நடிகரும், தே.மு.தி.கவின் கட்சித் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரின் உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றும் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
`விஜயகாந்த்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாள்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரின் உடல்நலம் குறித்தும் அவருக்கும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விஜயகாந்த்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறிய தகவல்கள் இதோ!
விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் அவரால் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாத நிலைமைதான்.ஆனால் இப்போது அது கூட இயலவில்லை. முதுகுத் தண்டு பிரச்சனை இன்னும் சீராகவில்லை. கழுத்தோடு இணையும் முதுகுத்தண்டு தேய்மானம் கண்டு விட்டதால் அவருக்கு ஞாபக சக்தியில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உதவியாளர்கள், அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அவரைச் சென்று பார்க்க கடந்த ஒரு மாதமாகவே அனுமதி இல்லையாம்.
தவிர இப்போது நிலவுகிற காலநிலை காரணமாக, அவருக்கும் சரியானபடிக்கு மூச்சு விட முடியவில்லை. அவரது உடல் எடை கணிசமாக குறைந்த பிறகு அவருக்கு மூச்சு விடுவது நல்ல நிலைமைக்கு திரும்பியிருந்தது. ஆனால் தற்போது மூச்சுத் திணறல் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசத்திற்கான வழிமுறைகள் தொடர்கின்றன. தானாக சுவாசிக்கும் அளவுக்கு அவர் நுரையீரல் சக்தி பெற்ற பிறகு தான் செயற்கை சுவாசம் அகற்றப்படுமாம்.
அரசு தரப்பிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக அவர் மனைவி பிரேமலதாவிடம் உறுதியளித்திருக்கிறார்கள். எந்த மருந்துகள் வேண்டுமானாலும் அரசுத் தொகுப்பிலிருந்து உடனே வழங்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அவரின் உடல் நிலையை வைத்து பார்க்கும் போது அவருக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருகிறது.
மியாட் மருத்துவமனையிலிருந்து அவ்வப்போது அரசுக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். விஜயகாந்த்துக்கு சில வருடங்களுக்கு முன்பு சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னை இருந்தது. தற்போது அந்தப் பிரச்னை எதுவும் இல்லை. செயற்கை சுவாசத்திலிருந்து விடுபட்டு மறுபடியும் விஜயகாந்தின் நிலைமை சீரடையும் என்று தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபடி இருக்கிறார்கள். விரைவில் உடல்நலம் தேறி வாருங்கள் கேப்டன்!
+ There are no comments
Add yours