Jigarthanda Double X: "`இறைவி' டைம்ல விஜய் சொன்னது இப்ப கார்த்திக் சுப்புராஜ் மூலமா…"- S.J.சூர்யா

Estimated read time 1 min read

தீபாவளி ரிலீஸாக வெளியான `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

சினிமாவின் பலத்தை எடுத்துரைக்கும் வகையில் மக்களுக்குப் பிடித்தமான சில விஷயங்களுடன் அரசியலைக் கலந்து இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இத்திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நவீன் சந்திரா, விது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.

இந்த விழாவில் வில்லன் ரத்னவாக மிரட்டியிருந்த நவீன் சந்திரா பேசுகையில், “‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தை பார்த்துட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சார் இயக்கத்துல நடிக்கமாட்டோமான்னு நினைச்சிருக்கேன். இன்னைக்கு அது நடந்திருக்கு. க்ளைமாக்ஸ்ல லாரன்ஸ் சாரோட நடிப்பைப் பார்த்து எனக்கே என் கதாபாத்திரம் மேல கோபம் வந்திருச்சு. அந்த அளவுக்கு நான் எமோஷனல்லாக கனெக்ட் ஆகிட்டேன்” எனப் பேசினார்.

இதனையடுத்து வந்து பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “தியேட்டர்ல இந்தப் படத்தைப் பார்க்கும் போது இந்த மாதிரியான வரவேற்புக்குத்தானே வேலைப் பார்த்தோம்ன்னு ஒரு திருப்தி வந்துச்சு. எனக்கு இந்தப் படத்துல வேலைப் பார்த்தது ஹோம் கிரவுண்ட்ல ஒரு பிளேயர் விளையாடுற மாதிரியான ஃபீல்தான்” எனக் கூறி விடைபெற்றார்.

Santhosh Narayanan

தயாரிப்பாளரும் கார்த்திக் சுப்புராஜின் உறவினருமான கார்த்திகேயன் சந்தானம், “எனக்கு மகன் பொறந்தப்போ எவ்ளோ சந்தோஷமாக இருந்ததோ அப்படித்தான் இந்தப் படத்தை தியேட்டர்ல பார்க்கும் போதும் இருந்துச்சு. 9வது படிக்கும் போது கார்த்திக் சுப்புராஜோட தங்கச்சியை லவ் பண்ணேன். அதுக்குப் பிறகு அந்த உறவு இங்க வரைக்கும் நீண்டிருக்கு. ‘பீட்சா’ படத்தோட வெற்றி எங்க குடும்பத்தோட தலையெழுத்தையே மாத்துச்சு” எனப் பேசி முடித்தார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் இப்படி, அப்படின்னு சொல்லக்கூடாதுன்னு சொல்வார். அவர் எப்பவும் ‘நம்ம பேசக் கூடாது நம்ம படம்தான் பேசணும்’ன்னு சொல்ற மாதிரிதான். அதே மாதிரி இப்போ பேசுது. ‘இறைவி’ திரைப்படம் மூலமாக எனக்கு மறுபடியும் நடிகன் வாழ்க்கை கிடைச்சது. நடிகர் விஜய், ‘நண்பா, இன்னும் கொஞ்ச தூரம்தான் தாவிப் பிடிச்சிருங்க’ன்னு சொல்லியிருந்தார். அந்த மாதிரி தாவி பிடிக்கறதுக்கான இடத்தை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கார். நடிகர் நவீன் சந்திராகிட்ட நடிகர் ரகுவரனிடம் பார்க்கிற மாதிரியான தன்மையைப் பார்க்குறேன். ரொம்ப நல்லா நடிச்சிட்டு வர்றார். சில படங்கள் கமர்ஷியலாக நல்ல வசூல் வரும். ஆனா, விமர்சனத்துல குறைவாக இருக்கும். சில படங்கள் வசூல் குறைவாக இருக்கும். ஆனா, நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கும். இந்த இரண்டு விஷயத்தையும் கார்த்திக் சுப்புராஜ் சரியாக பேலன்ஸ் பண்ணியிருக்கார்” என்றார்.

எஸ்.ஜே.சூர்யா

இதனையடுத்து வந்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “இந்த மேடை எனக்கு மிகவும் சந்தோஷமான மேடை. நம்ம மனசுதான் குருன்னு சொல்வாங்க. அந்த மாதிரி என் மனசு சொன்ன ஆள், கார்த்திக் சுப்புராஜ். அவர்கிட்ட அடிக்கடி கால் பண்ணி ‘ஜிகர்தண்டா 2’ பண்ணலாம்ன்னு கேட்டுட்டே இருப்பேன். அந்த படம் இப்போ நடந்துருச்சு. என்னை வேற மாதிரியான லாரன்ஸாக இந்தப் படத்துல மாத்தியிருக்கார். இதுவரைக்கும் இருந்த லாரன்ஸ் வேற, இனிமேல் வரப் போற லாரன்ஸ் வேற. இந்தப் படத்தோட ஷூட்டிங் பொழுதுல மழை வந்துட்டு இருக்கும். கார்த்திக் சுப்புராஜ், ‘ஸ்டார்ட் கேமரா, ஆக்‌ஷன்’ன்னு சொன்னதும் மழை நின்னுடும். இந்தப் படத்துக்கு கடவுளோட ஆசீர்வாதம் எப்பவும் இருந்துருக்கு. என் மனைவி, நவீன் சந்திராவோட நடிப்பைப் பார்த்துட்டு ‘என்னங்க, அரக்கன் மாதிரி நடிச்சிருக்காரு’ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு சட்டாணியாக நடிச்ச நடிகர் விதுவும் நல்லா நடிச்சிருக்கார்.

விது, சட்டாணி கதாபாத்திரத்துக்காக குளிர்ல உடம்பு முழுவதும் சேற்றைப் பூசிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்சார். ரஜினி சார் எங்களைக் கூப்பிட்டு பாராட்டினார். அதுக்கு பிறகு அவுங்க குழுவுல இருந்து எனக்கு கால் பண்ணி ‘சட்டாணியாக நடிச்சவர் யார்’ன்னு அவரோட பேர்லாம் கேட்டு லெட்டர்ல குறிப்பிட்டாங்க. இந்தப் படத்தை பத்தின சில மீம்ஸ்லாம் எனக்கு வீட்டுல காமிச்சாங்க. அந்த மீம்ஸ்ல எஸ்.ஜே.சூர்யா படத்துல லாரன்ஸ் நல்லா நடிச்சிருக்கார்ன்னு மீம் வந்திருந்தது. இதெல்லாம் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

ராகவா லாரன்ஸ்

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் வந்த சமயத்துல ஆனந்த விகடன் மூலமாக ‘அறம் செய்ய விரும்பு’ திட்டத்திக்கு 1 கோடி ரூபாய் கொடுத்திருந்தோம். இப்போ சமீபத்துல என் ரசிகர் என்கிட்ட அவரோட கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுத்தார். அதுக்கு பிறகு எங்க கல்யாணம் நடக்குதுன்னு கேட்டேன். அதுக்கு, ‘பத்திரிக்கை என் நண்பன் பிரஸ் மூலமாக அடிச்சது. மண்டபத்துக்கு ரொம்ப செலவாகும். கோயில்ல கல்யாணம் பண்ணாலும் கொஞ்சம் செலவாகும்.

என் வீட்லதான் கல்யாணத்தை வைக்கப் போறேன். அங்க வரமுடியுமா’ன்னு கேட்டார். அதுக்கு பிறகுதான் ஒரு விஷயம் யோசிச்சேன். கூடிய விரைவில் ஒரு கல்யாண மண்டபம் கட்டப் போறேன். அதுல என் ரசிகர்கள் இலவசமாகத் திருமணம் நடத்திக்கலாம். இடம் பார்த்து வச்சுட்டேன். எங்க அம்மா பெயர்ல கூடிய சீக்கிரத்துல அந்த மண்டபத்தை ஆரம்பிச்சுருவேன்” என்று உறுதியளித்தார்.

Karthik Subbaraj

இந்த நிகழ்வில் இறுதியாக வந்து பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இந்தப் படத்துக்கான விதை லாரன்ஸ் மாஸ்டர் போட்டது. இந்தக் கதை எங்க எல்லோரையும் தேர்ந்தெடுத்திருக்கு. கிட்டத்தட்ட 4.5 வருஷம் நம்ம படத்தை எப்போ தியேட்டர்ல பார்ப்போம்ன்னு டிப்ரஸ்ஷன்ல இருந்தேன். அதுக்கெல்லாம் பிறகு இப்போ ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வந்திருக்கு. இந்தப் படம்தான் சரியான கம்பேக்ன்னு தோணுச்சு” எனப் பேசியவர் படக்குழுவினருக்கு நன்றி கூறி விடைபெற்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours