கொச்சி: பழம்பெரும் மலையாள நடிகை சுப்புலட்சிமி காலமானார். அவருக்கு வயது 87.
1980ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுப்புலட்சுமி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாளம் தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ’ராமன் தேடிய சீதை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் தவிர்த்து ஏராளமான விளம்பரப் படங்களிலும் சுப்புலட்சுமி நடித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும், கர்நாடக இசைக்கலைஞராகவும், ஓவியராகவும் இருந்து வந்தார்.
மலையாளத்தில் வெளியான ‘கல்யாணராமன்’, ‘பாண்டிப்படா’, ‘நந்தனம்’ ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. ’இன் தி நேம் ஆஃப் காட்’ என்ற ஆங்கில படத்திலும் சுப்புலட்சுமி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் அகில இந்திய வானொலியின் முதல் பெண் இசையமைப்பாளர் சுப்பலட்சுமி ஆவார். 65க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
நேற்று (நவ.30) இரவு கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக சுப்புலட்சுமி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்புலட்சுமிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.