Joe Movie Review: `காதல், திருமணம், வாழ்க்கை' – ஒரு ஆணின் பயணத்தைச் சொல்லும் `ஜோ' ஈர்க்கிறதா?

Estimated read time 1 min read

கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கிறார் ரியோ. தன் உடன் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மாளவிகா மனோஜைத் துரத்தித் துரத்தி காதலிக்கிறார்.

ஒருகட்டத்தில் மாளவிகாவும் காதலுக்குச் சம்மதிக்கிறார். மறுபுறம் இன்னொரு கதையில், ரியோவுக்கும் பவ்யா த்ரிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. மாளவிகாவுடனான ஜோவின் காதல் என்ன ஆனது, பவ்யாவை ஏன் ஜோவைத் திருமணம் செய்கிறார் போன்ற கேள்விகளுக்கான பதில்களைச் சொல்கிறது அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம். என் இயக்கியுள்ள ‘ஜோ’ திரைப்படம்.  

Joe Movie Review

படத்தின் மொத்த தொழில்நுட்ப ஆக்கத்திலும் பிரேமம் போன்ற சமகால மலையாளப் படங்களில் தாக்கத்தைக் காண முடிகிறது. ஆனாலும், மொத்த தொழில்நுட்பக் குழுவும் அட்டகாசமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். ராகுல் கேஜி விக்னேஷின் ஒளிப்பதிவில் கேமராவின் சின்ன சின்ன அசைவுகள், அளவான க்ளோசப் மற்றும் ஹெலி கேம் ஷாட்களும் படத்திற்கான தன்மையைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது. வருண் கே.ஜி-யின் படத்தொகுப்பில் இன்டர்கட்களாலும் கச்சிதமான் கட்களும் முதற்பாதியை செரிவாய்த் தந்திருக்கிறார். இரண்டாம் பாதியை இன்னுமே நேர்த்தியாக எடிட் செய்திருக்கலாம்.

சித்து குமாரின் இசையில், யுவன்ஷங்கர் ராஜா பாடிய ‘ஒரே கனா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. ஏனைய பாடல்கள் ஈர்க்கவுமில்லாமல் தொந்தரவையும் தராமல் நகர்கிறது. ஆனால், சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது. வசனங்களும் நடிப்பும் சோபிக்கத் தவறிய சில காட்சிகளில் பின்னணி இசைதான் கைகொடுத்திருக்கிறது. ஶ்ரீகாந்த் சுந்தர், சுகுமார் நல்லகொண்ட ஆகியோரின் ஒலி வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.

Joe Movie Review

பள்ளி, கல்லூரி, திருமண வாழ்க்கை என மூன்று பருவங்களையும், காதலின் குதூகலம், அதற்கு பின்னான காதல் தோல்வி, திருமண வாழ்க்கையின் கசப்பு என பல உணர்வுகளையும் நேர்த்தியாக தன் தோளில் தாங்கிப் பயணித்து, தன் தேர்வுக்கு நியாயம் செய்திருக்கிறார் ரியோ. உருக்கமான காட்சிகளிலும் மாஸான காட்சிகளிலும் மட்டும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். வழக்கமான கல்லூரி காதலி கதாபாத்திரமாக வந்தாலும், அக்கதாபாத்திரத்திற்கான தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் தமிழில் அறிமுகமாகியிருக்கும் மலையாள நடிகர் மாளவிகா மனோஜ். மற்றொரு பிரதான கதாபாத்திரமாக வரும் பவ்யா த்ரிகா, நடிக்க போராடுகிறார். சில காட்சிகளில் மட்டுமே வெல்கிறார்.

நண்பர்களில் அன்புதாசன் தன் ஒன்லைன் காமெடிகளால் முதற்பாதியில் ரகளை செய்கிறார். மற்றொரு நண்பராக வரும் ஏகனின் கதாபாத்திரம் திரைக்கதையில் துருத்திக்கொண்டு நின்றாலும், தன் பக்குவமான நடிப்பால் அதை சமன் செய்ய முயல்கிறார். சார்லி தன் முதிர்ச்சியான நடிப்பைத் தந்து, இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்கிறார்.

Joe Movie Review

கல்லூரி நண்பர்கள், கண்டதும் காதல், துரத்தும் நாயகன், மறுக்கும் நாயகி, உதவும் நண்பர்கள், இறுதியில் சம்மதிக்கும் காதலி என புதுமையில்லாமல் நகரும் முதற்பாதி திரைக்கதையை, ரசிக்க வைக்கும் தொழில்நுட்ப ஆக்கமும், சிரிக்க வைக்கும் சில ஒன்லைன் காமெடிகளும் காப்பாற்றுகின்றன. படம் முழுவதுமே அதிரடியான திருப்பங்களும், உணர்வுப்பூர்வமான உச்சங்களும் நிறைய இருந்தாலும், அதற்கு நியாயம் செய்யும் படியான தெளிவான கதாபாத்திர வடிவமைப்பும், ஆழமான திரைக்கதையும் இல்லாததால், அவை எல்லாமே வெறும் காட்சிகளாக மட்டுமே ஓடுகிறது. இந்தச் சரிவை கதாபாத்திரங்களின் நடிப்பு ஓரளவிற்குச் சரி செய்கிறது.

பள்ளியிலிருந்து தொடங்கி, கல்லூரி வாழ்க்கை, காதல், தோல்வி, கசப்பான திருமணம், வாழ்க்கையைப் புதுப்பித்தல் என ஒரு ஆணின் பெரிய பயணத்தையே கொண்டுள்ளது கதை. இந்தப் பயணத்திற்கு தேவையான முக்கிய புள்ளிகளும் கச்சிதமாக ஒரு சினிமாவிற்கு ஏற்றவகையில் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அப்புள்ளிகளை இணைக்கும் திரைக்கதைதான் அழுத்தமில்லாமல் அந்தரத்தில் மிதக்கிறது.

Joe Movie Review

தேவையே இல்லாத ஹீரோயிசக் காட்சிகள், பழக்கப்பட்ட சில காட்சிகள், அபத்தமான அறிவுரைகள் என அடிமேல் அடி விழுந்து, ஒருவழியாக நடகத்தன்மையான இறுதிக்காட்சியில் முட்டி நிற்கிறது படம். பார்த்து பழகிய வழக்கமான கதையை, யூகிக்கக் கூடிய அழுத்தமில்லாத திரைக்கதையால் படமாக்கி, கவனிக்கத்தக்க தொழில்நுட்பம், கதாபாத்திரங்களின் நடிப்பால் தப்பிக்கிறான் இந்த ‘ஜோ’.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours