இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஜான் கொக்கன், ஜார்ஜ் மரியன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ் `தி வில்லேஜ்’.
‘அவள்’, ‘நெற்றிக்கண்’ ஆகியத் திரைப்படங்களை தொடர்ந்து இந்த வெப் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியிருக்கிறார். நடிகர் ஆர்யா முதன்முறையாக வெப் சீரிஸில் களம் கண்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கட்டியல் கிராமத்தில் பல திகில் பேச்சுகள் நிலவி வருகின்றன. சுற்றுலாவுக்காகத் தனது குடும்பத்துடன் நாகப்பட்டினத்திலிருந்து கெளதம் (ஆர்யா) கிளம்புகிறார். கட்டியல் குறித்தான பின்னணி அறியாமல் அந்த ஊரின் வழியே செல்கையில் கார் பழுதாகிவிடுகிறது. உதவி கேட்பதற்காக அருகிலிருக்கும் ஊருக்கு கெளதம் செல்லும் இடைவெளியில் கட்டியல் கிராமத்திற்குள் அவரது மனைவியும், மகளும் சிக்கிக் கொள்கிறார்கள். தனது மனைவியையும் குழந்தையையும் கெளதம் கண்டுபிடித்தாரா, கட்டியல் கிராமத்திலிருந்து அவர்கள் தப்பினார்களா என்பது ஒருபுறம் நடக்கும் கதை.
மற்றொரு புறம், தன் மகனின் உடல்நிலையைச் சரி செய்யவும், அது குறித்து ஆராயவும் கட்டியலில் ஆய்வகம் ஒன்றை எழுப்புகிறார் ஜி.எஸ்.ஆர் (ஜெயப்பிரகாஷ்). ஆனால், அதனால் உண்டான ஆபத்துகளைத் தன் மகனிடமே எடுத்துக் கூறி, இனி அந்தக் கிராமத்துக்கு எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். ஆனால், அதையும் மீறி தன்னைக் குணமாக்கிக் கொள்வதற்காக அங்கு சென்றாக வேண்டும் என்கிற முனைப்பில் மெர்சினரிக்களை (அடியாட்கள்) கட்டியல் கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் ஜி.எஸ்.ஆரின் மகன் பிரகாஷ். அங்கு அவர்கள் வேண்டியவற்றைச் செய்தார்களா, அங்குள்ள திகில் சூழல்களிலிருந்து தப்பினார்களா என்பது மற்றொரு தடத்தின் கதை.
கெளதமாக வில்லேஜுக்குள் களமிறங்கியிருக்கும் ஆர்யா, கெளதமின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா பிள்ளை ஆகியோர் டீசன்ட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கெளதமின் குழந்தையாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் ஆழியா, சுட்டித் தனங்கள் தாண்டி அவரின் கதாபாத்திரத்திற்குத் தேவையானவற்றை செய்து அசத்தியிருக்கிறார். கெளதமுக்கு உதவியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன், மரியம் ஜார்ஜ், ‘சார்பட்டா’ முத்துக்குமார் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக, மரியம் ஜார்ஜ் பீட்டர் பாண்டியனாகத் தோன்றி சுறுசுறுப்பாகத் தனது கதாபாத்திரத்தை நகர்த்தியிருக்கிறார். மற்றொரு பக்கம் தலைவாசல் விஜய், ஜான் கொக்கன் ஆகியோர் வழக்கம் போலத் தங்களின் டிரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்குத் தேவையானவற்றை கொடுத்திருக்கிறார்கள்.
‘சார்பட்டா’ முத்துக்குமாருக்கு கட்டியல் கிராமத்தில் நிகழ்ந்ததாக விரியும் சோக பிளாஷ்பேக், முதலாளிகளின் ஆதிக்கத்தை வழக்கமான டெம்ப்ளேட்டில் பேசுகிறது. அதுமட்டுமன்றி, கட்டியல் கிராமத்தில் இப்படியான திகில் சூழலுக்குக் காரணம் என்ன என்பதை விவரிக்கும் பிளாஷ்பேக்கின் நிலையும் பரிதாபம்தான். ஏற்கெனவே நாம் பார்த்து சோர்ந்துபோன கிளிஷேவாகவே அந்தக் கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. கட்டியல் கிராமத்தில் நிகழ்ந்த சில பிரச்னைகளால் மாற்றம் பெறும் மக்களைப் பற்றிய பல விஷயங்கள் கடைசி வரை புதிராகவே நகர்ந்திருக்கிறது. அழுத்தமில்லாமல் எழுதப்பட்ட திரைக்கதையும் 6 எபிசோடுகளில் ஆங்காங்கே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது போன்று வழக்கமான பல விஷயங்கள் அட்டெண்டன்ஸ் போட்டுக் கொண்டே தொடர்வதால் அடுத்த சீசனுக்கான லீட் கொடுத்தாலும் பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமலே முடிந்திருக்கிறது தொடர்.
சிவக்குமார் விஜயன் தனது ஒளிப்பதிவால் வில்லேஜின் திகில் நிலங்களுக்கு பார்வையாளர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். இரவு நேரத்திற்கேற்ப லைட்டிங்கைச் சரியான வடிவில் அமைத்து விஷுவல்களின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். ஆனால், கட்டியல் மக்களுக்கான ஒப்பணையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உடல்நிலை மாற்றங்களைக் காட்சிப்படுத்துவதற்காக அமைந்துள்ள எஸ்.எஃப்.எக்ஸ் வேலைகளில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. குகை செட்டப் உள்ளிட்ட பல விஷயங்கள் பிளாஸ்டிக் பாணியில் இருப்பதால் திகில் உணர்வும் எட்டிப் பார்க்க மாட்டேன் என்கிறது. 90களில் வந்த சீரியல்களில்கூட இதைவிட தரம் இருந்த உணர்வே மிஞ்சுகிறது. கிராபிக்ஸிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பிண்ணனி இசை பிளஸ். ஆங்காங்கே திகிலூட்டுவதாக வருகிற டைட்டில் பாடல் டாப் ரகம். இதுமட்டுமன்றி பின்னணி ஒலிக்கலவையும் இரவு நேர அசல் உணர்வை நம்மிடையே கடத்துகிறது.
கிளேஷேக்களைத் தவிர்த்து மேக்கிங்கில் இன்னும் மெருகேற்றியிருந்தால் இந்த வில்லேஜ் நிச்சயமாக கவனத்தை ஈர்த்திருக்கும்.
+ There are no comments
Add yours