Bigg Boss 7 Day 58: `இந்துஜா என்னைக் கண்டுக்கல'- வருத்தப்பட்ட பூர்ணிமா; பஞ்சாயத்தைத் தொடங்கிய விஷ்ணு

Estimated read time 1 min read

ஏற்கெனவே பல்வேறு தடுமாற்றங்களில் இருக்கும் பூர்ணிமாவிற்கு மேலும் பல சிக்கல்கள் வந்து சேர ஆரம்பித்திருக்கின்றன.

ஷாப்பிங் சமயத்தில் அரிசியை எடுக்க மறந்தது, சிறப்பு விருந்தினரான இந்துஜா, பூர்ணிமாவிடம் சரியாக பேசாமல் இருந்தது, அனுமதி பெறாமல் சமையலை ஆரம்பித்தது போன்ற பிரச்சினைகளால் இந்த எபிசோடே பூர்ணிமாவை மையம் கொண்டிருந்தது எனலாம். இதற்குப் பின்னால் பிக் பாஸ் டீமின் உள்குத்துகளும் ஒருவேளை இருக்கலாமோ?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

சிறப்பு விருந்தினரான ஹரிஷ் கல்யாண், தன்னுடைய தேர்வுப்படி இரண்டு ஹவுஸ்மேட்ஸ்களை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்லலாம் என்று பிக் பாஸ் அறிவிக்க அர்ச்சனாவையும் பூர்ணிமாவையும் அவர் தேர்ந்தெடுத்தார். மளிகைப் பொருள் எக்ஸ்பர்ட் ஆன ஜோவிகாவை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். விளைவு, இதர பொருட்களைத் தட்டுத் தடுமாறி எடுத்துவிட்டாலும் தென்னிந்தியர்களின் ஜீவ நாடியான அரிசியை எடுக்க மறந்துவிட்டார்கள்.

‘என்னது… அரிசி எடுக்கலையா?’ என்று மூலைக்கு மூலை அதிர்ச்சியான குரல்கள் எதிரொலி மாதிரி கேட்டன. ஷாப்பிங் தடுமாற்றத்திற்கு இடையேயும் “கூல் அண்ணா முருங்கைக்காய் கேட்டாரு” என்று சொன்ன அர்ச்சனா மெயின் ஐட்டமான அரிசியை விட்டுவிட்டார்.

ஷாப்பிங் டாஸ்க்

‘ஹரிஷ்… இப்போது நீங்கள் மெயின் டோர் வழியாக வெளியே வரலாம்’ என்று பிக் பாஸ் அறிவிக்க “பாஸ்.. நான் ‘வாங்க பழகலாம்’ மோடில் செட் ஆகிவிட்டேன். ஒருநாள் இங்கு தங்கிக் கொள்ளட்டுமா?” என்கிற வேண்டுகோளை பாவனையாக வைத்தார் ஹரிஷ். இதெல்லாம் ஒரு செட்டப். ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றாலும் ஒரு டிராமாவாக இப்படிச் செய்வதுதான் ரியாலிட்டி ஷோ சம்பிரதாயம், “ஓகே பர்மிஷன் கிராண்டட்” என்றார் பிக் பாஸ். “பாஸ்.. மக்கள் அரிசி இல்லாம கஷ்டப்படுறாங்க. கொஞ்சம் எனக்காக அதை அனுப்ப முடியுமா?” என்று கேட்டுப் பார்த்தார் ஹரிஷ். என்னதான் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் பிக் பாஸ் அதிகமாக இறங்கி வரமாட்டார். எனவே கள்ள மவுனத்துடன் இருந்தார்.

அர்ச்சனாவிடம் தொடர்ந்து வம்பிழுத்த விஷ்ணு

அர்ச்சனாவுடன் சண்டை போட்டு இந்த வார கன்டன்ட்டை தேற்றிக் கொள்ளலாம் என்று விஷ்ணு முடிவு செய்துவிட்டார்போல. எனவே விருந்தினர் வந்திருக்கிறாரே என்றெல்லாம் கூட பார்க்காமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அர்ச்சனாவை வம்புக்கு இழுத்துக் கொண்டு இருந்தார். “தக்காளி கூட வெட்டத் தெரியாது என்று என்னைப் பற்றிச் சொன்னார்கள். இப்பொழுது சமையல் இன்சார்ஜ் நான்தான்” என்று ஹரிஷ் முன்னால் அர்ச்சனா பீற்றிக் கொள்ள “இவ்வளவு நாள் ஓபிதானே அடிச்சே!” என்று அந்தப் பெருமையை உடனே உடைத்தார் விஷ்ணு. இருவருக்கும் முட்டிக்கொண்டது. “ஏன் சாப்பாட்டுக்காக இப்படி சண்டை போட்டுக்கறீங்க?” என்று ஹரிஷ் அலுத்துக் கொண்டார். முன்பு நிக்சன் கேட்ட அதே கேள்விதான் இது. அப்போது அவரிடம் கோபத்துடன் மற்றவர்கள் எகிறினார்கள். ஆனால் விருந்தினரை அப்படி கோபித்துக் கொள்ள முடியுமா?

ஹவுஸ்மேட்ஸ்

மளிகைப் பொருட்கள் வந்தன. ஒருவேளை ஹரிஷ் வைத்த சிறப்பு வேண்டுகோள்படி அரிசி வந்திருக்குமோ என்று பார்த்தால் இல்லை. பிக் பாஸ்ஸா கொக்கா!.. மறுபடியும் விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையே ஒரு சண்டை நிகழ்ந்தது. ஓவராக வார்த்தைகளை விட்டார் விஷ்ணு.

“அர்ச்சனாவை விஷ்ணு நோண்டிட்டே இருக்கற மாதிரி தெரியுது” என்று தினேஷிடம் சொன்னார் ரவீனா. “வீக்கா இருக்கிறவங்களைத்தான் அவன் டார்கெட் பண்ணுவான். நல்லா செஞ்சி விட்டா கிட்டயே வரமாட்டான்” என்று தன் அனுபவத்தை முன்னிட்டு தினேஷ் சொல்வது உண்மை. அக்ஷயா இருந்த வரை அவரிடமே அதிகமாக வம்பு இழுத்தவர் விஷ்ணு. “இல்லடா பூரணி.. இதுவரைக்கும் விசித்ராவோட நிழல்ல வாழ்ந்த பொண்ணு, இப்போ என்னடான்னா.. இந்த வீடு என்னாலதான் வாழுதுன்கிற மாதிரியே சீன் போடுது” என்று பூர்ணிமாவிடம் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் விஷ்ணு. எனில் பூர்ணிமாவை இம்ப்ரஸ் செய்வதற்காகவும் அர்ச்சனாவிடம் சண்டை இழுக்கிறாரோ என்னமோ.

வீட்டுப் பணி டாஸ்க்கில் சின்ன வீடு வெற்றி

சிறப்பு விருந்தினரை மக்கள் இன்டர்வியூ செய்யலாம் என்று அறிவித்தார் பிக் பாஸ். “உங்க முதல் படம்.. முதல் ஷாட்.. எப்படி ஃபீல் ஆச்சு?” என்று பத்திரிகையாளர்கள் கேட்கும் கிளிஷேவான கேள்வியைக் கேட்டு நேர்காணலை ஆரம்பித்தார் அர்ச்சனா. “ஆஸ்திரேலியாவில் நடந்த ஷூட்டிங் அது. அந்தப் படம் வந்ததும் தெரியாது.. போனதும் தெரியாது.. நடிப்புன்னா அப்போது எனக்கும் ஒன்றும் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாதான் அப்புறம் கத்துக்கிட்டேன் என்ற ஹரிஷிடம், “ஒருவர் பின்பற்ற வேண்டிய நல்ல குவாலிட்டி என்ன?” என்று அடுத்ததாக தினேஷ் கேட்டதற்கு “Live simply, walk humbly, love genuinely” என்கிற பிரபல மேற்கோளை ஹரிஷ் சொன்னது க்யூட்.

ரவீணா, பூர்ணிமா

ஏற்கெனவே பல குழப்பங்களில் இருக்கும் பூர்ணிமாவிற்கு ஷாப்பிங்கில் அரிசியை மறந்துவிட்டு வந்தது கூடுதல் குற்றஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டுப் பணிகளில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒரே டாஸ்க் வைக்கப்பட்டது. ஏழு கல் மாதிரியான போட்டி. இரண்டு வீட்டிற்கும் இடையில் நடந்த மோதலில் விஷ்ணுவின் ஓவரான உற்சாகம் காரணமாக ஸ்மால் பிக் பாஸ் வீடு அபாரமாக வெற்றி பெற்றது. ‘பூர்ணி.. பூர்ணி..’ என்று உரிமையுடன் கத்தி விளையாடிய விஷ்ணு, வெற்றி பெற்றதும் பூர்ணியை கட்டியணைத்து வெற்றியைக் கொண்டாடினார்.

அரிசி இல்லாத விஷயம் மக்களுக்கு வெறுமையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே பாய்ஸ் படத்தில் வரும் ‘ப்ளீஸ் சார்..’ பாடலை கேமரா முன்பு கோரஸாகப் பாடி பிக் பாஸிடம் அரிசி யாசகம் செய்தார்கள். இதற்கான நடன வடிவமைப்பை மணி செய்து இருப்பாரோ, என்னமோ. அது அருமையாக இருந்தது. ஒவ்வொருவரும் ஒத்திசைவுடன் நடனம் ஆடியது பார்க்கவே க்யூட்டாக இருந்தது. இந்த ஃபுட்டேஜை வைத்து ஒரு நல்ல வீடியோ ஆல்பம் செய்யலாம் என்கிற அளவிற்கு நடனம் நேர்த்தியாக இருந்தது.

‘பார்க்கிங்’ – புதிய திரைப்பட பிரமோஷன் – உள்ளே வந்த இந்துஜா

பாட்டுச் சத்தம் கேட்டது. இந்துஜா உள்ளே வந்தார். திரைப்படத்தின் புரமோஷனுக்காக வந்திருக்கிறார். ஹரிஷ் வந்திருப்பதின் நோக்கமும் அதுவே. எல்லோரையும் சம்பிரதாயமான புன்னகையுடன் பார்த்தார் இந்துஜா. ஆனால் பூர்ணிமாவின் முகத்தில் மட்டும் ஒரு விநோதமான சலனம் இருந்தது. அதற்கான காரணம் பிறகுதான் தெரிந்தது. இந்துஜா, பூர்ணிமாவின் நெருக்கமான தோழியாம். எனவே தன்னைப் பார்த்ததும் ஸ்பெஷலான நெருக்கத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார் பூர்ணிமா.

‘எனக்கு எதிராக உலகமே சதி செய்கிறது’ என்கிற கற்பனையில் இருக்கும் பூர்ணிமாவிற்கு இது கூடுதலான கடுப்பை ஏற்படுத்தியது. ‘என்னைத் தெரியலையா?’ என்று பூர்ணிமா கேட்க, நெருங்கி வந்து அணைத்துக் கொண்டார் இந்துஜா. “அவங்க உன் பிரெண்டா.. ஏன் பேச மாட்டேன்றாங்க?” என்று சுரேஷ் உள்ளிட்ட மற்றவர்கள் விசாரித்து பூர்ணிமாவை கூடுதலாகக் காண்டாக்கினார்கள். ‘ஐஜியை எனக்குத் தெரியும். ஆனா அவருக்கு என்னைத் தெரியாது’ என்கிற விவேக் காமெடி மொமன்ட்

பிக் பாஸிடம் பாட்டு பாடி ஸாரி கேட்ட ஹவுஸ்மேட்ஸ்

வந்த வேலையை ஆரம்பித்தார் ஹரிஷ். “நாங்க நடிச்ச ‘பார்க்கிங்’ன்ற படம் ரிலீஸ் ஆகுது. இது எல்லோருக்குமே கனெக்ட் ஆகக்கூடிய படமா இருக்கும். இரண்டு மனிதர்களுக்கு இடையே நிகழ்கிற ஈகோ மோதல்தான் மெயின் விஷயம். ஒருத்தருக்கு ஈகோ இருக்கலாம். ஆனா அது சுயமரியாதையைக் காப்பாத்திக்கற அளவுக்குத்தான் இருக்கணும். அதிகமாகப் போச்சுன்னா பிரச்னைதான். பார்க்கிங் பிரச்னையை மையமா வெச்சு எந்தப் படமும் இதுவரைக்கும் வந்ததில்ல” என்று புரமோஷனை ஹரிஷூம் இந்துஜாவும் முடித்தார்கள்.

ஆம், வருங்காலத்தில் உலகப் போர் நிகழ்வதற்கு காரணங்களுள் ஒன்றாக ‘பார்க்கிங்’ பிரச்சினை அமையலாம். அந்த அளவிற்கான இட நெருக்கடியையும் சர்ச்சைகளையும் அது நகர வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அபார்ட்மென்ட்டிலும் இது குறித்தான தகராறு இல்லாமல் இருக்கவே இருக்காது. படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அது நன்றாகவே இருந்தது. படம் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பூர்ணிமாவைக் கண்டுகொள்ளாத இந்துஜா

சிறப்பு விருந்தினர் கோல்ட் ஸ்டார் தர வேண்டிய நேரம். “விருந்தோம்பலில் இரண்டு வீடும் சமமா இருந்தது. வீட்டின் சுத்தம்தான் ஒரு மார்க்கமா இருந்தது. இரண்டு வீடுமே சமமான பாயின்ட் எடுத்தாலும் டாஸ்க்கில் ஜெயித்ததால் சின்ன வீட்டிற்கு இதை அளிக்கிறேன்” என்று மையமாக தீர்ப்பு தந்து அளித்தார் ஹரிஷ். “ஏன் என் கிட்ட சரியா பேசமாட்டேன்றன்னு இந்துஜாகிட்ட கிட்டேன். யாரையும் ஸ்பெஷலா மென்சன் பண்ணி பேசக்கூடாதுன்னு சொல்லி அனுப்பினாங்களாம்” என்று விஜய்யிடம் புலம்பிக்கொண்டிருந்தார் பூர்ணிமா. ‘கரெக்ட்டுதானே அது?’ என்றார் விஜய்.

இதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற சமயங்களில் வரும் விருந்தினர்கள், தங்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்களிடம் கூடுதல் நெருக்கத்தைக் காட்டுவதை எத்தனையோ சமயங்களில் முன்பு பார்த்திருக்கிறோம். எனில் பிக் பாஸ் டீம், கோக்குமாக்காக எதையாவது செய்கிறார்களா? பூர்ணிமாவின் அனத்ததில் சற்று உண்மை இருக்குமோ?!

இந்துஜா – பூர்ணிமா சந்திப்பு

“எனக்கு இந்த மாதிரி ஆயிரம் கதைகள் தெரியும். பெரிய ஆளாயிட்டா அப்படித்தான் ரொம்ப அலட்டுவாங்க. 2000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் அமாவாசை மாதிரி இருப்பாங்க. நீயும் அப்படித்தான் ஆயிடுவே” – ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று பூர்ணிமாவின் எரிச்சலில் மிளகாய்த் தூளை கொட்டிய சுரேஷிடம் “சாப்பாட்டுல உப்பு இருக்கா.. பாருங்க” என்று கேட்டு மறைமுக எரிச்சலைக் காட்டினார் பூர்ணிமா. “நான் இப்படில்லாம் இருக்க மாட்டேன். நானும் படத்துல லீட் கேரக்ட்டர்ல நடிச்சவதான்” என்றார் பூர்ணிமா. (எதே?!)

‘இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?’ என்று இணையத்தில் தேடிப் பார்த்தால் அது உண்மைதான். ‘அன்னப்பூரணி’ என்கிற திரைப்படத்தில் பூர்ணிமா நடித்திருக்கிறார். தலைப்பிலேயே அவருடைய பெயர் இருப்பதால் அவர்தான் ஹீரோயினோ என்று பார்த்தால் இல்லை. நயன்தாராதான் ஹீரோயின். ஷெப் ஆக விரும்புகிற ஒரு பெண்ணின் கதை. இதில் நாயகியின் தோழியாக ஓரத்தில் நிற்கிறார் பூர்ணிமா. (அப்ப.. டக்ளஸ் கடையோட ஓனர் இல்லையா?!) அந்தப் படத்தின் புரமோஷன் ஒருவேளை வீட்டிற்குள் நடந்திருந்தால் பூர்ணிமாவிடம் சிரிப்பு மலர்ந்திருக்கும்.

‘நான் ஒரு மாஸான வில்லன்’ – விஷ்ணுவின் வாக்குமூலம்

‘கூல் சுரேஷ் ரொம்ப கிளவரா இந்த ஆட்டத்தை ஆடறாரு. வீட்டுக்குப் போறேன்னு அடிக்கடி அனத்தறாரு. ஆனா நாமினேட் பண்ணா டென்ஷன் ஆயிடறாரு’ என்று கூல் தந்திரம் பற்றி தினேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மணி. இந்துஜாவின் வருகை பூர்ணிமாவை நிறைய டிஸ்டர்ப் செய்திருக்கிறது. “நானும் அடுத்து ஒரு படம் பண்ணணும். இங்க கெஸ்ட்டா வரணும்” என்கிற ஆசையை வெளிப்படுத்த “ஆமாம்.. எனக்கும்…” என்று பக்க வாத்தியம் வாசித்தார் விஷ்ணு.

“ஒரு மாஸான வில்லன்தான் படத்தைத் தூக்கி நிறுத்துவான். நான் இங்க வில்லனா கூட இருந்துட்டுப் போறேன் ஆனா கடைசி வரை இருப்பேன்” என்று சினிமாவின் முக்கியமான திரைக்கதை அமைப்பைப் பற்றி விஷ்ணு சொல்ல, “எனக்கு டைட்டில் அடிக்கணும்னுலாம் ஆசை இல்ல. நான் நானாத்தான் இருக்கேன். இருக்கறவரைக்கும் அப்படித்தான் இருப்பேன். தனியாத்தான் ஆடறேன. ஆனா அது வெளிய தெரியலைன்னா.. என்ன பண்றது?” என்று புலம்பினார் பூர்ணிமா. ‘டைட்டில் அடிக்க ஆசையில்லை’ என்று சொல்கிறவர்களைப் பார்த்தால், பின்பு எதற்காக இந்த ஆட்டத்திற்குள் வருகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. கோப்பையை வெல்வதுதானே மெயின் அஜெண்டா?

அர்ச்சனாவிடம் சண்டைபோட்ட விஷ்ணு

அடுத்து ஆரம்பித்தது ஒரு விநோதமான பிரச்சினை. சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார் விஷ்ணு. அந்த சூன்யம் பூர்ணிமாவின் மீதும் பாய்ந்ததுதான் இதிலுள்ள காமெடி. “காய்கறில்லாம் வெட்டச் சொல்லுங்கம்மா. சமையலுக்கு ரொம்ப டைம் ஆகுது” என்று விசித்ரா சொல்ல, விஷ்ணுவும் சுரேஷூம் தக்காளி வெட்ட ஆரம்பித்தார்கள். அங்கு வந்த நிக்சன் உதவுவதாக சொல்ல அவர்கள் மறுத்து விட்டு வேலையைத் தொடர்ந்தார்கள்.

காய்கறி வெட்டப்பட்டு, அடுப்பு பூர்ணிமாவால் ஆன் செய்யப்பட்டு சமையல் வேலையும் ஆரம்பித்து விட்டது. ஆனால் மெனு போர்டில் இன்னமும் எதுவும் எழுதப்படவில்லை. மணியும் அடிக்கப்படவில்லை. இவை செய்யப்பட்டு, பெரிய வீட்டில் ஒருவர் அனுமதி தந்த பிறகுதான் அடுப்பை ஆன் செய்து சமையலை ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி. (மெனு போர்டில் mani is a rockstar என்று எழுதியிருந்தது. ரவீனாவின் வேலையாக இருக்க வேண்டும்!).

ரத்தம் Vs தக்காளி சட்னி பிரச்சினை

தெரியாமல் சமையலை ஆரம்பித்து விட்ட பூர்ணிமா அப்படியே கமுக்கமாக இருந்திருக்கலாம். அதை விஷ்ணுவிடம் ரகசியமாக சொல்ல “இதை வெச்சு நிக்சனை அடிக்கலாமா?” என்று அவர் உற்சாகமாகி மாயாவிடம் கலந்தோலோசிக்க, மாயாவிடமிருந்து க்ரீன் சிக்னல் வந்தது. ‘கேப்டனுக்கு எதிராக மணி அடித்து பஞ்சாயத்தைக் கூட்டலாமா?” என்று விஷ்ணு சின்ன வீட்டு ஆட்களிடம் கலந்துரையாடினார். இது நிற்கக்கூடிய கேஸ் அல்ல என்பதும் அது தனக்கு எதிராகத்தான் வந்து முடியும் என்பதும் பூர்ணிமாவிற்குத் தெரியும். எனவே ‘இது ஒரு சப்ப மேட்டர். கேஸ் நிக்காது’ என்று சொல்ல மணியடிக்கும் யோசனையை உடனே கைவிட்டார் விஷ்ணு.

பூர்ணிமா -மாயா

ஆனால், இந்தச் சமயத்தில் மாயாவும் விசித்ராவும் ஆடிய கேம் தரமான சம்பவம். “ஒரு அநீதின்னா நீங்களே போய் கேக்கலாமே விஷ்ணு. எதுக்கு மத்தவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணீங்க?” என்றார் மாயா. “பூர்ணிமா ஓகே சொல்லாம விஷ்ணு மணியடிக்க மாட்டான்” என்று சரியாகப் பற்ற வைத்தார் விசித்ரா. இந்த விஷயம் நுட்பமாக வேலை செய்தது. விஷ்ணுவின் ஈகோ விழித்துக் கொண்டது. எனவே பஞ்சாயத்தைக் கூட்ட முடிவு செய்தார்.

நிக்சனைக் காப்பாற்ற வேண்டுமென்பது பூர்ணிமாவின் நோக்கம். ஆனால் நிக்சனை மாட்டி விட வேண்டுமென்பது மாயாவின் அஜெண்டா. இப்படி இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக செயல்படுவதால் தனித்தனியாக ஆட்டம் ஆட முடிவு செய்து விட்டார்களோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. ‘சும்மா லுலுவாய்க்கு’ அடித்துக் கொள்வதைப் போல ஒரு பாவனையை வெளியில் காட்டுகிறார்கள். இருவருமே ஒன்றாக இருப்பதால் ஏற்பட்ட அவப்பெயரை மாற்றுவதற்காக நடக்கும் நாடகம் இது.

பஞ்சாயத்து கூடியது. “நான் காய்கறி வெட்டச் சொல்லவேயில்ல” என்று அழுத்தமாகச் சொல்லி சொதப்பினார் நிக்சன். பக்கத்திலேயே இருந்து காய்கறி வெட்டுவதைப் பார்த்தவர் அவர்தானே? என்றாலும் பிறகு திறமையாக சுதாரித்துக் கொண்டார். “காய்கறி வெட்டுவது ஒரு முன்தயாரிப்புதான். அதுவே சமையல் அல்ல. நாங்கள் மணியடிக்காமல், மெனு எழுதாமல், அனுமதி தராமல் அடுப்பைப் பற்ற வைத்தது உங்கள் தவறு. இந்த முறை மன்னிக்கிறேன். அடுத்த முறை செய்யாதீர்கள்” என்று பந்தை திறமையாக எதிர் பக்கம் தள்ளி விட்டார். அனுமதி பெறாமல் அடுப்பைப் பற்ற வைத்த பூர்ணிமாவின் பக்கம் வழக்கு திரும்பியது. எல்லாம் விஷ்ணுவின் கைங்கர்யம்.

பூர்ணிமா

‘கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழியா என்கிற ஆதி தத்துவ குழப்பம் போல “காய்கறி வெட்டுவது சமையலில் சேருமா, சேராதா’ என்று தீவிரமான விவாதம் நடந்தது. மாயா தன் தோல்வியை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. ‘நிக்சனைக் காப்பாற்ற பூர்ணிமா முயல்கிறார். காய்கறி வெட்டுவதும் சமையலின் ஒரு அங்கம்தான்’ என்பது அவரது வாதம். வாக்கெடுப்பில் நிக்சன் பிழைத்துக் கொண்டார்.

“போ.. போ.. பஞ்சாயத்து முடிஞ்சது. கௌம்பு.. கௌம்பு.. ஆனாலும் சூனா பானா.. ஒவ்வொரு முறையும் எப்படியோ தப்பிச்சிடறடா” என்கிற திருப்தியோடு நிக்சன் கிளம்பினார். தோல்வியை ஒப்புக்கொள்ளாத எரிச்சலோடு மாயாவும் கிளம்பினார். தக்காளி வெட்டுவதில் ஆரம்பித்த இந்தப் பஞ்சாயத்து, ரத்தம் Vs தக்காளி சட்னி என்கிற தீர்ப்போடு முடிந்தது. சுபம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours