நாயகி இந்துஜா ரவிச்சந்திரன் பாவமான முகபாவனைகளால் நம்மிடம் இரக்கத்தை வேண்டுகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக வரும் ரமா ராஜேந்திரன், மகளாக வரும் பிரார்த்தனா நாதன் இருவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதிலும் எம்.எஸ்.பாஸ்கரை எதிர்த்துப் பேசும் காட்சிகளில் இருவருமே அப்ளாஸ் அள்ளுகின்றனர். இளவரசு, அவ்வப்போது தலைக்காட்டிவிட்டு போனாலும் அதை அழுத்தமாகச் செய்திருக்கிறார். தவிர, படத்தில் இடம்பெற்றிருக்கும் பாப் மார்லி, எல்.ஐ.சி ஏஜென்ட், சலவைக்கடைக்காரர் போன்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன.
ஒரே வீடு, இரண்டு அலுவலகம் எனத் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய வெளியில் நேர்த்தியான ஷாட் டிவிஷன்களால் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி. இதில் பார்க்கிங் பகுதியிலிருந்து வீட்டை முழுமையாகக் காட்டி நகரும் கேமரா கோணங்கள் ‘ஹாரர்’ படத்துக்கான பயத்தைத் தருகின்றன. உடைந்த கார் கண்ணாடி வழியே புகுந்து வெளியே வரும் கேமரா, அதன் வழியாகவே வரும் ‘இடைவேளை’ ஷாட், படத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவுக்கு ஒரு சாம்பிள். இந்த ஒளிப்பதிவுக்கு ஏற்ற ஒலிக்கோர்வையும் படத்துக்குக் கச்சிதமாகத் துணை நிற்கிறது. நெடுநாள்களுக்குப் பிறகு பின்னணி இசையில் பழைய பன்னீர்செல்வமாக சாம் சி.எஸ்-ஐ காணமுடிகிறது. காட்சியின் தீவிரத் தன்மையை வயலின் வழியே சொல்லி விடுகிறார். இருந்தும் பாடல்களும், பாடல் வரிகளும் பெரிதாக ஈர்க்கவில்லை.
+ There are no comments
Add yours