இந்த இடத்தில் இடைச்செருலாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கமலும் ரஜினியும் ஆரம்ப காலக்கட்டத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டணிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் கமல் முடிவெடுத்து அதை ரஜினியிடம் சொன்னார். “நீங்களும் நானும் ஒண்ணா நடிக்கறதால தயாரிப்பாளர்கள் குறைச்சு சம்பளம் தராங்க. அதுவும் இல்லாம தனித்தனியா போனாத்தான் நாம பெருசா வளர முடியும்” என்று கமல் யூகித்தது பின்னர் உண்மையானது. இத்தனை வருடங்கள் கழித்தும் அவர்கள் தங்களின் துறையில் சாதனைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். இதுபற்றி ‘நானும் நீயுமா’ என்கிற விகடன் இணையத் தொடரில் விரிவாக எழுதப்பட்டிருப்பதை நண்பர்கள் வாசிக்கலாம்.
பூர்ணிமா, மாயா இருவருமே அடிப்படையில் புத்திசாலிகள். ஆனால் ஒன்றாகச் சுற்றுவதின் மூலமே அவர்களுக்கு அவப்பெயரும் பின்னடைவும் ஏற்படுகிறது. எனவே ஒருவரையொருவர் கறாராகத் துண்டித்துக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் அவர்களுக்கு நல்லது. காவிய நட்பை விடாமல் தொடர்வதற்கு இதுவொன்றும் ‘கர்ணன்’ நாடகம் இல்லை. பிக் பாஸ் வீடு.
இந்த நாமினேஷன் பிராசஸை வித்தியாசமாக நடத்தினார் பிக் பாஸ். ஒருவர் நாமினேஷனில் எத்தனை வாக்குகள் பெற்றிருக்கிறாரோ, அத்தனை டைல்ஸ்களை பெற்று ஒரு பையில் போட்டு முதுகில் சுமக்க வேண்டும். நிக்சன் கேப்டன் என்பதால் அவர் இதில் வரமாட்டார். ஆனால் தினேஷிற்கு ஒரு தற்செயலான அதிர்ஷ்டம் கிடைத்தது. அவர் ஏற்கெனவே நாமினேட் ஆகியிருப்பதால் டைல்ஸ்களை முதுகில் அவமானச் சின்னமாக சுமக்க வேண்டியதில்லை. ‘இதெல்லாம் ரொம்ப பார்ஷியாலிட்டி பிக் பாஸ். அவர் அதிக வாக்குகளை அப்போது வாங்கினார்’ என்று புலம்பினார் விசித்ரா.
ஆக இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், ஜோவிகா, அனன்யா, விசித்ரா, மணி, விக்ரம், சுரேஷ், தினேஷ் மற்றும் பூர்ணிமா.
+ There are no comments
Add yours