பது பார்வையாளர்களின் தொடர்ச்சியான புகார்.

போன்றவற்றிற்கு அழுத்தமான பதிலைச் சொல்ல கமல் முடிவு செய்து விட்டாரோ, என்னமோ, ‘விமர்சனம்’ என்பதன் வரையறை பற்றியும் தன்னிலை விளக்கமாகவும் பத்து பக்கத்திற்கு வசனம் எழுதி பொழிந்து தள்ளி விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“ஒருவரை மேம்படுத்துவதுதான் விமர்சனம். Constructive Criticism-ஆ அது இருக்கணும். ஒரு ஆளை காலி பண்ற மாதிரி இருந்தா அது விமர்சனம் இல்ல. விஷம். நல்ல விமர்சனம்ன்றது நம்மளையே நமக்கு காட்டற கண்ணாடி. தப்பா காட்டுதேன்னு முகத்தை திருப்பிக்கிட்டு உக்காந்தா இழப்பு நமக்குத்தான்” என்கிற முன்னுரையுடன் அரங்கில் பேச ஆரம்பித்த கமல், பிறகு வீட்டிற்குள் நுழைந்து ‘விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத நபர் யார்?’ என்கிற கேள்வியை முன்வைத்தார்.

இது பூர்ணிமாவிற்கு போடப்பட்ட ஸ்கெட்ச்சாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் அர்ச்சனாவின் பெயரைச் சொன்னார்கள். அர்ச்சனா மட்டுமே பூர்ணிமாவின் பெயரைச் சொன்னார். அந்தச் சமயத்தில் பார்வையாளர்களின் கைத்தட்டல் கேட்டது.

கமல்

“நான் மத்தவங்களைப் பத்திச் சொல்லும் போது பாசிட்டிவ் நோட்டையும் கூட சேத்துப்பேன். நான் அழுததை மட்டும்தான் ஹைலைட் பண்ணி சொல்றாங்க” என்று இதற்கு விளக்கம் தந்தார் அர்ச்சனா.

பிறகு தன்னிலை விளக்கமாக கமல் ஆற்றிய உரை ‘பராசக்தி’ கோர்ட் வசனம் போல நீண்டது “நீங்க பண்ண தப்பு பத்தி கேட்டா, அவரு என்னைவிட அதிகம் செஞ்சிருக்காரேன்னு இன்னொருத்தரை கை காட்டறீங்க. உங்க தப்புக்கு என்ன பதில்? வாங்க சேர்ந்து கேக்கலாம்னு சொல்ல மாட்டேன்றீங்க. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கறவங்க இங்க குறைவு. இங்க யார் மேலயும் எனக்கு ஃபேவரிட்டஸம் இல்ல. நீங்களே இங்க ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்ல இருக்கீங்க. எனக்கு யார் மேலயும் கோபமும் நன்றியும் இல்ல. வெளியே போகும் போது நீங்க நல்ல கலைஞர்களாக மாறணும்ன்றதுதான் என் விருப்பம்.. பெரிய விஷயத்தைத்தான் முதல்ல அட்ரஸ் பண்ணணும்” என்றெல்லாம் விளக்கம் தந்த கமல், அடுத்த வாக்கியங்களில் இறங்கி அடித்து ஆடினார்.

“நான் உங்க கூட சேர்ந்து விளையாட வரலை” – கமல் காட்டம்

“நான் எதையெல்லாம் விமர்சிக்கணும்னு நீங்க முடிவு பண்ண முடியாது. இந்த வாரம் மட்டும் அவர் இதைக கேக்காம போகட்டும்.. இருக்குன்னு உங்களுக்குள்ள பேசிக்கறீங்க. நான் கேக்கலைன்னா என்னை என்ன பண்ணிடுவீங்க.. நான் உங்க கூட சேர்ந்து விளையாட வரல. உங்களை மேம்படுத்த வந்திருக்கேன். தோத்தவங்களைப் பார்த்து சிரிக்க மாட்டேன். நானே அப்படி தோத்து தோத்துதான் வந்தவன். தோல்விதான் படிக்கட்டு…”

“இங்க நாம பொதுநலனுக்காக மட்டுமே எதையும் பண்ணலை. நானும் சம்பளம் வாங்கறேன்.. நீங்களும் சம்பளம் வாங்கறீங்க.. ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டுத்தான் வந்திருக்கோம்… நான் என்ன பேசணும்ன்னு நீங்க டயலாக் எழுதாதீங்க. அதுக்கு முன்அனுபவம் வேணும். உங்க கிட்ட அது இருக்கா? உங்க டயலாக்கை நான் எழுத மாட்டேன். அப்படி எழுதினா பெட்டர் ஆயிடும். எல்லா கேரக்ட்டரும் பேலன்ஸ் ஆயிடும். அவங்கங்க கேரக்ட்டர்ல இருந்தாதான் ஷோ நல்லாயிருக்கும். இதுல இருந்து நீங்க பாடம் கத்துக்கணும் விரும்பறேன். எந்த மீமுக்கும் நான் பயப்பட மாட்டேன்.

விஜய் வர்மா

நான் நம்பாத விஷயத்திற்கே நிறைய தேடியிருக்கேன். அதுக்கு அப்புறம்தான் மத்தவங்களுக்கு அதைச் சொல்லுவேன். நாம் நம்பும் விஷயம் ஆரோக்கியமா இருக்கணும். விஷமாக மாறிடக்கூடாது. நான் என் வேலையை செய்யறேன். நீங்க உங்க வேலையைச் செய்யுங்க” என்றெல்லாம் பொங்கி விட்டு பிரேக்கில் சென்றார் கமல். பூர்ணிமாவின் தலை குனிந்தபடியே இருந்தது.

பூர்ணிமாவும் மாயாவும் வழக்கம் போல் தனியாக ஒதுங்கி குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். பூர்ணிமா என்ன அனத்துவார் என்பதைக் கேட்காமலேயே யூகித்து விட முடியும். “நீ இந்த வீட்டில் என்ன பண்ணே?” என்று விஷ்ணுவும் அர்ச்சனாவும் ஒருவரையொருவர் கேள்விகளால் அர்ச்சனை செய்து கொண்டார்கள். ‘யப்பா. போதும் விடுங்கப்பா’ என்று விசித்ராவே தடுத்து நிறுத்த வேண்டியதாக இருந்தது. அந்த அளவிற்கு விஷ்ணுவின் அலப்பறை ஓவராக இருந்தது. விமர்சனம் குறித்து ஒரு மனுஷன் தொண்டைத் தண்ணி போக ஒரு மணி நேரம் பாடம் எடுத்துட்டு போயிருக்கான். ஆனா இவங்க என்னடான்னா.. அடுத்த நிமிஷமே அடிச்சுக்கறாங்க.

வீட்டாரைச் சுத்தியலால் உடைத்த விஜய்

பிரேக் முடிந்து திரும்பிய கமல், “ஒரு வெளியேற்றம் நேற்று நடந்தது. பூகம்ப விளைவாக இன்னொருவர் உள்ளே செல்ல வேண்டும். வாங்க விஜய்” என்று மீள்வரவை வரவேற்றார். “போன முறை விட்டுட்டேன். இந்த முறை மூக்கு கன்பர்ம்” என்கிற உறுதியான தொனியுடன் உள்ளே சென்ற விஜய், ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் சுத்தியலால் உடைத்து பிறகு சொன்ன அபிப்ராயங்கள் அத்தனையும் ‘நச்’ ரகம். விஜய் நன்றாக ஹோம் ஒர்க் செய்து விட்டு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. ‘டைட்டில் வின்னர் விக்ரம்’ என்று சர்காஸ்டிக்காக விஜய் சொன்ன போது “தெரிஞ்சிடுச்சா?” என்று காஞ்சனா பாணியில் சிரித்தார் விக்ரம். “நிக்சன்.. உனக்கு தனியா வரேன்” என்ற விஜய் “நீ பொய் சொல்லிட்ட. அதை நிறுத்திக்கோ” என்று மையமாக எச்சரிக்க நிக்சன் குழப்பமும் திகைப்புமாக பார்த்தார்.

பூர்ணிமா – மாயா

‘உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு வந்திருக்கேன். இனி என் ஆட்டம் வேற மாதிரி இருக்கும்’ என்று பொத்தாம் பொதுவாக விஜய் அலப்பறை செய்ய ‘இவனுக்கு உடனே ஒரு பாயாசத்தைப் போட்ற வேண்டியதுதான்’ என்பது மாதிரியே அனைவரும் பார்த்தார்கள்.

மாயாவைக் கூட்டிக் கொண்டு மீண்டும் தனியாக ஒதுங்கினார் பூர்ணிமா. மறுபடியும் அதேதான். “நான் என்ன பண்ணேன்..?” என்று அனத்திய பூர்ணிமா, பிறகு சொன்னதுதான் ஹைலைட். “நாம இங்க என்ன பண்றோம்ன்னே இவருக்குப் புரியல”. ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்’ பாலிசியை அஜித் கூட இவ்வளவு சின்சியராக பின்பற்ற மாட்டார் போலிருக்கிறது. தான் செய்யும் நற்செயல்களை இந்த கேடு கெட்ட உலகம் புரிந்து கொள்ளவில்லை என்கிற ஆழமான மனவிசாரத்தில் பூர்ணிமா இருக்கிறார். இருக்கட்டும்.

புத்தகப் பரிந்துரை – உண்மை கலந்த சரித்திர நாவல்

பிரேக் முடிந்து திரும்பிய கமல், ‘புத்தகப் பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூல் ‘A Bend in the Ganges’. எழுதியவர், Manohar Malgonkar. “இவரோட இன்னொரு நூலை போன சீசன்களில் சொல்லியிருக்கேன். இந்த நூல் எதைப் பற்றியதுன்னா, இந்திய பாகப் பிரிவினை, சுதந்திரப் போராட்டம், காந்தி, அஹிம்சை, தீவிரவாதம்ன்னு கலந்து கட்டி, உண்மை கலந்த சரித்திர நாவல். வாசிக்க விறுவிறுப்பாக இருக்கும். ‘ஹேராம்’ எடுக்கறதுக்கு முன்னாடி இதைப் படிச்சிருந்தா எனக்கு உபயோகமா இருந்திருக்கும்’ என்று நூல் அறிமுகத்தை நிறைவு செய்தார் கமல்.

A Bend in the Ganges

வீட்டிற்குள் நுழைந்த கமலிடம் “சல்லி சல்லியா நொறுக்கிட்டான் சார்” என்று புகைப்படங்களை உடைத்த விஜய் பற்றி மக்கள் ஜாலியாக புலம்ப “வீட்டை சுத்திக் காட்டிட்டார் போல’ என்று சிரித்தார் கமல். “ஓகே அடுத்த விஷயத்திற்கு வரலாமா?” என்று எவிக்ஷன் எண்.2 -க்கு நகர்ந்த கமல் “யாரு போவான்னு நெனக்கறீங்க?” என்கிற வழக்கமான விளையாட்டை கையில் எடுக்க பூர்ணிமாவும் மாயாவும் ஒருவரையொருவர் கை காண்பித்துக் கொண்டது சுவாரஸ்யமான தந்திரம். ‘கேங்கா இல்லையாமாம்’. அக்ஷயா என்கிற கார்டை கமல் காட்டியதும் பூர்ணிமாவின் முகத்தில் தப்பித்த ரியாக்ஷனே இல்லை. ஒவ்வொரு முறையும் தான்தான் எவிக்ட் ஆவோம் என்கிற அச்சத்திலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போல.

பூர்ணிமா

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அக்ஷயா, பூர்ணிமாவின் காதில் ரகசியம் ஓதினார். விக்ரம் தலைகுனிந்தபடி சோகத்தில் ஆழ்ந்திருந்தார். அக்ஷயா நாணயத்தை பூர்ணிமாவிற்கு அளிக்க “என்னதிது.. எனக்கா?’ என்று அதிர்ச்சியடைந்தார். காயின் எதிர்பார்த்து ஏமாந்த சுரேஷிற்கு ஏதோவொரு பொருளை அக்ஷயா பரிசாக அளிக்க “தங்கச்சி…” என்று டிஆர் பாணியில் உடனே கண்கலங்கினார் சுரேஷ். இத்தனை நாட்களாக தனக்கு ஆதரவளித்த விக்ரமிற்கு அக்ஷயா கண்கலங்க நன்றி சொன்னது நெகிழ்வை ஏற்படுத்தியது. ‘என் தங்கச்சி’ என்று விக்ரமும் பதிலுக்கு நெகிழ்ந்தார். (அப்ப அது இல்லையா?!)

விதிமீறல் குறித்து கண்டிப்பான தொனியில் எச்சரிக்கை செய்த கமல்

“வாங்க அக்ஷயா” என்று மேடைக்கு வரவேற்ற கமலிடம் “வாய் திறந்து பேசியிருக்கணும். எனக்கும் மத்தவங்களுக்கம் ஹர்ட் ஆயிடும்ன்னு சும்மா இருந்தேன்” என்று வாக்குமூலம் தந்தார் அக்ஷயா. அதென்னமோ, பிக் பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியே வந்தவுடன் அவருடைய முகத்தில் பிரகாசம் கூடி விடுகிறது. ‘அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி’.. என்று தெளிவாகப் பேசத் துவங்கி விடுகிறார்கள். அக்ஷயாவை வாழ்த்தி விடை தந்த கமல், வீட்டிற்குள் மறுபடியும் சென்று அழுத்தம் திருத்தமாக, தெளிவாக சில குறிப்புகளை சொல்லத் துவங்கினார். (ஹப்பாடா! இப்பவாவது இவர் வாயைத் திறந்தாரே!).

வெளியேறிய அக்ஷயா

“விதிமீறல் நிகழக்கூடாது. இதை மறுபடியும் மறுபடியும் வசதியா மறந்துடறீங்க. நாமினேஷன் பத்தி டிஸ்கஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னேன். கோட்வேர்ட் வெச்சு பேசறீங்க. மைக்கை கழட்டி வெச்சிட்டு பேசறீங்க. கிரிக்கெட் ஆடினா அந்த ரூல்ஸ்லதான் ஆடணும். ரெண்டு பேட்டையும் வெச்சு ஃபீல்டர்களை அடிச்சு ஆடக்கூடாது” என்று கண்டிப்பான தொனியில் சொன்ன கமல், தன்னை மிகவும் கடுப்பேற்றுகிற பூர்ணிமாவிடம் நேரடியாகவே சொன்னார். “கைத்தட்டல் பற்றிய உங்கள் புரிதல் அபத்தமானது. அதை இன்னமும் நீங்க புரிஞ்சுக்கலை. மைக்கை ஆஃப் பண்ணினா, இவங்க உங்களை ஆஃப் பண்ணி.. Send off பண்ணிடுவாங்க. நான் உங்க விளையாட்டுல பார்ட்னர் கிடையாது. நிகழ்ச்சியோட ஆங்க்கர். நான் உங்க கன்டென்ட் கிடையாது” என்று சொல்லி “அடடா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி பூர்ணிமா சிரிக்கறாங்க” என்று சர்காஸ்டிக்காக தன் எரிச்சலைக் காட்டினார். பூர்ணிமா செய்வதையெல்லாம் பார்த்தால் நமக்கும் கூட அந்த எரிச்சல் வருகிறது.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யா

“விதிமீறலுக்கான தண்டனை பத்தி பக்கம் பக்கமா எழுதியிருக்கீங்க. ரூல்ஸ் மீறினா தடுப்பு ஊசி போடணும்” என்று நிக்சனிடம் கமல் சொல்ல, திகைப்பான முகத்துடனும், கேப்டன் என்கிற உற்சாகத்துடனும் “போட்டுடலாம் சார்” என்று நிக்சன் சொல்ல “யோவ். உனக்குப் போடுவாங்கய்யா.. ஜாக்கிரதையா இரு” என்கிற மாதிரி அறிவுறுத்தி அவர்களிடமிருந்து லுலுவாய்க்கு விடைபெற்றார் கமல். பிறகு பார்வையாளர்களிடம் “இன்னொரு வரவு இருக்கிறது” என்று அனன்யாவை அழைத்தார். “நான் பொறுமையான பொண்ணு. வெளில போய் பார்த்தா வேற மாதிரி தெரிஞ்சது. இனி பொறுமையைக் கழட்டி வெச்சிட்டு பெருமையா போகப் போறேன்” என்று வீட்டிற்குள் சென்ற அனன்யா, ஒவ்வொருவருக்கும் தந்த உபதேசமும் பட்டப்பெயர்களும் தரமான சம்பவமாக இருந்தது.

அனன்யா தந்த பட்டப் பெயர்களும் உபதேசங்களும்!

விசித்ரா (நரி), சுரேஷ் (கொசு), மாயா (விஷ பாட்டில்), நிக்சன் (கிரின்ஞ்), ரவீனா (பப்பெட்), விக்ரம் (மிக்சர்), அர்ச்சனா (சொம்பு), விஷ்ணு (பர்சனல் செக்டரட்டரி), ஜோவிகா (காலி பாத்திரம்), பூர்ணிமா (தவளை), மணி (பூமர்) தினேஷ் (தேள்) என்கிற பட்டப் பெயர்களும் அதற்கான விளக்கமும் நன்று. ‘கரெக்ட்டா இருந்துச்சு’ என்று போட்டியாளர்களே ஒப்புக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மீது சொல்லப்பட்ட குறைகளை “அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு?” என்று வியப்பாக விசாரித்துக் கொண்டிருந்தார்கள். எனில் தாங்கள் செய்யும் பிழைகள் பற்றி இவர்களுக்கே நினைவில் இல்லை போல.

வினுஜா குறித்து பேசியதை விளக்கும் நிக்சன்

‘நீ பொய் சொல்லிட்ட’ என்று விஜய் சொன்னது ஐஷூவைப் பற்றி என்பதாக நிக்சன் நினைத்துக் கொண்டிருந்தார். பிறகு அது வினுஷா பற்றிய தவறான கமென்ட் என்பதை அறிந்தவுடன் “நான் பண்ணது தப்புதான். அம்மா சத்தியமா அவங்க கிட்ட உள்ளேயே மன்னிப்பு கேட்டேன். வெளியே போய் வருத்தப்பட்டாங்களா.. ஐயோ.. ஸாரி வினுஷா” என்று மன்னிப்பு கேட்டார்.

நிக்சன் மாஸ்க் கேட்டதற்கு மாயா செய்த விபரீதமான குறும்பை விஜய் மறைமுகமாக நினைவுப்படுத்த “என்னது.. நானா.. அப்படிச் செய்தேன்.. சொன்னேன்” என்றெல்லாம் செயற்கையாக ஷாக் அடைந்தார் மாயா. இது குறித்து நீதிமன்ற விவாதமெல்லாம் கூட நடந்ததே?! ‘நான் வில்லன் இல்ல… அப்படி என்ன பண்ணினேன்னு நீங்க தொடர்ந்து விளக்கம் கொடுக்கறதே ஒரு டார்ச்சரா இருக்கு’ என்று பூர்ணிமாவின் தவறை அனன்யா சுட்டிக் காட்ட ‘இனி அப்படிச் செய்யப் போவதில்லை’ என்று வாக்களித்தார் பூர்ணிமா. (ஹப்பாடா!). “இனிமே நாம தள்ளி இருக்கலாம்” என்று பூர்ணிமாவும் மாயாவும் பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மாயா தெளிவாக யோசிக்கிறார். பூர்ணிமா உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்கிறார். பூர்ணிமாவிடம் வழிந்த விஷ்ணு பற்றி அனன்யா சொல்ல ‘ஹிஹி.. அம்பூட்டு வெளிப்படையாவா தெரிஞ்சது” என்று இளித்தார் விஷ்ணு.

பூர்ணிமா – மாயா

ஆக.. ஆட்டத்தை நன்றாக வெளியில் கவனித்து விட்டு மீண்டும் உள்ளே திரும்பியவர்களுக்கும், தங்களின் பிழைகளை உணர ஆரம்பித்தவர்களுக்கும் இடையே புதிய ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. விஷ்ணு சொன்னபடி ‘மறுபடியும் மொதல்ல இருந்தா?” என்கிற மாதிரி இருந்தாலும் இந்த மாற்றம் வீட்டில் எவ்வாறாகப் பிரதிபலிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விஜய், அனன்யா இருவரும் போட்டியாளர்கள் குறித்த தெரிவித்த கமென்ட் சரியானதா உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours