ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா). சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் தீவிர ஆசை கொண்ட அவருக்கு, இந்தியாவின் தலைச் சிறந்த செஃப்பான ஆனந்த் (சத்யராஜ்) போல் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் பிறந்து வளர்ந்த சூழல் அதற்குத் தடையாக இருக்கிறது. ஆனால், நண்பன் ஃபர்ஹானின் (ஜெய்) ஊக்கத்தில் சென்னைக்குச் செல்கிறார். அங்கு சத்யராஜ் தலைமை தாங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். நயன்தாராவின் முன்னேற்றத்துக்கு சத்யராஜின் மகன் அஸ்வின் (கார்த்திக் குமார்) தடைகல்லாக இருக்கிறார். அதை அன்னபூரணி எப்படி தகர்த்தெறிகிறார் என்பதுதான் மீதிக்கதை.
தமிழ் திரைப்படங்களில் அதிகம் பேசப்படாத கேட்டரிங் துறையைக் கதைக்களமாகக் கொண்டு படத்தை உருவாக்கியதற்கு அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவைப் பாராட்டலாம். பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் சூழலில், செஃப் பணி, பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு எப்படி அன்னியமாக இருக்கிறது என்பதை அழகாகவே காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். சில இடங்களில் முற்போக்கான வசனங்களையும் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி கைத்தட்டலையும் பெறுகிறார். படத்தின் ஊடாக நயன்தாரா கனவை அடைய ஏற்படும் தடைகளையும் அதை உடைக்கும் காட்சியையும் அனிமேஷன் காட்சிகளாகக் காட்டியிருப்பதும் அழகாக இருக்கிறது. இடையிடையே ஒலிக்கும் ‘பூரணி’. என்ற பாடல் வரிகளும் கதையோட்டத்துக்கு உதவுகிறது. ஒரு விபத்தால் ஏற்படும் திருப்பமும் ரசிக்க வைக்கிறது.
இப்படி நேர்மறையான சில அம்சங்கள் இருந்தாலும், மெதுவான திரைக்கதை படத்துக்கு ஸ்பீடு பிரேக்காக அமைகிறது. கடவுளுக்கு சேவை செய்வதையே பாக்கியமாகக் கருதும் குடும்பத்தில் பிறந்த நயன்தாரா, யாருக்கும் தெரியாமல் கேட்டரிங் படிப்பது, அசைவம் சமைப்பது, பாட்டியே வீட்டுக்குத் தெரியாமல் நயன்தாராவை சென்னைக்கு அனுப்பி வைப்பது, கேட்டரிங் படிப்பை பாதியில் விட்டாலும் நட்சத்திர ஓட்டலில் வேலை கிடைப்பது, இந்திய உணவைச் சாப்பிட்டதும் பிரான்ஸ் அதிபர் உருகிப் போவது போன்ற காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருக்கலாம். ஒவ்வொரு முறையும் நயன்தாரா உடைந்து விழும்போது ஒரு கதாபாத்திரம் வந்து ஊக்கப்படுத்தியவுடன், உடனே தடைகளைத் தாண்டி வருவது போன்ற காட்சிகள் அயற்சியை ஏற்படுத்திவிடுகின்றன. தன் மகன் கார்த்திக் குமாரைவிட நயன்தாரா செஃப் போட்டியில் வெல்ல வேண்டும் என்று சத்யராஜ் நினைப்பதற்கு இன்னும் வலுவான காட்சிகளை வைத்திருக்க வேண்டும்.
நயன்தாராவின் 75-வது படமான இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அன்னபூரணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக அவர் பொருந்துகிறார். தன் அழகான நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். அவர், கல்லூரி மாணவியாக வரும் இடங்களில் ஒப்பனையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நயன்தாரா கூடவே வரும் ஜெய்க்கு நடிப்பதற்கு இன்னும் வாய்ப்புகளை வழங்கியிருக்கலாம். தலைமை செஃப்பாக வரும் சத்யராஜ் வழக்கமான பாணியில் நடித்து கவர்கிறார். கார்த்திக்குமார், கே.எஸ். ரவிகுமார், சச்சு, ரேணுகா, அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் தங்கள் பணியைச் சரியாக செய்துள்ளனர்.
தமனின் இசையில் பாடல்களும் பின்னனி இசையும் பக்கப்பலம். சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவில் குறையில்லை. படம் முடிவதுபோல வந்து செல்லும் இடங்களில் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி கத்தரி போட்டிருக்கலாம். படத்தில் சில குறைகள் இருந்தாலும் முழுமையான குடும்பப் படம் என்ற வகையில் பார்க்கலாம்.
+ There are no comments
Add yours