மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் கே.பாலாஜி கதாநாயகனாக நடித்தார். ஜாவர் சிதாராமன், வி.ஆர்.ராஜகோபால், பண்டரி பாய், மைனாவதி,, எம்.சரோஜா, ஏ.கருணாநிதி, எஸ்.எம்.லட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகை மைனாவதி, நடிகை பண்டரிபாயின் தங்கை. அக்கா, தங்கை சேர்ந்து நடித்த படம் இது. தமிழில் குலதெய்வம், மாலையிட்ட மங்கை, பொம்மை கல்யாணம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார், மைனாவதி.
தீப்பெட்டி கம்பெனி மானேஜரான வசந்தனுக்கும் மீனாவுக்கும் திருமணம் நடக்கிறது. மீனாவுக்கு குழந்தை பிறந்ததும் அவள் மனநலம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ரயிலில் சிவகாசிக்கு ஊருக்குச் செல்லும்போது, மாயமாகிறாள் மீனா. அவள் ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது, வசந்தனுக்கு. இதையடுத்து மீனாவின் தங்கை சாந்தியை திருமணம் செய்துகொள்கிறார், வசந்தன். இந்நிலையில் மீனா இறக்கவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. பிறகு பல்வேறு திருப்பங்கள் கதையில் நடக்கின்றன. முடிவு என்னவாகிறது என்பது படம்.
எம்.கே.நாதன் கதை வசனம் எழுதியிருந்த இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார். அனைத்து பாடல்களும் அந்தக் காலகட்டத்தில் வரவேற்பைப் பெற்றன. இப்போது கேட்டாலும் சுகமான ரசனையைத் தருகின்றன.
சீர்காழி கோவிந்தராஜன், பி சுசீலா பாடிய ‘ஒண்ணும் தெரியாத கன்னி- ஒரு கன்னி, அவ கண்ணால வச்சாளாம் கண்ணி’, பி.சுசீலா பாடிய, ‘மல்கோவா மாம்பழமே, மாதுளையே’, ‘வாடா மல்லிகையே வாடா என் இன்பமே’, ‘பச்சைப் பசுங்கிளியே ஜொலிக்கும் பவள வண்ண சிலையே’, ஜமுனா ராணி பாடிய ‘கண்ணாடி கன்னம் காண்பவர் உள்ளம்’, ஏ.ஜி. ரத்னமாலா பாடிய ‘சிட்டான் சிட்டாங் குருவி சிரிச்சுதான்’, ‘பாலும் பழமிருக்க பக்கத்தில நானிருக்க’, ‘ஏ குட்டி நாவம்மா எம் மேல கோவமா’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
இதில் இடம்பெறும் ‘மல்கோவா மாம்பழமே’ பாடலில் பண்டரிபாயும் மைனாவதியும் பாடி ஆடுவார்கள். அக்கா, தங்கை ஒன்றாக ஆடிப் பாடிய பாடல் இது . இதே போல, ‘ஏ குட்டி நாவம்மா எம் மேல கோவமா’ மேடை நாடகப் பாடலாகப் படத்தில் இடம்பெறும்.
இதில், விஜயலட்சுமியும் மைனாவதி ஆண் வேடமிட்டும் நடித்திருப்பார்கள். ஆண் வேடமிட்ட மைனாவதிக்கு, டி.எம்.எஸ். குரல் கொடுத்திருப்பார். 1959-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்.