என்னை நேசிக்க வைத்ததற்கு நன்றி – அபர்ணாதாஸ் உருக்கமான பதிவு!
02 டிச, 2023 – 13:30 IST

தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். அதையடுத்து டாடா என்ற படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் அபர்ணாதாஸ்.
87 வயதாகும் மலையாள நடிகை சுபலட்சுமி வயது மூப்பு காரணமாக மரணமடைந்ததை அடுத்து அவருடன் படப்பிடிப்பின் போது தான் நடனமாடிய வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் அபர்ணா.
அதில், ‛‛இந்த வீடியோவை இப்போதுதான் போஸ்ட் செய்ய வேண்டும் என்று தோன்றியது. உங்களைப் பற்றிய இந்த செய்தி வெளியானதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். தனது கடைசி நாள் வரை வேலை செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு வலிமையான பெண் நீங்கள். கடைசியாக உங்களுடன் பேசிய போது சீக்கிரமே உடலை சரி செய்து கொண்டு வேலைக்கு திரும்புவதாக சொன்னீர்கள். அந்த அளவுக்கு 87 வயது வரை பிசியாக சினிமாவில் நடித்து வந்தீர்கள். கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் உழைத்தீர்கள். இது உங்களுக்கான ஓய்வெடுக்கும் நேரமாக அமைந்திருக்கிறது.
என் வாழ்க்கைக்கு வந்து என்னை நேசிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி. உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் அபர்ணா தாஸ்.
நடிகை சுபலட்சுமி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்ர நடிகையாக வலம் வந்தவர்.
+ There are no comments
Add yours