தோல்வி படத்துக்கு படக்குழுவிற்கு பார்ட்டி கொடுத்த ஆமிர்கான்
03 டிச, 2023 – 13:43 IST
பாலிவுட் முன்னணி நடிகரான ஆமிர்கான் நடிப்பில் கடந்த வருடம் லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் வெளியானது. கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் நாகசைதன்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆமிர்கானே தயாரித்திருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் காஸ்டிங் இயக்குனராக பணியாற்றிய முகேஷ் சப்ரா என்பவர் இந்த படம் தோல்வி அடைந்த பின்னரும் அடுத்த சில நாட்களில் ஆமிர்கான் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பார்ட்டி வைத்தார் என்கிற புதிய தகவலை தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘இந்த படத்தை ஆமிர்கான் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. இருந்தாலும் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து ஒரு பார்ட்டி கொடுக்க விரும்பினார் ஆமிர்கான். அனைவரும் ஆச்சரியத்துடன் அதில் கலந்து கொண்டோம். அதில் அவர் பேசும்போது உங்கள் பணி மகத்தானது என்று பாராட்டினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அனைவரிடமும் வருத்தமும் தெரிவித்தார். இந்த பார்ட்டி விபரம் வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours